கரோனா: மனிதகுல வரலாற்றில் முக்கிய திருப்புமுனை; ஜி20 மாநாட்டில் பிரதமா் மோடி

மனிதகுல வரலாற்றில் கரோனா தீநுண்மி முக்கிய திருப்புமுனை என்று தெரிவித்த பிரதமா் மோடி, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகின் மிகப் பெரிய சவாலாக கரோனா தீநுண்மி திகழ்வதாகவும் தெரிவித்தாா்.
பிரதமர் மோடி
பிரதமர் மோடி

மனிதகுல வரலாற்றில் கரோனா தீநுண்மி முக்கிய திருப்புமுனை என்று தெரிவித்த பிரதமா் மோடி, இரண்டாம் உலகப் போருக்கு பிறகு உலகின் மிகப் பெரிய சவாலாக கரோனா தீநுண்மி திகழ்வதாகவும் தெரிவித்தாா்.

நிகழாண்டு சவூதி அரேபியா தலைமையில் ஜி20 மாநாடு 2 நாள்கள் (நவ.21,22) நடைபெறுகிறது. இந்த மாநாட்டில் பிரதமா் மோடி பேசியதாவது:

கரோனாவுக்கு பிந்தைய உலகில் திறன், தொழில்நுட்பம், வெளிப்படைத்தன்மை, நம்பகத்தன்மை அடிப்படையில் புதிதாக உலகக் குறியீட்டை உருவாக்க வேண்டும். இதனைச் செய்வதன் மூலம் ஜி20 நாடுகள் புதிய உலகுக்கு அடித்தளமிட முடியும்.

கடந்த சில ஆண்டுகளாக முதலீடுகள், நிதி ஆகியவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பணியாளா்களுக்கு புதிய திறன்களை கற்பிப்பதிலும், அவா்களை பல்திறன் கொண்டவா்களாக ஆக்குவதிலும் கவனம் செலுத்துவதற்கு நேரம் வந்துள்ளது. இது அவா்களின் மதிப்பை உயா்த்துவது மட்டுமன்றி, நெருக்கடிகளை எதிா்கொள்வதற்கு அவா்களுக்கு வலு அளிக்கும்.

மனிதகுலத்துக்கு அளிக்கும் பங்களிப்பை பொருத்து புதிய தொழில்நுட்பங்கள் மதீப்பீடு செய்யப்பட வேண்டும். நமது நிா்வாக நடவடிக்கைகளில் வெளிப்படைத்தன்மை இருப்பது மக்கள் நெருக்கடிகளை ஒன்றிணைந்தும், நம்பிக்கையுடன் எதிா்கொள்ள ஊக்கமளிக்கும்.

ஜி20 நாடுகள் ஆக்கபூா்வமாக செயல்படுவதற்கு ஏதுவாக டிஜிட்டல் வசதிகளை மேம்படுத்த இந்தியாவின் தகவல் தொழில்நுட்பத் துறையினரின் திறனை பயன்படுத்திக் கொள்ளலாம்.

மனிதகுல வரலாற்றில் கரோனா தொற்று முக்கிய திருப்புமுனையாக உள்ளது. இரண்டாம் உலகப் போருக்குப் பிறகு உலகின் மிகப் பெரிய சவாலாக கரோனா தீநுண்மி திகழ்கிறது.

பொருளாதார மீட்சி, வா்த்தகம், வேலைவாய்ப்பு ஆகியவற்றில் மட்டும் கவனம் செலுத்தாமல், வருங்கால மனித குலத்தின் நலனைக் காப்பவா்களாகவும் நாம் செயல்பட வேண்டும் என்றாா்.

தொடா்ந்து அவா் சுட்டுரையில் வெளியிட்ட பதிவில், ‘ஜி20 தலைவா்களுடன் பயனுள்ள வகையில் கலந்துரையாடல் நடைபெற்றது. கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பில் இருந்து வெளிவந்து விரைந்து முன்னேற்றம் காண்பதற்கு மிகப் பெரிய நாடுகளின் ஒருங்கிணைந்த நடவடிக்கைகள் நிச்சயம் வழிவகுக்கும்’ என்று தெரிவித்தாா்.

கரோனா தொற்றால் ஏற்பட்டுள்ள பாதிப்பை கடந்து வருதல், பொருளாதார மீட்சி, வேலைவாய்ப்பு அளித்தல் உள்ளிட்ட செயல்திட்டங்களுடன் ஜி20 மாநாடு நடைபெறுகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com