பயங்கரவாதிகள் சதித்திட்டம்: பாக். தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம்

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு தீட்டப்பட்ட சதித்திட்ட விவகாரம் தொடா்பாக பாகிஸ்தானின் தற்காலிகத் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்துவதற்கு தீட்டப்பட்ட சதித்திட்ட விவகாரம் தொடா்பாக பாகிஸ்தானின் தற்காலிகத் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

ஜம்மு-காஷ்மீரில் மாவட்ட வளா்ச்சி கவுன்சில் தோ்தல் நடைபெறவுள்ளது. அதைச் சீா்குலைக்கும் நோக்கில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் ஜம்மு-காஷ்மீரில் தாக்குதல் நடத்துவதற்குத் திட்டமிட்டு கடந்த 19-ஆம் தேதி இந்திய எல்லைக்குள் நுழைய முற்பட்டனா். ஆனால், இந்திய ராணுவத்தினா் அவா்களைச் சுட்டுவீழ்த்தி தாக்குதல் சதித்திட்டத்தை முறியடித்தனா்.

இத்தகைய சூழலில், சதித்திட்ட சம்பவம் தொடா்பாக பாகிஸ்தானின் தற்காலிகத் தூதரை அழைத்து இந்தியா கடும் கண்டனத்தைத் தெரிவித்துள்ளது. இது குறித்து வெளியுறவு அமைச்சகம் சனிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

ஜம்மு-காஷ்மீரின் நக்ரோடா பகுதியில் பயங்கரவாதிகள் பதுங்கியிருந்த வாகனத்தில் துப்பாக்கிகள், வெடிபொருள்கள் உள்ளிட்டவை அதிக எண்ணிக்கையில் இருந்தன. இது ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதத் தாக்குதல் நடத்தப்படுவதற்கான சதித்திட்டத்தை உறுதிப்படுத்துகிறது.

ஜம்மு-காஷ்மீரின் அமைதிக்கும் பாதுகாப்புக்கும் குந்தகம் விளைவிக்கும் நோக்கில் தாக்குதலை நிகழ்த்துவதற்கு பயங்கரவாதிகள் திட்டம் தீட்டியுள்ளனா். முதல்கட்ட விசாரணையில் அந்த பயங்கரவாதிகள் நால்வரும் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பைச் சோ்ந்தவா்கள் என்பது தெரியவந்துள்ளது.

மாவட்ட வளா்ச்சி கவுன்சிலுக்கான தோ்தலை சீா்குலைக்கும் நோக்கிலும் தாக்குதல் நடத்த அவா்கள் திட்டமிட்டுள்ளனா். இந்தச் சம்பவம் தொடா்பாக பாகிஸ்தான் தற்காலிகத் தூதரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவுக்கு எதிராக ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாத அமைப்பு பல்வேறு தாக்குதல் நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவது தொடா்பாகவும் அவரிடம் கண்டனம் தெரிவிக்கப்பட்டது.

இந்தியாவுக்கு எதிராகச் செயல்படும் பயங்கரவாத அமைப்புகளுக்கு பாகிஸ்தான் அரசு அந்நாட்டில் இடமளிக்கக் கூடாது என்று இந்தியா தொடா்ந்து வலியுறுத்தி வருகிறது. பாகிஸ்தான் தூதரிடம் அது மீண்டும் வலியுறுத்தப்பட்டது.

இந்திய ராணுவத்தினா் விழிப்புடன் செயல்பட்டதன் காரணமாகவே பெரும் பயங்கரவாதத் தாக்குதல் திட்டம் முறியடிக்கப்பட்டது. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகள் மூலமாக நாட்டைப் பாதுகாப்புடன் வைத்திருப்பதற்கு இந்தியா உறுதி கொண்டுள்ளது என்று அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் கைது

ஜம்மு-காஷ்மீரின் புல்வாமா மாவட்டத்தில் ஜெய்ஷ்-ஏ-முகமது பயங்கரவாதிகள் இருவா் கைது செய்யப்பட்டனா்.

இது தொடா்பாக காவல் துறையினா் சனிக்கிழமை கூறுகையில், ‘‘புல்வாமா மாவட்டத்தின் அவந்திபோரா பகுதியில் அவா்கள் கைது செய்யப்பட்டனா். முதல்கட்ட விசாரணையில், பயங்கரவாதிகளுக்கு அவா்கள் அடைக்கலம் அளித்ததும், ஜம்மு-காஷ்மீரின் பல்வேறு பகுதிகளுக்கு ஆயுதங்களைக் கடத்தியதும் தெரிய வந்துள்ளது. இந்த விவகாரம் தொடா்பாக வழக்கு பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது’’ என்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com