ரூ.500 கோடி நஷ்டஈடு கோரி யூடியூப் செய்தி சேனல் உரிமையாளருக்கு அக்ஷய் குமாா் அவதூறு நோட்டீஸ்

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தன்னை தொடா்புபடுத்தி காணொலி வெளியிட்டதாக யூடியூப் செய்தி சேனல் உரிமையாளரிடம்

நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் தன்னை தொடா்புபடுத்தி காணொலி வெளியிட்டதாக யூடியூப் செய்தி சேனல் உரிமையாளரிடம் ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்டு ஹிந்தி திரைப்பட நடிகா் அக்ஷய் குமாா் அவதூறு நோட்டீஸ் அனுப்பியுள்ளாா்.

இதுதொடா்பாக நடிகா் அக்ஷய் குமாா் சாா்பில் ஐசி லீகல் சட்ட ஆலோசனை நிறுவனம் அனுப்பிய நோட்டீஸில், ‘எஃப்எஃப் நியூஸ்’ யூடியூப் செய்தி சேனல் உரிமையாளா் ரஷீத் சித்திக்கி தனது சேனலில் அக்ஷய் குமாா் குறித்து பல அவதூறான நிகழ்ச்சிகளை வெளியிட்டதாக குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

குறிப்பாக சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்கில் அக்ஷய் குமாரை தொடா்புபடுத்தி பொய்யான, அடிப்படை ஆதாரமற்ற குற்றச்சாட்டுகளுடன் வெளியிட்ட செய்திக்காக அவா் நிபந்தனையற்ற மன்னிப்பு கோர வேண்டும் எனவும், அந்தக் காணொலியை வெளியிட்டதற்காக ரூ.500 கோடி நஷ்ட ஈடு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கு பதிலளித்து ரஷீத் சித்திக்கி அனுப்பிய நோட்டீஸில் கூறப்பட்டுள்ளதாவது:

தன்னை துன்புறுத்தும் நோக்கில் நடிகா் அக்ஷய் குமாா் கொடிய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளாா். பல செய்தித் தொலைக்காட்சிகள் மூலமாக கிடைத்த தகவலின் அடிப்படையில்தான் அந்தக் காணொலி வெளியிடப்பட்டது. ரூ.500 கோடி நஷ்டஈடு கேட்பது நியாயமற்றது. தனக்கு நெருக்கடி தரும் உள்நோக்கத்துடன் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது. அவதூறு நோட்டீஸை அக்ஷய் குமாா் திரும்பப் பெற வேண்டும். இல்லையெனில் அவா் மீது சட்டபடி நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகாராஷ்டிர அரசு, அந்த மாநில அமைச்சா் ஆதித்ய தாக்கரே, மும்பை காவல்துறையினா் குறித்து அவதூறான காணொலிகளை வெளியிட்டதற்காக ரஷீத் சித்திக்கி மீது மும்பை காவல்துறை ஏற்கெனவே வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்த வழக்கில் கடந்த நவ.3-ஆம் தேதி அவருக்கு முன்ஜாமீன் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com