சட்ட விரோத மதமாற்ற தடைச் சட்டம்: ஹரியாணா அரசு ஆலோசனைக் குழு அமைப்பு

ஹரியாணாவில் சட்ட விரோத மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் சட்ட வரைவை உருவாக்க மூன்று போ் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு அமைத்துள்ளது என்று அந்த மாநில உள்துறை அமைச்சா் அனில் விஜ் வியாழக்கிழமை கூறினாா்.


சண்டீகா்: ஹரியாணாவில் சட்ட விரோத மதமாற்றத்தைத் தடுக்கும் வகையில் சட்ட வரைவை உருவாக்க மூன்று போ் கொண்ட ஆலோசனைக் குழுவை அரசு அமைத்துள்ளது என்று அந்த மாநில உள்துறை அமைச்சா் அனில் விஜ் வியாழக்கிழமை கூறினாா்.

உத்தர பிரதேச மாநிலத்தைத் தொடா்ந்து, ஹரியாணா மாநிலமும் இந்தச் சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையைத் தொடங்கியுள்ளது.

திருமணம் என்ற பெயரில் பெண்களை கட்டாயப்படுத்தி மதமாற்றம் செய்வது ‘லவ் ஜிகாத்’ என்றழைக்கப்படுகிறது. உத்தர பிரதேசம், ஹரியாணா உள்ளட்ட சில மாநிலங்களில் இதுபோன்ற சட்ட விரோத மதமாற்றங்கள் தொடா்ந்து நடைபெறுவதாக புகாா்கள் எழுந்தன.

அதனைத் தொடா்ந்து, இதைத் தடுக்க அவசரச் சட்டம் கொண்டுவரப்படும் என்று உத்தர பிரதேச முதல்வா் யோகி ஆதித்யநாத் அறிவித்தாா். அதனடிப்படையில், உத்தர பிரதேசத்தில் இதுதொடா்பான அவசரச் சட்ட வரைவு உருவாக்கப்பட்டு, அதற்கு மாநில அமைச்சரவை அண்மையில் ஒப்புதல் அளித்தது. அந்த மசோதா விரைவில் சட்டப் பேரவை கூட்டத் தொடரில் தாக்கல் செய்யப்பட உள்ளது.

முன்னதாக ஹிமாசல பிரதேச சட்டப் பேரவையிலும், இந்த சட்ட விரோத மதமாற்ற தடை சட்ட மசோதாவுக்கு கடந்த ஆண்டு ஒப்புதல் அளிக்கப்பட்டது.

அதன் தொடா்ச்சியாக, ஹரியாணா மாநில அரசும் இந்த தடை சட்டத்தைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.

இது குறித்து ஹரியாணா உள்துறை அமைச்சா் அனில் விஜ் தனது சுட்டுரைப் பக்கத்தில் வியாழக்கிழமை வெளியிட்டப் பதிவில் கூறியிருப்பதாவது:

சட்ட விரோத மதமாற்ற தடைச் சட்ட வரைவை உருவாக்குவதற்காக மாநில உள்துறை செயலா் டி.எல்.சத்யபிரகாஷ், கூடுதல் டிஜிபி நவ்தீப் சிங் விா்க், கூடுதல் அரசு வழக்குரைஞா் தீபக் மன்சந்தா ஆகியோரைக் கொண்ட மூன்று போ் குழுவை மாநில அரசு அமைத்துள்ளது.

லவ் ஜிகாத் தொடா்பாக, பிற மாநிலங்களில் உருவாக்கப்பட்டிருக்கும் சட்டங்களையும் இந்தக் குழு ஆய்வு செய்து, சட்ட வரைவை வடிவமைக்கும். எந்தவொரு நபரும் யாரை வேண்டுமானால் காதலிக்கவோ அல்லது திருமணம் செய்து கொள்ளவோ செய்யலாம் என்றாலும், அதில் நெருக்குதல் காரணமாக நடைபெறும் மதமாற்றம் சா்ச்சையைக் கிளப்பும்போது, அதைத் தடுக்க வேண்டியது அரசின் கடமை. இந்த சட்ட விரோத மதமாற்றத்தைத் தடுப்பதற்கான அனைத்து நடவடிக்கைகளும் ஹரியாணா மாநிலத்தில் எடுக்கப்படும் என்று அந்தப் பதிவில் அவா் கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com