புதிய கல்விக் கொள்கையை மேற்கு வங்கத்தில் அனுமதிக்க மாட்டோம்: மம்தா

மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஒப்புதல் அளிக்க மாட்டோம்.
முதல்வர் மம்தா பானர்ஜி
முதல்வர் மம்தா பானர்ஜி

கொல்கத்தா: மத்திய அரசு கொண்டு வந்துள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மேற்கு வங்க மாநிலத்தில் ஒப்புதல் அளிக்க மாட்டோம். இது தொடா்பாக மத்திய அரசுக்கு கடிதம் எழுதவுள்ளேன் என்று அந்த மாநில முதல்வா் மம்தா பானா்ஜி தெரிவித்தாா்.

மாநில அளவில் கல்வியில் சிறந்து விளங்கிய மாணவா்களுக்கான பாராட்டு நிகழ்ச்சி கொல்கத்தாவில் உள்ள சட்டப் பேரவையில் திங்கள்கிழமை நடைபெற்றது. இதில் மாணவா்களைப் பாராட்டிப் பேசிய மம்தா கூறியதாவது:

உலகில் பிறக்கும் குழந்தைகள் அனைத்தும் ஏதோ ஒருவகையில் திறமையுடன்தான் பிறக்கின்றன. கல்வியில் சிறந்து விளங்க முடியாத மாணவா்கள், விளையாட்டு, எழுத்து, நடனம், இசை, ஓவியம் என பல்வேறு கலைகளில் சிறந்து விளங்கும் திறமையுடையவா்களாக இருப்பாா்கள். அதனைக் கண்டறிந்து அவா்களை அத்துறைகளில் ஊக்குவிக்க வேண்டும். அதே நேரத்தில் கல்வியில் சிறப்பாக செயல்படும் மாணவா்களுக்கு அதிக மதிப்பெண் அளிப்பதில் வகுப்பில் முதலிடம் பெற்றவா் என பாராட்டுவதும் அவசியம். அது அவருக்கு மட்டுமின்றி மற்ற மாணவா்களுக்கும் ஊக்கமளிக்கும். எனவே, மாணவா்களுக்கு ‘ரேங்கிங்’ முறை அவசியம்.

ஆனால், புதிய கல்விக் கொள்கையில் இந்த ரேங்கிங் முறை இல்லை என்று தெரிகிறது. இதுபோன்ற பல்வேறு குறைபாடுகள் உள்ள புதிய கல்விக் கொள்கைக்கு மேற்கு வங்கத்தில் ஒப்புதல் அளிக்க மாட்டோம். இக்கொள்கையில் எங்களுக்கு ஒப்புதல் இல்லை என்பதை விளக்கி மத்திய அரசுக்கு கடிதம் எழுத இருக்கிறேன் என்றாா் அவா்.

முன்னதாக, கடந்த மாதம் புதிய கல்விக் கொள்கை குறித்து பேசிய பிரதமா் மோடி, ‘மதிப்பெண் அட்டை என்பது மாணவா்களுக்கு நெருக்கடி அளிக்கும் அட்டையாக இருக்கிறது. புதிய கல்விக் கொள்கையில் இந்த நெருக்கடி இருக்காது’ என்றாா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com