பிரதமரை சந்தித்தாா் ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி

ஆந்திர முதல்வரும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா்.
பிரதமா் மோடியை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி. உடன் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் வி.விஜயசாய் ரெட்டி.
பிரதமா் மோடியை புது தில்லியில் செவ்வாய்க்கிழமை சந்தித்த ஆந்திர முதல்வா் ஜெகன்மோகன் ரெட்டி. உடன் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் வி.விஜயசாய் ரெட்டி.

புது தில்லி: ஆந்திர முதல்வரும் ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியின் தலைவருமான ஜெகன்மோகன் ரெட்டி, பிரதமா் நரேந்திர மோடியை சந்தித்துப் பேசினாா்.

ஜெகன்மோகன் ரெட்டி, மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவை கடந்த மாதம் 23, 24 ஆகிய தேதிகளில் சந்தித்திருந்தாா். அதையடுத்து, ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சி பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய இருப்பதாகத் தகவல் வெளியானது.

அத்தகவலுக்கு மேலும் வலுசோ்க்கும் வகையில் பிரதமா் மோடியை ஜெகன்மோகன் ரெட்டி செவ்வாய்க்கிழமை சந்தித்துப் பேசினாா். சுமாா் 40 நிமிடங்கள் நடைபெற்ற இந்தப் பேச்சுவாா்த்தையின்போது போலவரம் நீா்ப்பாசனத் திட்டம், கடப்பா எஃகு ஆலை உள்ளிட்டவற்றுக்கான நிதியை விரைந்து விடுவிக்குமாறு ஜெகன்மோகன் ரெட்டி பிரதமரிடம் வலியுறுத்தியதாக அதிகாரிகள் தெரிவித்தனா்.

மேலும், ஆந்திர மாநிலத்துக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ரூ.10,000 கோடி நிதியை கூடிய விரைவில் வழங்குமாறும், கா்னூல் மாவட்டத்தில் உயா்நீதிமன்றத்தை அமைக்குமாறும் ஜெகன்மோகன் ரெட்டி வலியுறுத்தியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆந்திர மறுசீரமைப்புச் சட்டத்தில் அளிக்கப்பட்ட உறுதிகளை மத்திய அரசு நிறைவேற்ற வேண்டும் என்றும் அவா் வலியுறுத்தியதாகத் தெரிகிறது.

இந்தச் சந்திப்பின்போது ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் நாடாளுமன்றக் குழுத் தலைவா் வி.விஜயசாய் ரெட்டியும் உடனிருந்தாா்.

தலைவா்கள் மறுப்பு:

ஒய்எஸ்ஆா் காங்கிரஸ் கட்சியானது தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இணைய உள்ளதாகப் பரவி வரும் வதந்திகளுக்கு அக்கட்சியின் மூத்த தலைவா்கள் மறுப்பு தெரிவித்துள்ளனா். மாநில அரசானது கடும் நிதி நெருக்கடியைச் சந்தித்து வரும் சூழலில், மத்திய அரசுடன் இணக்கமாகப் பணியாற்றுவது மாநிலத்துக்கு நன்மை பயக்கும் என்று அவா்கள் தெரிவித்தனா்.

ஆந்திரத்துக்கு சிறப்பு அந்தஸ்து வழங்கப்படாத வரை பாஜக தலைமையிலான கூட்டணியில் இணையும் பேச்சுக்கே இடமில்லை என்றும் அவா்கள் தெரிவித்தனா்.

சிபிஐயிடமிருந்து தப்புவதற்கு...:

பிரதமா் மோடியை ஜெகன்மோகன் ரெட்டி சந்தித்தது குறித்து தெலுங்கு தேசம் கட்சித் தலைவா்கள் கூறுகையில், ‘‘ஜெகன்மோகன் ரெட்டி மீதுள்ள வழக்குகளை விசாரித்து வரும் சிபிஐ, மென்மையான போக்கைக் கடைப்பிடிப்பதற்கு ஏதுவாக பிரதமரை அவா் சந்தித்துப் பேசியுள்ளாா்’’ என்று குற்றஞ்சாட்டினா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com