சமூகப் பாதுகாப்பை இழந்துவரும் பெண்கள்

தில்லி நிர்பயா சம்பவத்துக்குப் பின்னர் உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பட்டியலினப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
சமூகப் பாதுகாப்பை இழந்துவரும் பெண்கள்


தில்லி நிர்பயா சம்பவத்துக்குப் பின்னர் உத்தர பிரதேச மாநிலம் ஹாத்ரஸில் பட்டியலினப் பெண் பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது. இந்தியாவில் 2 மணி நேரத்துக்கு ஒரு பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்படுவதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகம் தெரிவித்துள்ள தகவல், மக்களை இன்னும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

பெண்களைத் தெய்வமாக வழிபடும் நாட்டில்,  பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்ந்து அதிகரித்து வருவது வேதனைக்குரியதே. அதிகரித்து வரும் குற்றங்களின் வரிசையில் பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளன. 

தேசிய குற்ற ஆவணக் காப்பகம் அண்மையில் வெளியிட்ட 2019-ஆம் ஆண்டின் குற்றச் சம்பவங்களின் அறிக்கையின்படி பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஓராண்டில் 7.3 சதவீதம் அதிகரித்துள்ளது. தமிழகத்திலும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளின் எண்ணிக்கை 2 சதவீதம் உயர்ந்துள்ளது.

கடந்த 2019-ஆம் ஆண்டு பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பாக 4 லட்சத்து 5,861 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. ஆனால் 2018-ஆம் ஆண்டில் 3 லட்சத்து 78,236 வழக்குகளே பதியப்பட்டிருந்தன. நாட்டிலேயே அதிக அளவில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் நடைபெறும் மாநிலங்களில் உத்தர பிரதேசம் முதலிடத்திலும்,  ராஜஸ்தான் இரண்டாமிடத்திலும், மகாராஷ்டிரம் மூன்றாமிடத்திலும் உள்ளன. இதில் 16-ஆவது இடத்தில் தமிழகம் உள்ளது.

2019-இல் நடைபெற்ற மொத்த குற்றங்களில் உத்தர பிரதேசத்தில் 14.7 சதவீதமும், ராஜஸ்தானில்  10.2 சதவீதமும், மகாராஷ்டிரத்தில் 9.2 சதவீதமும் நிகழ்ந்துள்ளன. இதில் தமிழகத்தில் பதிவான குற்றங்கள் 1.5 சதவீதமே.

பெண்களுக்கு எதிரான குற்றங்களில்  உத்தர பிரதேசத்தில் கடந்தாண்டு 59,853 வழக்குகளும்,  ராஜஸ்தானில் 41,550 வழக்குகளும் பதிவாகியுள்ளன. தமிழகத்தில் 5,934 வழக்குகள் பதியப்பட்டுள்ளன.

44 சதவீதம் உயர்வு:  பாலியல் வன்கொடுமை தொடர்பாக நாடு முழுவதும் பதிவான 32,033 வழக்குகளில் ராஜஸ்தானில் 5,997, உத்தர  பிரதேசத்தில் 3,065, மத்திய பிரதேசத்தில் 2485 வழக்குகளும் பதியப்பட்டுள்ளன. தமிழகத்தில் 362 வழக்குகள் பதியப்பட்டுள்ளன. பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் 99.7 சதவீத குற்றவாளிகள், பாதிக்கப்படும் பெண்களுக்கு தெரிந்த நபர்களாக உள்ளனர். மேலும் பாதிக்கப்படுபவர்களில் 73 சதவீதம் பேர் 18 வயதில் இருந்து 30 வயதுக்குள்பட்ட பெண்கள். தேசிய அளவில் பாலியல் வன்கொடுமை செய்யப்படுபவர்களில் 11 சதவீதம் பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள்.

உத்தர பிரதேச மாநிலத்தில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்களில் பாதிக்கப்படுவர்களில் 18 சதவீதம் பேர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவர்கள். நாட்டில் கடந்த 10 ஆண்டுகளில் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் 44 சதவீதம் வரை உயர்ந்திருப்பதாக தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் தரவுகள் கூறுகின்றன. கடந்த 7 ஆண்டுகளில் 2.44 லட்சம் பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் நடைபெற்றுள்ளதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.

27 சதவீதம் பேருக்கே தண்டனை: பாலியல் வன்கொடுமைச் சம்பவங்கள் அதிவேகமாக அதிகரித்து வரும் நிலையில், இந்தக் குற்றங்களில் ஈடுபடுபவர்களில் 27.8 சதவீதம் பேர் மட்டுமே நீதிமன்றத்தில் தண்டிக்கப்படுகின்றனர். இதற்கு காவல்துறையின் மோசமான, குற்றவாளிகளுக்கு சாதகமான விசாரணையே முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. அதேவேளையில் உத்தரபிரதேசம்,  ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாதிக்கப்பட்ட பெண்களும், வழக்கின் சாட்சிகளும் அச்சுறுத்தப்படுவதால், குற்றவாளிகள் தண்டனையில் இருந்து தப்புகின்றனர்.
இத்தகைய சூழ்நிலைகளால் குற்றங்களின் மென்மையான இலக்குகளாக பெண்கள் மாறி வருவதாக பெண்ணியல் ஆர்வலர்கள் எச்சரிக்கின்றனர். பெண்களுக்கு எதிரான குற்ற வழக்குகளில், குற்றவாளிகளுக்கு தண்டனை பெற்றுத் தருவதற்கு காவல்துறையும்,  நீதித்துறையும் விரைந்து செயல்பட வேண்டும் என்பதை அவர்கள் வலியுறுத்துகின்றனர்.

இன்றைய நிலையில் பெண்களுக்குத் தெரியாதவர்களைவிட, தெரிந்தவர்கள் மூலம் வரும் அச்சுறுத்தல்களும், ஆபத்துகளுமே அதிகம் என்பதையே தேசிய குற்ற ஆவணக் காப்பகத்தின் அறிக்கை எடுத்துக்காட்டுகிறது. பெண்களுக்கு பாதுகாப்பு வழங்க வேண்டிய சமூகமே, அவர்களது பாதுகாப்புக்கு பங்கத்தை ஏற்படுத்துகிறது என்பதே எதார்த்தம் என குற்றவியல் ஆய்வாளர்கள் கூறுகின்றனர். இதன் விளைவாக சமூகம் வழங்க வேண்டிய பாதுகாப்பை பெண்கள் இழந்து வருவதாக அவர்கள் எச்சரிக்கின்றனர்.

பெண்களுக்கு எதிரான குற்றங்களை சட்டங்களினாலோ, தண்டனைகளினாலோ, காவல்துறையினாலோ முழுமையாக தடுத்துவிட முடியாது என்பது குற்றவியல் ஆய்வாளர்களின் கருத்தாக உள்ளது. பெண்களின் மீதான பார்வையை இந்த சமூகம் மாற்றினால் மட்டுமே, இக்குற்றங்களை முழுமையாகத் தடுக்க முடியும் என்பதே அவர்களது கருத்தாக இருக்கிறது.

கீழே உள்ள தகவல்கள் தேசிய குற்ற ஆவண காப்பகம் வெளியிட்டுள்ள 2019-ஆம் ஆண்டு  குற்ற அறிக்கையின்படி தொகுக்கப்பட்டுள்ளது.

5  நிமிஷத்துக்கு ஒரு பெண் கணவர் மற்றும் அவர் குடும்பத்தினரால் கொடுமைப்படுத்தப்படுகிறார்.
 6 நிமிஷத்துக்கு ஒரு பெண் சீண்டப்படுகிறார் அல்லது தாக்கப்படுகிறார்.
16   நிமிஷத்துக்கு  9 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.
1 மணி நேரத்துக்கு ஒரு பெண் வரதட்சிணைக் கொடுமையால் இறக்கிறார்.
2 மணி நேரத்துக்கு ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ய முயற்சிக்கின்றனர்.
3 மணி நேரத்துக்கு 15 பெண் குழந்தைகள் பாலியல் தொந்தரவால் பாதிக்கப்படுகின்றனர்.
 4 மணி நேரத்துக்கு ஒரு பெண் கடத்தப்படுகிறார்.
5 மணி நேரத்துக்கு 7 பெண்கள் வரதட்சிணைக் கொடுமையால் பாதிக்கப்படுகின்றனர்.
24 மணி நேரத்துக்கு 877 பெண்கள் பாலியல் வன்கொடுமை செய்யப்படுகின்றனர்.
30 மணி நேரத்துக்கு ஒரு பெண் கூட்டு பாலியல் கொடுமை  செய்யப்பட்டு,கொலை செய்யப்படுகிறார்.


குற்றங்கள்... வழக்குகள்....

கணவர் மற்றும் அவரது குடும்பத்தினரால்
கொடுமை செய்தது    1,25,298
பெண்களைச் சீண்டியது மற்றும்
தாக்கியது    88,367
பெண்களை கடத்தியது    72,780
பெண் குழந்தைகளுக்கு எதிரான
பாலியல் தொந்தரவு வழக்கு    46,005
பாலியல் வன்கொடுமை    32,0333
வரதட்சிணை கொடுமை வழக்குகள்    13297
வரதட்சிணை மரணங்கள்    7115
பெண்களை அவமதித்தது    6939
பெண்ணை தற்கொலைக்கு
தூண்டிய வழக்கு    5009
வன்கொடுமை செய்யப்பட்டு கொலை
மற்றும் கூட்டு பாலியல் வன்கொடுமை    283
சட்டவிரோதமாக கருச்சிதைவு செய்த வழக்கு    221
ஆசிட் வீசிய வழக்கு    150

கணவர் மற்றும் அவரது குடும்பத்தினால்  நிகழ்ந்த குற்றங்கள் - 30.9 %
பெண்களைச் சீண்டியது மற்றும் தாக்கியது - 21.8 %
பெண்கள் கடத்தல் - 17.9 %
பாலியல் வன்கொடுமை - 7.9 %

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com