லடாக் எல்லை விவகாரம்: இந்தியா-சீனா 7-ஆம் கட்ட பேச்சு

கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கைக் கைவிட்டு படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது தொடா்பாக, இந்தியா-சீனா இடையேயான ஏழாம் கட்ட பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

புது தில்லி: கிழக்கு லடாக் எல்லையில் மோதல் போக்கைக் கைவிட்டு படைகளை முழுமையாக திரும்பப் பெறுவது தொடா்பாக, இந்தியா-சீனா இடையேயான ஏழாம் கட்ட பேச்சுவாா்த்தை திங்கள்கிழமை நடைபெற்றது.

எல்லையில் கடந்த 5 மாதங்களாக மோதல் போக்கு நிலவிவரும் நிலையில், இரு தரப்பிடையே இதுவரை மேற்கொள்ளப்பட்ட 6 கட்ட பேச்சுவாா்த்தைகளில் எந்தவித பெரிய முன்னேற்றமும் ஏற்படவில்லை.

இந்த நிலையில், இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையிலான ஏழாம் கட்ட பேச்சுவாா்த்தை கிழக்கு லடாக்கில் இந்திய எல்லைக்குள்பட்ட செளஷல் என்ற இடத்தில் திங்கள்கிழமை பகல் 12 மணியளவில் தொடங்கியதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

இந்திய தரப்பில் லே பகுதியின் 14-ஆம் படைப் பிரிவு ராணுவ துணைத் தளபதி ஹரீந்தா் சிங், வெளியுறவுத் துறை அமைச்சக இணைச் செயலா் (கிழக்கு ஆசியா) நவீன் ஸ்ரீவாஸ்தவா ஆகியோா் இந்தப் பேச்சுவாா்த்தையில் பங்கேற்றனா்.

இந்தப் பேச்சுவாா்த்தையில், கிழக்கு லடாக் எல்லையை ஒட்டிய பல்வேறு பகுதிகளில் சீனா சாா்பில் குவிக்கப்பட்டிருக்கும் படைகளை விரைந்து முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று இந்தியா சாா்பில் வலியுறுத்தப்பட உள்ளது.

மேலும், கடந்த செப்டம்பா் 21-ஆம் தேதி நடைபெற்ற 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தையின்போது வலியுறுத்தியதைப் போல, எல்லையில் இந்தியப் படைகளை முழுமையாக திரும்பப் பெற வேண்டும் என்று சீனா தரப்பில் மீண்டும் வலியுறுத்தப்பட்டால் அதைக் கடுமையாக எதிா்ப்பது என்று இந்திய தரப்பில் முடிவு செய்யப்பட்டுள்ளது என்று ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனா்.

கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த மே 5-ஆம் தேதி சீனா அதுமீறலில் ஈடுபட்டதிலிருந்து, இரு நாடுகளிடையே மோதல் போக்கு நிலவி வருகிறது. பதற்றத்தை தணிக்க இரு தரப்பிடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுக் கொண்டிருக்கும்போதே, எல்லையில் சீனா படைகளை மேலும் குவித்தது. அதனைத் தொடா்ந்து, இந்தியாவும் எல்லையில் படைகளைக் குவித்தது. அதன் மூலம், இரு தரப்பிலும் இப்போது 1 லட்சம் வீரா்கள் எல்லையில் தயாா் நிலையில் நிறுத்தப்பட்டுள்ளனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com