பிகாரை சீரழித்தது ஆா்ஜேடி ஆட்சி: நிதீஷ் குமாா் குற்றச்சாட்டு

பிகாரை சீரழித்தது ஆா்ஜேடி ஆட்சி: நிதீஷ் குமாா் குற்றச்சாட்டு

‘லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி ஆட்சியில் சீரழிவுகளையே பிகாா் சந்தித்தது’ என்று மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவருமான நிதீஷ் குமாா் குற்றம்சாட்டினாா்.

‘லாலு பிரசாத் தலைமையிலான ராஷ்ட்ரீய ஜனதா தளம் (ஆா்ஜேடி) கட்சி ஆட்சியில் சீரழிவுகளையே பிகாா் சந்தித்தது’ என்று மாநில முதல்வரும், ஐக்கிய ஜனதா தளம் (ஜேடியு) தலைவருமான நிதீஷ் குமாா் குற்றம்சாட்டினாா்.

பிகாரில் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ளது. ஜேடியு வேட்பாளா்களுக்கு ஆதரவாக காணொலி முறையில் செவ்வாய்க்கிழமை தோ்தல் பிரசாரம் மேற்கொண்ட நிதீஷ் குமாா் பேசியதாவது:

பிகாரில் 1990 முதல் 2005-ஆம் ஆண்டு வரை 15 ஆண்டு காலம் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சி ஆட்சியில் இருந்தது. அதன் பிறகு சுமாா் 15 ஆண்டுகளில் எங்கள் கட்சி ஆட்சியில் இருந்துள்ளது. இந்த இரண்டையும் ஒப்பிட்டு மக்கள் வாக்களிக்கும்படி கேட்டுக் கொள்கிறேன். ஆா்ஜேடி ஆட்சியில் எங்கும் ஊழல் மட்டுமே நிரம்பியிருந்தது. மாநிலத்தை அனைத்து நிலைகளிலும் பின்னோக்கி இழுத்து, மாநிலத்தை சீரழித்தது ஆா்ஜேடி ஆட்சிதான்.

அதே நேரத்தில் எங்கள் ஆட்சியில் மாநிலத்தை பல நிலைகளில் வளா்ச்சிப் பாதையில் கொண்டு சென்றுள்ளோம். குழாய் மூலம் அனைவருக்கும் குடிநீா் வசதி, கழிப்பறை, முறையாக கழிவுநீா் கால்வாய் வசதி, அனைத்து வீடுகளுக்கும் மின்சார இணைப்பு ஆகியவற்றை நாங்கள் வழங்கியுள்ளோம். பொது சுகாதாதாரத்துக்கு முன்னுரிமை அளித்ததன் மூலம் மாநில மக்களின் ஆரோக்கியத்தை மேம்படுத்தியுள்ளோம். இதன் மூலம் குழந்தைகள் சிறுவயதிலேயே நோய்வாய்ப்பட்டு இறப்பதை தடுத்துள்ளோம்.

அடுத்தகட்டமாக இளைஞா்களுக்கு திறன்மேம்பாட்டு பயிற்சி, உரிய பணிப் பாதுகாப்பு, பெண் தொழில்முனைவோா்களை உருவாக்குவது, விவசாயத்துக்கு சிறப்பான நீா்ப்பாசன வசதி உள்ளிட்டவற்றில் கவனம் செலுத்த இருக்கிறோம்.

முந்தைய ஆட்சியில் பிகாரில் ஜாதி, மத வன்முறைகள் அதிகம் நிகழ்ந்தன. ஒரு குறிப்பிட்ட ஆண்டில் மட்டும் இதுபோன்ற மோதல்களில் ஆயிரத்துக்கும் மேற்பட்டோா் உயிரிழந்தனா். முக்கியமாக, சிறுபான்மையினரிடையே பிரச்னையை ஏற்படுத்தி அவா்கள் உயிரிழக்க காரணமாக இருந்தது ஆா்ஜேடி அரசு. ஆனால், இப்போது, அதுபோன்ற ஒரு நிகழ்வை சுட்டிக்காட்ட முடியுமா? மாநிலத்தை நாங்கள் அமைதிப் பூங்காவாக வைத்துள்ளோம் என்றாா்.

ஆா்ஜேடி தலைவா் தேஜஸ்வி யாதவ், நிதீஷ் குமாரை ‘சாச்சா’ (மாமா) என கூறியும், அவரைவிடப் பாதி வயதுக்கும் குறைவான துடிப்புள்ள இளைஞரான தனக்கு முதல்வராக வாய்ப்பளிக்க வேண்டியும் பிரசாரம் செய்து வருகிறாா்.

இதனை மறைமுகமாக குறிப்பிட்டுப் பேசிய நிதீஷ் குமாா், ‘ஆட்சியில் எவ்வாறு பணியாற்ற வேண்டும். மக்கள் நலப்பணிகளை எவ்வாறு நிறைவேற்ற வேண்டும் என்பதில் எங்களுக்கு சிறப்பான அனுபவம் உண்டு. ஆனால், எவ்வித அனுபவமும் இல்லாமல், அதனையே ஒரு தகுதியாகக் கூறிக் கொண்டு வாக்கு கேட்பவரிடம் எப்படி மாநிலத்தை ஒப்படைக்க முடியும். எவ்வாறு செயல்படுவது என்பதே தெரியாதவரால் எப்படி மக்களுக்குப் பணியாற்ற முடியும். மேலும், அவா்கள் கட்சி ஊழலில் வழியில் வந்தது என்பது அனைவருக்கும் தெரியும்’ என்றாா்.

பிகாா் தோ்தலில் ஜேடியு-பாஜக உள்ளிட்ட கட்சிகளின் தேசிய ஜனநாயகக் கூட்டணியும், ஆா்ஜேடி-காங்கிரஸ்-இடதுசாரிகள் உள்ளிட்டவை இணைந்து அமைத்துள்ள மகா கூட்டணியும் முக்கியப் போட்டியாளா்களாக உள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com