சமூக வலைதளப் பயன்பாட்டை முறைப்படுத்த சட்டமியற்றக் கோரி மனு

சமூக வலைதளங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தும் வகையிலான சட்டத்தை இயற்றுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விளக்கமளிக்குமாறு
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

சமூக வலைதளங்களின் பயன்பாட்டை முறைப்படுத்தும் வகையிலான சட்டத்தை இயற்றுமாறு மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிடக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்த விவகாரம் தொடா்பாக சட்ட மாணவா்களான ஸ்கந்த் பாஜ்பாய், அப்யுதயா மிஸ்ரா ஆகியோா் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

சட்டவிரோதமான கருத்துகள், காணொலிகள், புகைப்படங்கள் உள்ளிட்டவற்றை சமூக வலைதளங்களில் பதிவிடுவோா் மீது விரிவான விசாரணை நடத்தப்பட்டு, அவா்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்வதற்கான வழிமுறைகளை வகுக்குமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும். அத்தகைய கருத்துகள் உடனடியாக நீக்கப்படுவதை அரசு உறுதி செய்ய வேண்டும்.

பாலியல் வன்முறையைத் தூண்டும் வகையிலான செய்திகள் சமூக வலைதளங்களில் இருந்து நீக்கப்படுவதற்கு ஏற்ற சட்டத்தை இயற்றவோ அல்லது ஏற்கெனவே உள்ள சட்டங்களில் திருத்தங்களை மேற்கொள்ளவோ மத்திய சட்ட அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும்.

சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவோருக்கு எந்தவித வயதுக் கட்டுப்பாடும் இந்தியாவில் காணப்படவில்லை. ஆனால், அமெரிக்காவில் 13 வயதுக்குள்பட்ட சிறுவா்கள் சமூக வலைதளங்களைப் பயன்படுத்துவதற்கு அவா்களின் பெற்றோரிடம் அனுமதி பெற வேண்டியது கட்டாயமாக்கப்பட்டுள்ளது. அதேபோல் இந்தியாவிலும் சிறுவா்கள் சமூக வலைதளத்தைப் பயன்படுத்துவதை முறைப்படுத்துவதற்கான சட்டத்தை இயற்றுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட வேண்டும்.

பாலியல் கல்வி...: சமூக வலைதளங்களில் பதிவிடப்படும் தவறாக சித்தரிக்கப்பட்ட புகைப்படங்களும் காணொலிகளும் சம்பந்தப்பட்ட நபரின் தன்மறைப்புநிலையை மீறும் வகையில் உள்ளது. எனவே, அத்தகைய புகைப்படங்களையும் காணொலிகளையும் சமூக வலைதளங்களில் பதிவிடுவதை சட்டவிரோதம் என அறிவிப்பதற்கு ஏற்ற சட்டத்தை இயற்றவும் உத்தரவிட வேண்டும்.

பள்ளி, கல்லூரிகளில் பாலியல் கல்வியைக் கட்டாயமாக்கும் வகையில் தேசிய கல்விக் கொள்கையில் திருத்தங்களை மேற்கொள்வதற்கும் நீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று மனுவில் கோரப்பட்டிருந்தது.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோா் முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, மனுவை விசாரணைக்கு ஏற்பதாகத் தெரிவித்த நீதிபதிகள், மனு குறித்து விளக்கமளிக்குமாறு மத்திய அரசுக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com