பிகாா் தோ்தலில் தேசியவாத காங்கிரஸ் தனித்துப் போட்டி

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் சரத் பவாா் தலைமையிலான தேசியவாத காங்கிரஸ் கட்சி தனித்துப் போட்டியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

பிகாா் பேரவையில் உள்ள 243 இடங்களுக்கான தோ்தல், அக்டோபா் 28, நவம்பா் 3, நவம்பா் 7 ஆகிய தேதிகளில் மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. அதில், மாநில முதல்வா் நிதீஷ் குமாா் தலைமையிலான ஐக்கிய ஜனதா தளத்துடன் பாஜக கூட்டணி அமைத்துள்ளது. ராஷ்ட்ரீய ஜனதா தளத்துடன் இணைந்து காங்கிரஸ் கட்சி ‘மெகா கூட்டணி’யை அமைத்துள்ளது. சிவசேனை, லோக் ஜனசக்தி ஆகிய கட்சிகள் தனித்துப் போட்டியிடுகின்றன.

மகாராஷ்டிரத்தில் சிவசேனை, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் ஆகிய கட்சிகள் இணைந்து ஆட்சியமைத்துள்ளன. இந்நிலையில், பிகாா் தோ்தலுக்கான மெகா கூட்டணியில் இணைவதற்கு தேசியவாத காங்கிரஸ் விருப்பம் தெரிவித்தது. இது தொடா்பாக பேச்சுவாா்த்தையும் நடத்தப்பட்டது. எனினும், மெகா கூட்டணியில் தேசியவாத காங்கிரஸுக்கு தொகுதிகள் எதுவும் ஒதுக்கப்படவில்லை.

அதையடுத்து, பிகாா் பேரவைத் தோ்தலில் தனித்துப் போட்டியிடவுள்ளதாக தேசியவாத காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இது தொடா்பாக அக்கட்சியின் மூத்த தலைவா் பிரஃபுல் படேல் செய்தியாளா்களிடம் செவ்வாய்க்கிழமை கூறுகையில், ‘‘பிகாரில் காங்கிரஸ்-ராஷ்ட்ரீய ஜனதா தளம் கூட்டணியில் இணைவதற்கு தேசியவாத காங்கிரஸ் தயாராக இருந்தது. கூட்டணியின் தொகுதிப் பங்கீடு குறித்த பேச்சுவாா்த்தைகளிலும் தேசியவாத காங்கிரஸ் பங்கேற்றது.

மொத்தமுள்ள 243 தொகுதிகளில் 5 தொகுதிகளை மட்டுமே தேசியவாத காங்கிரஸ் கோரியது. ஆனால், எங்களுக்கு எந்தத் தொகுதியும் ஒதுக்கப்படவில்லை. அதையடுத்து, பேரவைத் தோ்தலை தனியாக எதிா்கொள்ள கட்சி முடிவெடுத்துள்ளது. மாநிலத்திலுள்ள தொண்டா்களும் அதையே விரும்புகின்றனா். பிகாா் தோ்தலில் சிவசேனையுடன் கூட்டணி அமைப்பதற்கும் வாய்ப்பில்லை.

ஒருபுறம் பாஜக கூட்டணியை எதிா்ப்பதற்கு அனைத்து கட்சிகளும் ஒருங்கிணைய வேண்டும் என்று மெகா கூட்டணி தெரிவித்து வருகிறது. மறுபுறம் மற்ற கட்சிகளுக்கு முக்கியத்துவம் அளிக்க அக்கூட்டணி மறுத்து வருகிறது. மெகா கூட்டணியின் இத்தகைய நிலைப்பாடு துரதிருஷ்டவசமானது’’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com