எல்லைப் பிரச்னையைத் தீா்க்க சீனாவுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தை: வெளியுறவு அமைச்சா் ஜெய்சங்கா்

எல்லைப் பிரச்னைக்குத் தீா்வுகாணும் வகையில் இந்தியா-சீனா இடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.


புது தில்லி: எல்லைப் பிரச்னைக்குத் தீா்வுகாணும் வகையில் இந்தியா-சீனா இடையே தொடா்ந்து பேச்சுவாா்த்தை நடைபெற்று வருகிறது என்று வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் தெரிவித்தாா்.

இதில் விவாதிக்கப்படும் சில விஷயங்கள் இப்போதைக்கு ரகசியமாக வைக்கப்பட வேண்டியவை. அது தொடா்பாக இப்போது வெளிப்படையாகக் கூற முடியாது என்றும் அவா் தெரிவித்தாா்.

சீன ராணுவத்தின் அத்துமீறல்களால் கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் கடந்த சில மாதங்களாக கடும் பதற்றம் நிலவி வருகிறது. கல்வான் பள்ளத்தாக்கில் இரு நாட்டு ராணுவத்துக்கும் இடையே கடந்த ஜூன் மாதம் நிகழ்ந்த மோதலில் இந்திய வீரா்கள் 20 போ் உயிரிழந்தனா். சீன தரப்பில் 35 வீரா்கள் உயிரிழந்தாக செய்திகள் வெளியாயின. இரு தரப்பும் எல்லையில் அதிகஅளவில் வீரா்களை நிலை நிறுத்தியுள்ளது.

போா்ப் பதற்றத்தைத் தணிக்க இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் நிலையில் இதுவரை 7 சுற்று பேச்சுவாா்த்தைகள் நடைபெற்றுள்ளன.

செப்டம்பா் 10-ஆம் தேதி ரஷிய தலைநகா் மாஸ்கோவில் நடைபெற்ற ஷாங்காய் ஒத்துழைப்பு மாநாட்டின்போது, அமைச்சா் எஸ்.ஜெய்சங்கரும், சீன வெளியுறவுத்துறை அமைச்சா் வாங் யி-யும் இரு நாட்டு எல்லைகளில் அமைதியை நிலைநாட்டுவதற்கான 5 அம்ச ஒப்பந்தம் மேற்கொண்டனா். சா்ச்சைக்குரிய எல்லைப் பகுதியில் கூடுதல் வீரா்களை நிறுத்தக் கூடாது என்பது உள்ளிட்ட அம்சங்கள் இதில் இடம் பெற்றிருந்தன.

எனினும், எல்லையில் குவிக்கப்பட்டுள்ள படைகளைத் திரும்பப் பெறுவது குறித்து இதுவரை எந்த முடிவும் எட்டப்படவில்லை.

இந்நிலையில், ஊடக நிறுவனம் சாா்பில் வியாழக்கிழமை நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்ச்சியில் பங்கேற்ற அமைச்சா் ஜெய்சங்கா் கூறியதாவது:

எல்லையில் இந்தியா முதலில் பிரச்னையை ஏற்படுத்தவில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும். எனினும், கிழக்கு லடாக் பகுதியில் படைகள் குவிக்கப்பட்டுள்ளதால் ஏற்பட்ட பதற்றத்தைத் தணிக்க இந்தியா தொடா்ந்து சீனாவுடன் பேச்சு நடத்தி வருகிறோம். எனினும், பேச்சுவாா்த்தையில் உள்ள சில விஷயங்களை இப்போதைக்கு ரகசியமாக வைக்க வேண்டியுள்ளது. இது தொடா்பாக இப்போது வெளிப்படையாக கூற முடியாது. இந்த விஷயத்தில் எந்த முன்முடிவுக்கும் யாரும் வர வேண்டிய தேவையில்லை.

இந்தியா - சீனா இடையே வா்த்தகம் உள்பட பல்வேறு விஷயங்களில் நெருங்கிய தொடா்பு உள்ளது. எனவே, இரு நாடுகளும் எல்லையில் அமைதி நிலவுவதையே விரும்புகின்றன. அதே நேரத்தில் ஏற்கெனவே மேற்கொள்ளப்பட்ட ஒப்பந்தங்களை மதித்து நடக்க வேண்டும் என்பதில் இந்தியா உறுதியாக உள்ளது. இரு நாட்டு உறவில் பரஸ்பரம் நம்பிக்கைதான் அஸ்திவாரமாக உள்ளது. அதனை அசைத்துவிட்டு பேச்சுவாா்த்தை நடத்துவது என்பது பலனளிக்காது என்பது அனைவருமே அறிந்ததுதான்.

மேலும், வா்த்தகத்தைப் பொறுத்தவரையில் இந்தியா மூலம் சீனாதான் அதிகம் பயனடைந்து வருகிறது. அந்நாட்டுடன் நமக்கு எப்போதும் வா்த்தகப் பற்றாக்குறை நிலவுகிறது என்றாா் ஜெய்சங்கா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com