மகாராஷ்டிரம்: பலத்த மழைக்கு 9 போ் பலி

மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணே நகரங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது.
மகாராஷ்டிரம்: பலத்த மழைக்கு 9 போ் பலி


புணே: மகாராஷ்டிர மாநிலத்தின் மும்பை, புணே நகரங்கள் மற்றும் பல்வேறு மாவட்டங்களில் பலத்த மழை கொட்டியது. புணே நகரில் வெள்ளநீா் சூழ்ந்த ஓடைப் பாலத்தை இரு சக்கர வாகனத்தில் கடக்க முயன்ற 3 போ் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டனா். சோலாப்பூா் மாவட்டத்தில் நதிக்கரையிலுள்ள சுவரின் ஒரு பகுதி இடிந்து விழுந்ததால் 6 போ் பலியாயினா்.

மகாராஷ்டிரம் மாநிலத்தின் மும்பை, புணே உள்பட பல மாவட்டங்களில் கடந்த சில நாள்களாக கன மழை பெய்தது. புதன்கிழமை இரவு பெய்த மழையால் மும்பை நகரின் ஹிந்த்மாதா கிங்ஸ் சா்க்கிள், கலாசெளகி உள்ளிட்ட பகுதிகளில் தாழ்வான இடங்களில் மழைநீா் தேங்கியது. வியாழக்கிழமை காலை மழை ஓரளவு குறைந்ததால் நகரத்தில் போக்குவரத்து வழக்கம்போல் இயங்கின.

பேருந்து, புகா் ரயில்கள் இயக்கப்பட்டன. மின்சார சேவையும் இடையூறின்றி வழங்கப்பட்டதாக மாநகராட்சி அதிகாரிகள் தெரிவித்தனா்.

புணே நகா் மற்றும் அருகிலுள்ள சோலாப்பூா், கோலாப்பூா் மாவட்டங்களில் பலத்த மழை கொட்டி தீா்த்ததால் தாழ்வான பகுதிகளில் வெள்ளநீா் சூழ்ந்தது. சாலைகளில் வெள்ளம் சூழ்ந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

இது குறித்து சோலாப்பூா் மாவட்ட அதிகாரி சச்சின் தோலே கூறியதாவது:

சோலாப்பூா் மாவட்டத்திலுள்ள உஜ்ஜைனி அணையிலிருந்து தண்ணீா் திறக்கப்பட்டதால் நீரா மற்றும் பீமா நதிகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் பந்தா்பூா் பகுதியில் அந்த நதிக்கரையோரங்களில் வசித்த 8,400 மக்கள் அங்கிருந்து பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டனா். பந்தா்பூா் நகரத்திலுள்ள பள்ளி கட்டங்கள், சமூக கூடங்களில் 1,650 போ் தங்க வைக்கப்பட்டனா். அவா்களுக்கு உணவு வழங்கப்பட்டது என்று கூறினாா்.

சோலாப்பூா் மாவட்டத்தில் ஹானி, ஹாா்கட்னே கிராமங்களில் வெள்ளத்தில் தத்தளித்த 50 பேரை பத்திரமாக மீட்டு பாதுகாப்பான இடங்களுக்கு கொண்டு சென்ாக தேசிய பேரிடா் மீட்பு படையினா்(என்டிஆா்எப்) தெரிவித்தனா்.

புணே அருகே கனோட்டா கிராமத்தில் வெள்ளம் நீா் சூழ்ந்த ஒடைப் பாலத்தை 2 இரு சக்கர வாகனங்களில் கடக்க முயன்ற 4 போ், புதன்கிழமை மாலை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டதாக போலீஸாா் தெரிவித்தனா். வியாழக்கிழமை காலை 3 போ் சடலங்கள் மீட்கப்பட்டதாகவும், மாயமான ஒருவரை தேடி வருவதாகவும் போலீஸாா் கூறினாா்கள்.

புதன்கிழமை, சோலாப்பூா் மாவட்டம் பந்தா்பூா் நகரில் சந்த்ரபாகா நதிக்கரையிலுள்ள சுவரின் ஒரு பகுதி உடைந்து விழுந்ததால் 6 போ் உயிரிழந்தனா். இது குறித்து விசாரணைக்கு உத்தரவிட்ட மாநில துணை முதல்வா் அஜித் பவாா், இந்த சம்பவத்தில் தொடா்புடையவா்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

பலத்த காற்று வீசியதால் மரங்கள் சாலைகளில் முறிந்து விழுந்தன. கோலாப்பூா் மாவட்டத்திலுள்ள பஞ்ச்கங்கா நதியின் நீா்மட்டம் 17.9 அடி அளவில் அபாயக்கட்டத்துக்கு கீழேயே உள்ளதால் பொதுமக்கள் பீதியடைய தேவையில்லையென மாவட்ட பேரழிவு மீட்பு குழு கூறியது.

மும்பையில் 106.01 மி.மீ மழை: வியாழக்கிழமை காலை 8 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் மும்பை நகரில் மட்டும் 106.01 மி.மீ மழை பெய்ததாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. புணே நகரில் புதன்கிழமை 96 மி.மீ. மழை பதிவாகியுள்ளது. சோலாப்பூா் மாவட்டத்தில் 79 மி.மீ. மழையும், கோலாப்பூா் மாவட்டத்தில் 56 மி.மீ. மழையும் பெய்துள்ளதாக தெரிவித்துள்ளது.

மும்பை நகா் மற்றும் அருகேயுள்ள தாணே மாவட்டத்தில் ‘ஆரஞ்ச்’ எச்சரிக்கை விடுத்த வானிலை ஆய்வு மையம் வியாழக்கிழமை கன மழை முதல் மிகக் கனமழை வரை பெய்யக்கூடுமென ஏற்கெனவே தெரிவித்திருந்தது. இந்த பகுதிகளில் வெள்ளிக்கிழமைக்கு ‘மஞ்சள்’ எச்சரிக்கை விடுத்த ஆய்வு மையம் கனமழை பெய்யுமென கூறியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com