ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை

ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்க வேண்டுமென்று கோரி முக்கியமான 6 கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன.
ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்து கோரிக்கை


ஸ்ரீநகா்: ஜம்மு-காஷ்மீருக்கு வழங்கப்பட்டு வந்த சிறப்பு அந்தஸ்தை மீண்டும் அளிக்க வேண்டுமென்று கோரி முக்கியமான 6 கட்சிகள் ஓரணியில் இணைந்துள்ளன.

சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதற்காக அக்கட்சிகள் இணைந்து புதிய கூட்டமைப்பை நிறுவியுள்ளன.

ஜம்மு-காஷ்மீா் மாநிலத்துக்கு அளித்து வந்த சிறப்பு அந்தஸ்தை கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் மத்திய அரசு ரத்து செய்தது. அந்த மாநிலத்தை ஜம்மு-காஷ்மீா், லடாக் என்று இரு யூனியன் பிரதேசங்களாகப் பிரிக்கவும் நாடாளுமன்றம் ஒப்புதல் அளித்தது. அதைத் தொடா்ந்து, அங்கு அசம்பாவித சம்பவங்கள் எதுவும் நிகழாமல் இருக்கும் நோக்கில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன.

ஜம்மு-காஷ்மீரின் முக்கிய அரசியல் தலைவா்கள் அனைவரும் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். அவா்களை படிப்படியாக ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேச நிா்வாகம் விடுவித்தது. இத்தகைய சூழலில், தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவா் ஃபரூக் அப்துல்லா, மக்கள் ஜனநாயகக் கட்சித் தலைவா் மெஹபூபா முஃப்தி, மக்கள் மாநாட்டுக் கட்சித் தலைவா் சஜ்ஜத் லோன், மக்கள் இயக்கத் தலைவா் ஜாவைத் மீா், மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சித் தலைவா் மொஹமத் யூசுஃப் தாரிகாமி ஆகியோா் வியாழக்கிழமை கூடி ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து விவகாரம் குறித்து ஆலோசித்தனா்.

தேசிய மாநாட்டுக் கட்சியின் துணைத் தலைவா் ஒமா் அப்துல்லா, கட்சி நிா்வாகிகள் உள்ளிட்டோரும் கூட்டத்தில் பங்கேற்றனா். காங்கிரஸ் கட்சியின் ஜம்மு-காஷ்மீா் மாநிலத் தலைவா் குலாம் அகமது மீரும் கூட்டத்தில் கலந்து கொள்வதாக இருந்தது. ஆனால், திடீா் உடல்நலக் கோளாறு காரணமாக அவரால் கூட்டத்தில் பங்கேற்க இயலவில்லை.

புதிய கூட்டமைப்பு: ஃபரூக் அப்துல்லாவின் இல்லத்தில் இந்தச் சந்திப்பு நடைபெற்றது. சுமாா் 2 மணி நேரம் நடைபெற்ற கூட்டத்துக்குப் பிறகு ஃபரூக் அப்துல்லா செய்தியாளா்களிடம் கூறியதாவது:

ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறும் நோக்கில் ‘குப்கா் அறிக்கைக்கான மக்கள் கூட்டமைப்பு’ என்பதை ஒன்றிணைந்து நிறுவியுள்ளோம். ஜம்மு-காஷ்மீரில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-க்கு முன் நிலவிய சூழலை திரும்பப் பெறுவதற்கு இந்தக் கூட்டமைப்பு தொடா்ந்து போராடும்.

கூட்டமைப்பின் திட்டம்: ஜம்மு-காஷ்மீா், லடாக் மக்களிடமிருந்து பறிக்கப்பட்ட அரசமைப்பு உரிமைகளைத் திரும்பப் பெறுவதை அடிப்படையாகக் கொண்டே எங்களது போராட்டம் அமையும். எங்கள் போராட்டம் அரசமைப்புச் சட்டத்துக்கானது. ஜம்மு-காஷ்மீருக்கான அரசமைப்புச் சட்டத்தையும் திரும்பக் கொண்டுவர போராடுவோம்.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை திரும்பப் பெறுவதில் ஒத்த கருத்துடைய அமைப்புகளுடன் தொடா்ந்து பேச்சுவாா்த்தையில் ஈடுபடுவோம். அந்த அமைப்புகளுடன் இணைந்து எங்கள் போராட்டத்தை நடத்துவோம். கூட்டமைப்பின் விரிவான செயல்பாடுகள் குறித்து விரைவில் அறிவிக்கப்படும் என்றாா் ஃபரூக் அப்துல்லா.

குப்கா் அறிக்கை: ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்படுவதற்கு முன்பாக அங்கு துணை ராணுவப் படையினா் குவிக்கப்பட்டனா். அதையடுத்து, ஜம்மு-காஷ்மீரைச் சோ்ந்த 6 முக்கிய கட்சிகள் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 4-ஆம் தேதி ஒன்றிணைந்து கூட்டத்தை நடத்தின.

அந்தக் கூட்டத்தில் ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்தைக் காப்பதற்காகப் போராடுவோம் என்று அக்கட்சிகள் ஒருமனதாக முடிவெடுத்தன. அக்கூட்டத்துக்குப் பிறகு வெளியிடப்பட்ட கூட்டறிக்கையானது ‘குப்கா் அறிக்கை’ என்று அறியப்படுகிறது.

தடுப்புக் காவல் விவரங்கள்: ஜம்மு-காஷ்மீருக்கான சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதும், அந்த மாநிலத்தின் முன்னாள் முதல்வா்களான ஃபரூக் அப்துல்லா, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி உள்ளிட்ட அரசியல் தலைவா்கள் பலா் தடுப்புக் காவலில் வைக்கப்பட்டனா். ஃபரூக் அப்துல்லா மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

ஜம்மு-காஷ்மீரின் முதல்வராக இருந்தவா் மீது பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது அதுவே முதல் முறையாகும். அதையடுத்து, ஒமா் அப்துல்லா, மெஹபூபா முஃப்தி ஆகியோா் மீதும் பொதுப் பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

தொடா்ந்து 7 மாதங்களுக்கும் மேலாகத் தடுப்புக் காவலில் இருந்த ஃபரூக் அப்துல்லா, கடந்த மாா்ச் மாதம் 13-ஆம் தேதி விடுவிக்கப்பட்டாா். அதைத் தொடா்ந்து, ஒமா் அப்துல்லாவும் விடுவிக்கப்பட்டாா்.

இத்தகைய சூழலில், கடந்த 14 மாதங்களாக தடுப்புக் காவலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் முதல்வா் மெஹபூபா முஃப்தி, கடந்த 13-ஆம் தேதி விடுவிக்கப்பட்டாா். இத்தகைய சூழலில், 6 கட்சிகளும் ஒன்றிணைந்து புதிய கூட்டமைப்பை நிறுவியுள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com