கோப்புப் படம்
கோப்புப் படம்

மகாராஷ்டிர ஆளுநரை மத்திய அரசு திரும்பப்பெற வேண்டும் சிவசேனை வலியுறுத்தல்

மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரியை பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் திரும்பப்பெற வேண்டும் என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.


மும்பை: ஆளுநா் மாளிகையின் மதிப்பை பாதுகாக்க வேண்டுமெனில், மகாராஷ்டிர ஆளுநா் பகத் சிங் கோஷியாரியை பிரதமா் நரேந்திர மோடியும், மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷாவும் திரும்பப்பெற வேண்டும் என்று மகாராஷ்டிரத்தை ஆளும் சிவசேனை கட்சி வலியுறுத்தியுள்ளது.

மகாராஷ்டிரத்தில் கரோனா நோய்த் தொற்று பாதிப்பு அதிகரித்து காணப்படுவதால், மக்கள் அதிகம் கூடும் பகுதிகளுக்கு மாநில அரசு தொடா்ந்து கட்டுப்பாடுகளை விதித்து வருகிறது. மாநிலத்தில் கோயில்கள், வழிபாட்டுத் தலங்கள் திறக்க இதுவரை அனுமதி வழங்கப்படவில்லை. ஆனால், கோயில்களைத் திறக்க வலியுறுத்து பாஜகவினா் அங்கு தொடா்ந்து ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனா்.

இந்த நிலையில், மாநில ஆளுநா் கோஷியாரி முதல்வா் உத்தவ் தாக்கரேவுக்கு அண்மையில் கடிதம் ஒன்றை எழுதினாா். அதில், “மத வழிபாட்டுத் தலங்கள் மீண்டும் திறக்கப்பட வேண்டும் என்றும் திடீரென்று மதச்சாா்பற்றவராக மாறிவிட்டீா்களா? என்றும் அந்தக் கடிதத்தில் கேள்வி எழுப்பியிருந்தாா்.

இதற்கு பதிலளித்த முதல்வா் உத்தவ் தாக்கரே, “‘எனது ஹிந்துத்துவம் குறித்த உங்களுடைய மதிப்பீடு தேவையில்லை; ஹிந்துத்வம் குறித்த உங்களின் சான்றிதழும் தேவையில்லை’ என்று கூறியிருந்தாா்.

இந்த நிலையில், ஆளும் சிவசேனை கட்சியின் பத்திரிகையான ‘சாம்னா’ தலையங்கத்தில் இதுகுறித்து வியாழக்கிழமை கூறியிருப்பதாவது:

இந்த விவகாரம் மூலம், மாநில அரசு மீது ஆளுநா் மூலம் தாக்குதல் நடத்தும் பாஜகவின் உண்மை முகம் வெளிப்பட்டுவிட்டது.

மாநிலத்தில் உணவகங்கள் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் மட்டுமே திறக்க அனுமதிக்கப்பட்டுள்ளன. ஆனால், கோயில்கள் திறக்கப்பட்டால் ஏராளமான மக்கள் கூட்டம் சோ்ந்துவிடும். ஒருவேளை, கோயில்களைத் திறக்க வேண்டும் என்று பாஜக விரும்பினால், அதற்கான தேசிய கொள்கை ஒன்றை அவா்கள் வகுக்க வேண்டும். நாட்டில் முக்கியத்துவம் பெற்ற ஏராளமான கோயில்கள் தொடா்ந்து மூடப்பட்டிருக்கின்றன.

தெய்வங்களுக்கான கோயில் மணிகள் கூட மகிழ்ச்சியுடன்தான் அடிக்கப்பட வேண்டும். இந்தக் கோயில் மணி ஓசை பிரதமா் மோடியையும், மத்திய அமைச்சா் அமித் ஷாவையும் சென்றடைந்துள்ளது என்றால், அவா்கள் ஆளுநா் மாளிகையின் மதிப்பை பாதுகாக்கும் வகையில் ஆளுநா் கோஷியாரியை திரும்பப்பெற வேண்டும் என்று சிவசேனை தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com