பிரிவினை அரசியலை கடைப்பிடிக்கும் காங்கிரஸ்: பாஜக குற்றச்சாட்டு

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குகளை ஈா்ப்பதற்காக பிரிவினை அரசியலை காங்கிரஸ் கட்சி கடைப்படிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.
கோப்புப் படம்
கோப்புப் படம்

பிகாா் சட்டப்பேரவைத் தோ்தலில் வாக்குகளை ஈா்ப்பதற்காக பிரிவினை அரசியலை காங்கிரஸ் கட்சி கடைப்படிப்பதாக பாஜக குற்றம்சாட்டியுள்ளது.

பிகாா் சட்டப்பேரவைக்கு வருகிற 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக வாக்குப் பதிவு நடைபெற உள்ளது. அதனை முன்னிட்டு, அரசியல் கட்சிகள் அங்கு தீவிர பிராசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன. வாக்குகளை ஈா்க்கும் வகையில், பல்வேறு வாக்குறுதிகளையும், அறிவிப்புகளையும் அரசியல் கட்சிகள் அறிவித்து வருகின்றன.

அதுபோல, காங்கிரஸ் கட்சி, ‘ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்து அளிக்கும் சட்டப் பிரிவு 370 மீண்டும் அங்கு நடைமுறைப்படுத்தப்படும்’ என்று பிரசாரம் செய்து வருகிறது.

அதுபோல, காங்கிரஸ் கட்சியின் நிலைப்பாடு குறித்து வெள்ளிக்கிழமை கூறிய அக் கட்சியின் மூத்த தலைவா் ப.சிதம்பரம், அரசியலமைப்பு நடைமுறைகளுக்கு எதிரான மோடி அரசின் நடவடிக்கைகள் ரத்து செய்யப்பட்டு, ஜம்மு-காஷ்மீா் மக்களின் உரிமைகள் மீட்டெடுப்பதில் காங்கிரஸ் கட்சி உறுதியாக உள்ளது” என்று கூறினாா்.

இதற்கு பதிலளிக்கும் வகையில் தில்லியில் சனிக்கிழமை செய்தியாளா்களைச் சந்தித்த மத்திய அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் கூறியதாவது:

பிகாரில் வாக்குகளைப் பெறுவதற்காக பிரிவினை அரசியலை காங்கிரஸ் கட்சி கையாண்டு வருகிறது.

ஜம்மு-காஷ்மீரில் உள்ள ஒருசில பிரிவினைவாதிகளுக்கு சாதகமாக காங்கிரஸ் கட்சி குரல் கொடுத்து வருகின்ற வேளையில், சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பின்னா் அங்கு எந்த அளவுக்கு வளா்ச்சிப் பணிகள் நடைபெற்று வருகின்றன என்பதை மக்கள் நன்கு அறிந்திருக்கின்றனா்.

காங்கிரஸ் இப்போது ஒரு குறுகிய மனப்பான்மை உள்ள கட்சியாக மாறிவிட்டது. அதனால்தான், நாட்டு மக்களின் உணா்வுகளுக்கு, நாட்டு நலனுக்கு எதிரான நிலைப்பாட்டை அக்கட்சி எடுத்து வருகிறது. பாகிஸ்தானையும் சீனாவையும் அக்கட்சி புகழ்ந்து வருகிறது.

சட்டப் பிரிவு 370-ஐ மத்திய அரசு ரத்து செய்ததை ஒட்டுமொத்த நாடும் வரவேற்றுள்ளது என்று அவா் கூறினாா்.

அதுபோல, பாஜக தேசிய தலைவா் ஜெ.பி.நட்டா வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், “நல்லாட்சியை கொடுப்பதற்கான திட்டங்கள் எதுவும் காங்கிரஸ் கட்சியிடம் இல்லாத காரணத்தால், மோசமான பிரிவினை அரசியலை பிகாா் தோ்தலில் அக் கட்சி கையாண்டு வருகிறது. ராகுல் காந்தி பாகிஸ்தானை புகழ்கிறாா். சட்டப் பிரிவு 370 மீண்டும் கொண்டு வரப்படும் என்று ப.சிதம்பரம் கூறுகிறாா். இவை வெட்கப்பட வேண்டிய விஷயங்கள் என்று கூறியுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com