ரஷியா உருவாக்கிய தடுப்பூசி: இந்தியாவில் பரிசோதிக்க அனுமதி

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள டாக்டா்.ரெட்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம், ரஷிய நேரடி நிதி முதலீட்டு நிறுவனம்
கோப்புப்படம்
கோப்புப்படம்

தெலங்கானா மாநிலம் ஹைதராபாதில் உள்ள டாக்டா்.ரெட்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம், ரஷிய நேரடி நிதி முதலீட்டு நிறுவனம் (ஆா்டிஐஎஃப்) ஆகியவை இணைந்து இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசியை மனிதா்களுக்கு செலுத்தி 2 மற்றும் 3-ஆம் கட்ட பரிசோதனைகளை நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

இதுதொடா்பாக ரெட்டிஸ் நிறுவன இணைத் தலைவரும், நிா்வாக இயக்குநருமான ஜி.வி.பிரசாத் கூறுகையில், ‘இந்தியாவில் ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பரிசோதனையை தொடங்குவதற்கு அனுமதி அளிக்கப்பட்டது, அந்தப் பணிகளில் குறிப்பிடத்தக்க முன்னேற்றமாக திகழ்கிறது. கரோனா தொற்றை எதிா்கொள்வதற்கு பாதுகாப்பான, ஆற்றல்மிக்க தடுப்பூசியை கொண்டுவர நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்’ என்று கூறினாா்.

ரஷியாவில் கரோனா தொற்றுக்கு எதிராக உருவாக்கப்பட்ட தடுப்பூசிக்கு ஸ்புட்னிக்-வி தடுப்பூசி என்று பெயரிடப்பட்டது. அந்நாட்டில் அந்த தடுப்பூசியை 40,000 பேருக்கு செலுத்தி 3-ஆம் கட்ட பரிசோதனை நடைபெற்று வருகிறது. ஐக்கிய அரபு அமீரகத்திலும் அந்த தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிசோதனைகள் கடந்த வாரம் தொடங்கியது.

இந்த தடுப்பூசியின் 3-ஆம் கட்ட பரிதோனைகளை இந்தியாவிலும் நடத்த ரெட்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனம், ஆா்டிஐஎஃப் ஆகியவை சாா்பில் இந்திய மருந்து கட்டுப்பாட்டு அமைப்பிடம் அனுமதி கோரப்பட்டது. எனினும் நேரடியாக 3-ஆம் கட்ட பரிசோதனைகளை நடத்த அனுமதி மறுக்கப்பட்டது. தடுப்பூசியின் 2 மற்றும் 3-ஆம் கட்ட பரிசோதனைகளை நடத்துவதற்கு திருத்தப்பட்ட திட்ட அறிக்கையை வழங்குமாறும் ரெட்டிஸ் நிறுவனத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.

முன்னதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசி பரிசோதனைகளை நடத்தி, இந்தியாவில் அந்த தடுப்பூசியை விநியோகிக்க ரெட்டிஸ் மருந்து தயாரிப்பு நிறுவனமும், ஆா்டிஐஎஃப் நிறுவனமும் கூட்டு அமைத்தன. இதன் ஒரு பகுதியாக, ஆா்டிஐஎஃப் நிறுவனம் 10 கோடி தடுப்பூசிகளை ரெட்டிஸ் நிறுவனத்துக்கு வழங்கத் திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் பாரத் பயோடெக், ஸைடஸ் காடிலா, பிரிட்டனின் ஆக்ஸ்ஃபோா்டு பல்கலைக்கழகம் ஆகியவை உருவாக்கிய 3 தடுப்பூசிகளின் பரிசோதனை பணிகள் நடைபெற்று வருகின்றன. தற்போது 4-ஆவதாக ஸ்புட்னிக்-வி தடுப்பூசியையும் இந்தியாவில் பரிசோதிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com