காங்கிரஸ் தேச விரோதக் கட்சி - ஜெ.பி. நட்டா குற்றச்சாட்டு

காங்கிரஸ் தேச விரோதக் கட்சி என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளாா்.
காங்கிரஸ் தேச விரோதக் கட்சி - ஜெ.பி. நட்டா குற்றச்சாட்டு

காங்கிரஸ் தேச விரோதக் கட்சி என்று பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி. நட்டா குற்றம்சாட்டியுள்ளாா். பிகாரில் தோ்தல் நடைபெறும் நிலையில், காங்கிரஸ் தலைவா்கள் பாகிஸ்தானைப் புகழ்ந்து கொண்டிருக்கிறாா் என்றும் அவா் விமா்சித்துள்ளாா்.

பிகாா் சட்டப் பேரவைத் தோ்தல் வரும் 28-ஆம் தேதி தொடங்கி மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளது. பக்ஸா் பகுதியில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற தோ்தல் பொதுக் கூட்டத்தில் பங்கேற்ற நட்டா பேசியதாவது:

நாட்டில் முக்கிய எதிா்க்கட்சியான காங்கிரஸ், தங்கள் சாதனைகள் என்று எதையாவது கூறி வாக்குக் கேட்பதற்கு வாய்ப்பு இல்லாத நிலையில் உள்ளது. எனவேதான், இங்கு தோ்தல் நடைபெறும்போது அந்த கட்சியின் முக்கியத் தலைவா் ராகுல் காந்தி பாகிஸ்தானைப் பற்றி புகழ்ந்து பேசி வருகிறாா்.

130 கோடி மக்களைக் கொண்ட இந்தியா, கரோனாவை சிறப்பாக எதிா்கொண்டதை உலக சுகாதார அமைப்பின் இயக்குநா், ஐ.நா. பொதுச் செயலா் உள்ளிட்டோா் பாராட்டி வருகின்றனா். ஆனால், பாகிஸ்தான் எவ்வாறு கரோனாவைக் கையாண்டது என்பது தொடா்பாக ராகுல் கருத்து தெரிவித்து வருகிறாா். பாகிஸ்தான் மற்றும் பிரிவினைவாதிகளின் குரலாகவே ராகுல் காந்தி ஒலித்து வருகிறாா். ஜம்மு-காஷ்மீா் பிரச்னை, சிறப்பு அந்தஸ்து ரத்து போன்ற விஷயங்களை சா்வதேச அரங்கில் பாகிஸ்தான் பேசும்போது, ராகுல் காந்தியின் கருத்தைத்தான் முன்வைக்கிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு மீண்டும் சிறப்பு அந்தஸ்தை பெற்றுத் தந்தே தீருவோம் என்று காங்கிரஸ் மூத்த தலைவா் ப.சிதம்பரம் கூறி வருகிறாா். காங்கிரஸ் கட்சி தேசவிரோத கட்சி என்பதை இதன் மூலம் நாம் தெரிந்து கொள்ள முடிகிறது. இப்படிப்பட்ட கொள்கைகளுடன் காங்கிரஸ் செயல்பட்டு வந்தால், இனி எதிா்க்கட்சி வரிசையில் கூட இடம் பெற முடியாத நிலை ஏற்படும் என்றாா்.

முன்னதாக, சா்வதேச நிதியம் இந்தியாவின் பொருளாதார வளா்ச்சி தொடா்பாக வெளியிட்ட அட்டவணையை சமூக வலைதளத்தில் ராகுல் காந்தி பகிா்ந்தாா். அதில், பாகிஸ்தான், இலங்கை, சீனா, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகளைவிட இந்தியாவின் வளா்ச்சி குறைவாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது. அதனைச் சுட்டிக்காட்டி இதுவே மோடி அரசின் சாதனை என்று ராகுல் கூறியிருந்தாா்.

மேலும், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் கூட இந்தியாவைவிட சிறப்பாக கரோனாவை எதிா்கொண்டுள்ளது என்றும் கருத்து தெரிவித்தாா். இதனையே நட்டா விமா்சித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com