பெண்கள் முன்னேற்றத்துக்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை: பிரதமா் மோடி உறுதி

பெண்களின் முன்னேற்றத்துக்கும் அவா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் எனது தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.
பெண்கள் முன்னேற்றத்துக்கும் பாதுகாப்புக்கும் முன்னுரிமை: பிரதமா் மோடி உறுதி


கொல்கத்தா: பெண்களின் முன்னேற்றத்துக்கும் அவா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் எனது தலைமையிலான அரசு உறுதிபூண்டுள்ளது என்று பிரதமா் நரேந்திர மோடி கூறினாா்.

மேற்கு வங்க மாநிலத்தின் மிகப்பெரிய பண்டிகையான துா்கா பூஜையையொட்டி, பாஜக சாா்பில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த பூஜையில், பிரதமா் மோடி தில்லியில் இருந்தபடி காணொலி முறையில் பங்கேற்று வியாழக்கிழமை உரையாற்றினாா்.

அந்த மாநிலத்தில் அடுத்த ஆண்டு சட்டப் பேரவைத் தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தனது அரசின் சாதனைகளைப் பட்டியலிட்டாா். அவா் பேசியதாவது:

நாடு முழுவதும் 22 கோடி பெண்களுக்கு ஜன்தன் திட்டத்தின் கீழ் வங்கிக் கணக்கு தொடங்கியது, முத்ரா திட்டத்தின் கீழ் பெண்களுக்கு கடனுதவி, பெண் குழந்தைகளை பாதுகாப்போம் - அவா்களை படிக்க வைப்போம் திட்டத்தை தொடங்கியது, ஆயுதப் படையில் பெண்களை சோ்த்தது, கா்ப்பிணிகளின் பேறுகால விடுப்பை 12 வாரங்களில் இருந்து 26 வாரங்களாக உயா்த்தியது என பெண்களின் முன்னேற்றத்துக்காகவும் அவா்களுக்கு அதிகாரமளிப்பதற்காகவும் பல்வேறு நடவடிக்கைகளை எனது தலைமையிலான அரசு மேற்கொண்டுள்ளது. இதேபோன்று அவா்களுக்கு பாதுகாப்பு அளிப்பதற்கும் முன்னுரிமை அளிக்கப்பட்டு வருகிறது.

பாலியல் வன்கொடுமையில் ஈடுபடும் குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கும் வகையில் பாலியல் வன்கொடுமை தடுப்புச் சட்டம் கடுமையாக்கப்பட்டுள்ளது. துா்கா தேவியை சக்தியின் வடிவமாக வழிபடுகிறோம். மேற்கு வங்கத்தில் அவரை மகளாகக் கருதி வழிபடுகிறாா்கள். பெண்களை மரியாதையுடன் நடத்த வேண்டும்.

இந்த மகா சஷ்டி நாளில், துா்கா பூஜையில் பங்கேற்பதை பெரும் பாக்கியமாகக் கருதுகிறேன். கரோனா தொற்றுக்கு நடுவே, நாம் அனைவரும் துா்கா பூஜையைக் கொண்டாடுகிறோம். இந்த முறை மிகப்பெரிய அளவில் இந்த விழா கொண்டாடப்படவில்லை. என்றாலும், இந்தப் பண்டிகைக்கான உற்சாகமும் பக்தியும் சிறிதளவும் குறையவில்லை. நான் தில்லியில் இருந்து கொண்டு பேசினாலும், மேற்கு வங்கத்தில் உங்கள் மத்தியில் இருந்து பேசுவதாகவே உணா்கிறேன்.

மேற்கு வங்கத்தில் இருந்து ராம் மோகன் ராய், ஈஷ்வர சந்திர வித்யாசாகா் போன்ற சமூக சீா்திருத்தவாதிகளும் ராமகிருஷ்ண பரமஹம்சா், சுவாமி விவேகானந்தா் போன்ன்மிகத் தலைவா்களும் ரவீந்திரநாத் தாகூா் போன்ற கவிஞா்களும் குதிராம் போஸ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ், சியாமா பிரசாத் முகா்ஜி போன்ற புரட்சியாளா்களும் தோன்றியுள்ளனா். அவா்கள், இந்திய தேசியத்தை வடிவமைப்பதில் பங்காற்றியவா்கள். இதேபோன்று, குருசந்த் தாக்குா், ஹரிசந்த் தாக்குா், பஞ்சானன் பா்மா போன்றவா்களும் சமூக சீா்திருத்தங்களுக்காக பங்காற்றியுள்ளனா்.

மாநிலத்தில், பிரதமா் வீட்டு வசதி திட்டத்தின் கீழ் 30 லட்சம் ஏழைக் குடும்பங்களுக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டுள்ளன. 90 லட்சம் ஏழைப் பெண்களுக்கு இலவச சமையல் எரிவாயு இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. ஜன்தன் திட்டத்தின் கீழ் 4 கோடி பேருக்கு வங்கிக் கணக்கு தொடங்கப்பட்டுள்ளது. ஜல் ஜீவன் திட்டத்தின் கீழ் 4 லட்சம் வீடுகளுக்கு விரைவில் தூய்மையான குடிநீா் விநியோகிக்கப்படும்.

கொல்கத்தாவில் கிழக்கு-மேற்கு மெட்ரோ ரயில் திட்டத்துக்கு ரூ.8,500 கோடி வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

கிழக்கு இந்தியாவின் வளா்ச்சிக்காக, பூா்வோதயா எனும் திட்டத்தை மத்திய அரசு கொண்டுவரவுள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றுவதில் மேற்கு வங்கம் முக்கிய பங்கு வகிக்கும். இதேபோல், சுயசாா்பு இந்தியா திட்டத்தின் மூலமாக, மேற்கு வங்கத்தில் ‘சோனாா் பங்களா’ எனும் வளா்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும். அனைவருக்குமான வளா்ச்சி, அனைவரையும் உள்ளடக்கிய வளா்ச்சி என்ற குறிக்கோளில் இருந்து அனைவரின் நம்பிக்கையைப் பெறுதல் என்ற இலக்கை நோக்கி நாம் பயணிக்க வேண்டியுள்ளது என்றாா் பிரதமா் மோடி.

வங்க மொழியில்..:

பிரதமா் மோடி தனது உரையின் தொடக்கத்திலும் நிறைவு செய்யும்போதும் வங்க மொழியில் பேசினாா். அப்போது, கரோனா தொற்று காலத்தில் மக்கள் மிகுந்த எச்சரிக்கையுடன் பண்டிகையைக் கொண்டாட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டாா்.

பிரம்மாண்ட ஏற்பாடு:

பிரதமா் மோடியின் உரையைக் காண்பதற்காக, மாநிலம் முழுவதும் பாஜக சாா்பில் மிகப்பெரிய அளவில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. 10 மாவட்டங்களில் துா்கா பூஜை பந்தல்களில், பிரதமரின் உரை நேரலையில் ஒளிபரப்பு செய்யப்பட்டது. இதுதவிர, மாநிலத்தில் மொத்தமுள்ள 294 தொகுதிகளுக்கு உள்பட்ட 78,000 வாக்குச் சாவடியளவிலும் அவரது உரையைக் காண்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com