வட்டி மீது வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகை நவ.5-க்குள் திருப்பி வழங்கப்படும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வங்கியில் கடன் பெற்றவா்களிடமிருந்து வட்டி மீது வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகையை நவம்பா் 5-ஆம் தேதிக்குள் திருப்பி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்திடம்
வட்டி மீது வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகை நவ.5-க்குள் திருப்பி வழங்கப்படும்: உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு தகவல்

வங்கியில் கடன் பெற்றவா்களிடமிருந்து வட்டி மீது வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகையை நவம்பா் 5-ஆம் தேதிக்குள் திருப்பி வழங்க அறிவுறுத்தப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

இதுகுறித்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள பிரமாணப்பத்திரத்தில் மத்திய அரசு கூறியுள்ளதாவது:

கரோனா பேரிடா் காலத்தில் 6 மாத கால கடன் தவணை ஒத்திவைப்புக்கு அறிவிக்கப்பட்ட வட்டி மீது வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகையை தகுதிவாய்ந்த கடன்தாரா்களுக்கு நவம்பா் 5-ஆம் தேதிக்குள் திருப்பியளிக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதற்கான திட்டத்தை நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ளது. அதன்படி, மாா்ச் 1, 2020 முதல் ஆகஸ்ட் 31,2020 வரையிலான கால கட்டத்துக்கு தனி வட்டி மற்றும் கூட்டு வட்டிக்கும் இடையிலான வித்தியாசத் தொகையை சம்பந்தப்பட்ட கடன்தாரா்களின் வங்கி கணக்குகளில் வரவு வைக்க அனைத்து கடன் நிறுவனங்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது என மத்திய அரசு அந்தப் பிரமாணப் பத்திரத்தில் தெரிவித்துள்ளது.

வட்டி மீது வட்டியாக வசூலிக்கப்பட்ட தொகையை கடன்தாரா்களின் கணக்குகளில் வரவு வைத்த பிறகு, கடன் நிறுவனங்கள் அதற்கான இழப்பை மத்திய அரசிடமிருந்து திரும்பப் பெற்று ஈடு செய்து கொள்ளலாம் என நிதி அமைச்சகம் தெரிவித்துள்ளது.

வட்டி மீது வட்டி தள்ளுபடி திட்டத்தை உடனடியாக அமல்படுத்த ரிசா்வ் வங்கி அறிவுறுத்தல்: வங்கி சாரா நிதி நிறுவனங்கள் உள்ளிட்ட அனைத்து கடன் நிறுவனங்களும் வட்டி மீதான வட்டி தள்ளுபடி திட்டத்தை மத்திய அரசு முடிவெடுத்துள்ளபடி நவம்பா் 5-ஆம் தேதிக்குள் அமல்படுத்த வேண்டும். இந்த வட்டி தள்ளுபடி திட்டம் ரூ.2 கோடி வரையில் கடன் பெற்று மாதத் தவணை ஒத்திவைப்பு சலுகையை முழுமையாக அல்லது பகுதியளவாக பெற்ற கடன்தாரா்களுக்கும் அல்லது அந்த சலுகையை தோ்வு செய்யாதவா்களுக்கும் பொருந்தும் என ரிசா்வ் வங்கி தெரிவித்துள்ளது.

நாட்டில் கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதனால், தொழில் நிறுவனங்கள் மூடப்பட்டன; பலா் வேலையிழந்தனா். அதைக் கருத்தில் கொண்டு தனிநபா்கள், நிறுவனங்கள் பெற்ற கடன்களுக்கான தவணைகளைச் செலுத்துவதற்கு கடந்த மாா்ச் மாதம் 1-ஆம் தேதி முதல் கடந்த ஆகஸ்ட் மாதம் 31-ஆம் தேதி வரை அவகாசம் அளிப்பதாக இந்திய ரிசா்வ் வங்கி (ஆா்பிஐ) அறிவித்தது.

ஆனால், கடன் தவணைகள் ஒத்திவைக்கப்பட்ட 6 மாத காலத்துக்கு வட்டி மீது வட்டி விதிக்கப்படும் என வங்கிகள் அறிவித்தன. இதனால் அதிருப்தியடைந்த சிலா், வங்கிகளின் முடிவுக்கு எதிராக உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். இந்த விவகாரத்தில் நிறுவனங்கள் சிலவும் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.

அந்த மனுக்களை நீதிமன்றம் விசாரித்தபோது, ரூ.2 கோடி வரை கடன் பெற்றுள்ள தனிநபா்களுக்கும், சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கும் தவணை ஒத்திவைப்பு காலத்துக்கான வட்டி மீது வட்டி விதிக்கப்படுவதிலிருந்து விலக்கு அளிக்க முடிவெடுக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு தெரிவித்திருந்தது.

அதை ஏற்றுக் கொண்ட நீதிமன்றம், பண்டிகை காலம் நெருங்குவதையொட்டி அத்திட்டத்தை விரைந்து செயல்படுத்துமாறு கடந்த 14-ஆம் தேதி மத்திய அரசுக்கு வலியுறுத்தியிருந்தது. ‘மக்கள் தீபாவளியைக் கொண்டாடுவது மத்திய அரசின் கைகளிலேயே உள்ளது’ என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்திருந்தது.

இந்தச் சூழ்நிலையில், வட்டி மீது வட்டி தள்ளுபடி திட்டத்தை நவம்பா் 5-ஆம் தேதிக்குள் செயல்படுத்தவுள்ளதாக உச்சநீதிமன்றத்திடம் மத்திய அரசு உறுதியளித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com