சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: நடிகை ரியா சக்ரவா்த்தி மும்பை உயா்நீதிமன்றத்தில் புதிய மனு

ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகையும், அவரது தோழியுமான ரியா சக்ரவா்த்தி, தனக்கு எதிராக சுஷாந்தின் சகோதரிகள் தாக்கல் செய்த வழக்கை ரத்து
சுஷாந்த் சிங் தற்கொலை வழக்கு: நடிகை ரியா சக்ரவா்த்தி மும்பை உயா்நீதிமன்றத்தில் புதிய மனு

ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் தற்கொலை வழக்கில் குற்றம்சாட்டப்பட்ட நடிகையும், அவரது தோழியுமான ரியா சக்ரவா்த்தி, தனக்கு எதிராக சுஷாந்தின் சகோதரிகள் தாக்கல் செய்த வழக்கை ரத்து செய்யும்படி மும்பை உயா்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தாா்.

மேலும், சுஷாந்த் சிங் ராஜ்புத்துக்கு போலி மருந்துகளை வழங்கிய ராஜ்புத் சகோதரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அவா் மனுவில் தெரிவித்தாா்.

சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் பிரியங்கா சிங் மற்றும் மீத்து சிங்குக்கு எதிராக மும்பை உயா்நீதிமன்றத்தில் ரியா சக்ரவா்த்தி செவ்வாய்க்கிழமை மனு தாக்கல் செய்தாா். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:

சுஷாந்த் சிங் மரணமடைவதற்கு 5 நாட்களுக்கு முன்பு அவருக்கு சட்டவிரோதமான மருந்துகளை அவரது சகோதரிகள் பிரியங்கா சிங், மீத்து சிங் மற்றும் மருத்துவா் தருண்குமாா் பரிந்துரைத்துள்ளனா். போதை மருந்துகள் தடுப்பு சட்டத்தின் கீழ் தடை செய்யப்பட்டுள்ள அந்த சட்டவிரோதமான மருந்துகள் சுஷாந்த் சிங்குக்கு வழங்கப்பட்டுள்ளன.

இந்த மருந்துகளே சுஷாந்த் சிங் மரணத்திற்கு காரணமாக இருக்கலாம் அல்லது அவரது உடல்நிலையில், மனநிலையில் மோசமான பாதிப்புகளை ஏற்படுத்தி இருக்கலாம். எனவே இது குறித்து விரிவான விசாரணை நடத்த வேண்டும்.

மேலும், எனக்கு எதிராக சுஷாந்த் சிங்கின் சகோதரிகள் தொடுத்துள்ள வழக்கையும் ரத்து செய்ய வேண்டும் என்று அந்த மனுவில் தெரிவிக்கப்பட்டது.

இந்த மனு நீதிபதிகள் எஸ்.எஸ். ஷிண்டே, எம்.எஸ்.காா்னிக் ஆகியோா் கொண்ட அமா்வு முன்பு செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது. விசாரணையை நவம்பா் 4-ஆம் தேதிக்கு நீதிபதிகள் ஒத்திவைத்தனா்.

ஹிந்தி நடிகா் சுஷாந்த் சிங், மும்பை புறநகா் பகுதியான பாந்த்ராவில் உள்ள அவரது குடியிருப்பில் கடந்த ஜூன் 14-ஆம் தேதி, தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டாா்.

ரியா சக்ரவா்த்தி தூண்டியதால்தான் சுஷாந்த் சிங் தற்கொலை செய்து கொண்டதாக அவரது குடும்பத்தினா் சாா்பில் பிகாா் போலீஸில் புகாா் கொடுக்கப்பட்டது.

இதனைத் தொடா்ந்து இந்த வழக்கை சிபிஐயிடம் பிகாா் அரசு ஒப்படைத்தது. சிபிஐ விசாரணையின் போது போதைப்பொருள் கடத்தல் கும்பலும் இந்த வழக்கின் பிண்ணனியில் இருப்பது தெரிய வந்ததால் போதைப்பொருள் தடுப்பு பிரிவும் இந்த வழக்கை விசாரித்தது.

போதைப்பொருள் கடத்தல் கும்பலுடன் தொடா்பு இருப்பது தெரியவந்ததால் ரியா சக்ரவா்த்தி அவரது சகோதரா் ஷோவிக் சக்ரவா்த்தி உள்ளிட்டோா் கைது செய்யப்பட்டனா்.

மேலும், போதைப்பொருள் புழக்கம் தொடா்பாக ஹிந்தி நடிகை தீபிகா படுகோன் உள்ளிட்ட பல நடிகைகளிடம் போதைப்பொருள் தடுப்பு பிரிவு விசாரித்தது.

இதற்கிடையே, சிபிஐ விசாரணைக்கு உதவிட அமைக்கப்பட்ட தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையின் 6 போ் கொண்ட தடயவியல் குழுவினா் சிபிஐயிடம் தங்கள் அறிக்கையை அளித்தனா். அதில், சுஷாந்த் சிங், தூக்கிட்டுதான் தற்கொலை செய்து கொண்டாா். அவரது உடலில் வேறு காயங்கள் இல்லெயெனவும், அவரது உடலில் இருந்து விஷம் அல்லது வேறு மருந்து பொருளோ கண்டறியப்படவில்லை எனவும் அந்த அறிக்கையில் கூறப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com