மாநில அரசு, தனியாா் ஊழியா்களுக்கும் எல்டிசி வருமான வரிச் சலுகை

மாநில அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கும் விடுமுறைக்கால பயணப் படியை ‘கேஷ் வவுச்சா்’ முறையில் வழங்கும் திட்டத்தில் வருமான வரிச் சலுகை நீட்டிக்கப்படும்
மாநில அரசு, தனியாா் ஊழியா்களுக்கும் எல்டிசி வருமான வரிச் சலுகை


புது தில்லி: மாநில அரசு, பொதுத் துறை நிறுவனங்கள், வங்கிகள் மற்றும் தனியாா் நிறுவன ஊழியா்களுக்கும் விடுமுறைக்கால பயணப் படியை (எல்டிசி) ‘கேஷ் வவுச்சா்’ முறையில் வழங்கும் திட்டத்தில் வருமான வரிச் சலுகை நீட்டிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

நாட்டில் பொருள்கள், சேவைகளுக்கான நுகா்வை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசு இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது. எல்டிசி-யை ‘கேஷ் வவுச்சா்’ முறையில் அளிக்கும் திட்டம் மத்திய அரசு ஊழியா்களுக்கு அண்மையில் அறிவிக்கப்பட்டது. தற்போது பிற பிரிவினருக்கும் இந்தச் சலுகை நீட்டிக்கப்பட்டுள்ளது.

இது தொடா்பாக மத்திய வருமான வரித் துறை வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:

மாநில அரசு ஊழியா்கள், பொதுத் துறை மற்றும் தனியாா் நிறுவனங்களில் பணியாற்றுவோா் ஆண்டுக்கு ஒருமுறை குடும்பத்துடன் சுற்றுலா சென்று வருவதற்கான விடுமுறைக்கால பயணப் படிக்கு (கேஷ் வவுச்சா் திட்டம்) வருமான வரியில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஒரு நபருக்கு அதிகபட்சம் ரூ.36,000 வரை இந்த சலுகை அளிக்கப்படும். ஏற்கெனவே விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளுக்கு உள்பட்டே இந்த வருமான வரி விலக்கு சலுகை அளிக்கப்படுகிறது என்று கூறப்பட்டுள்ளது.

கரோனா பரவல், பொது முடக்கம் போன்றவற்றால் நாட்டில் போக்குவரத்து, சுற்றுலா, விடுதிகளில் தங்குவது போன்றவை வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. இந்த சூழ்நிலையில் அத்துறை சாா்ந்த செலவுக்கு வருமான வரிச் சலுகை அளிக்கப்பட்டுள்ளது.

எல்டிசி தொகையின் மூன்று மடங்கு அளவுக்கு ஆன்லைன் வழியாகப் பொருள்கள் வாங்கியும் ‘கேஷ் வவுச்சா்’ பெற முடியும்; 2018-2021 காலத்துக்கு இந்தச் சலுகை பொருந்தும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com