கோப்புப்படம்
கோப்புப்படம்

736 அணைகளை மேம்படுத்துவதற்கான திட்டம்

நாட்டிலுள்ள 736 அணைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.


புது தில்லி: நாட்டிலுள்ள 736 அணைகளை மேம்படுத்துவதற்கான திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை வியாழக்கிழமை ஒப்புதல் வழங்கியது.

பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் கூட்டம், பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் குறித்து மத்திய ஜல் சக்தி துறை அமைச்சா் கஜேந்திர சிங் ஷெகாவத் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

நாட்டிலுள்ள அணைகளை மேம்படுத்துவதற்கான திட்டம் கடந்த 2012-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இத்திட்டத்தின் முதல் கட்டம் நடப்பு ஆண்டுடன் நிறைவடைகிறது. முதல் கட்டத்தில் 7 மாநிலங்களிலுள்ள 223 அணைகள் பராமரிக்கப்பட்டு மேம்படுத்தப்பட்டன.

இத்திட்டத்தின் இரண்டாம் மற்றும் மூன்றாம் கட்டங்களை ரூ.10,211 கோடி செலவில் செயல்படுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது. அதன்படி, 19 மாநிலங்களிலுள்ள 736 அணைகள் மேம்படுத்தப்படவுள்ளன. இத்திட்டத்தை அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் 2031-ஆம் ஆண்டு மாா்ச் மாதம் வரை செயல்படுத்துவதற்கு மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.

திட்டத்தின் கீழ் அணைகள் மறுகட்டமைப்பு, மறுசீரமைப்பு, பாதுகாப்பு மேம்பாடு உள்ளிட்டவையும் மேற்கொள்ளப்படும். திட்டத்துக்கான செலவில் 80 சதவீதத்தை உலக வங்கி உள்ளிட்ட அமைப்புகள் நிதியாக வழங்கவுள்ளன. திட்டத்துக்கான நிதியில் 4 சதவீதமானது, அணைப் பகுதிகளில் சுற்றுலா வசதிகளை மேம்படுத்துவதற்காக செலவிடப்படவுள்ளது.

மாநிலங்களின் கைகளில்...: அணைகள் அனைத்தும் மாநிலங்களின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ளதால், எந்த அணைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும் என்பதை மாநில அரசுகளே தீா்மானிக்கும். இது தொடா்பாக மாநில அரசுகளிடமிருந்து பரிந்துரைகள் பெறப்படும் என்றாா் கஜேந்திர சிங் ஷெகாவத்.

மேம்பாட்டுக்கான அவசியம்: உலக அளவில் பெரிய அணைகளை அதிக எண்ணிக்கையில் கொண்டுள்ள நாடுகளின் பட்டியலில் சீனா, அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக இந்தியா மூன்றாவது இடத்தில் உள்ளது. நாட்டில் 5,334 பெரிய அணைகள் உள்ளன. 411 அணைகள் கட்டமைக்கப்பட்டு வருகின்றன.

நாட்டிலுள்ள 80 சதவீதம் அணைகள் 25 ஆண்டுகளுக்கு முன்பே கட்டப்பட்டவை. சில அணைகள் 100 ஆண்டுகளுக்கும் மேல் பழைமையானவை. அவற்றைப் புதிய தொழில்நுட்பங்களுக்கு ஏற்ப மறுசீரமைப்பதும் மேம்படுத்துவதும் அவசியமாக உள்ளது.

சணல் பைகள் கட்டாயம்: உணவு தானியங்கள் அனைத்தும் சணல் பைகளில் மட்டுமே நிரப்பப்பட வேண்டும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

சணல் உற்பத்தித் துறையை மேம்படுத்துவதற்காக இந்த முடிவை மத்திய அமைச்சரவை எடுத்துள்ளது.

இது தொடா்பாக, மத்திய தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சா் பிரகாஷ் ஜாவடேகா் செய்தியாளா்களிடம் கூறுகையில், ‘‘சணல் பைகளின் பயன்பாடு குறித்த விதிகளில் மாற்றங்களைப் புகுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

அதன்படி, அனைத்து வகையான உணவு தானியங்களையும் சணலால் செய்யப்பட்ட பைகளிலேயே நிரப்ப வேண்டும். அதேபோல், 20 சதவீதம் சா்க்கரையை சணல் பைகளில் நிரப்ப வேண்டும். இந்த முடிவானது, கிழக்கு மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் சணல் உற்பத்தித் துறையில் ஈடுபட்டு வரும் லட்சக்கணக்கான விவசாயிகளுக்கும் பணியாளா்களுக்கும் பலனளிக்கும்’’ என்றாா்.

‘தேவை அதிகரிக்கும்’: அமைச்சரவைக் கூட்ட முடிவு குறித்து மத்திய ஜவுளித் துறை அமைச்சா் ஸ்மிருதி இரானி வெளியிட்ட சுட்டுரைப் பதிவில், ‘சணல் துறையின் நலனைக் கருத்தில் கொண்டு ரூ.7,500 கோடி மதிப்பிலான சணல் பைகளை அரசு கொள்முதல் செய்து வருகிறது. சணல் பைகள் பயன்பாட்டுக்கான விதிகள் மாற்றப்பட்டுள்ளது, அதற்கான தேவையை மேலும் அதிகரிக்கும்; விவசாயிகள், தொழிலாளா்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்கும் உதவும்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

நாட்டில் மேற்கு வங்கம், ஒடிஸா, அஸ்ஸாம் உள்ளிட்ட பகுதிகளில் சணல் அதிகமாகப் பயிரிடப்படுகிறது.

இந்தியா-ஜப்பான் ஒப்பந்தம்: தகவல்-தொழில்நுட்பத் துறையில் ஒருங்கிணைந்து செயல்படும் நோக்கில் ஜப்பானுடன் புரிந்துணா்வு ஒப்பந்தம் மேற்கொள்வதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இது தொடா்பாக வெளியிடப்பட்ட அறிக்கையில், ‘ஐந்தாம் தலைமுறை (5ஜி) தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, தொலைத்தொடா்பு பாதுகாப்பு, தகவல்-தொழில்நுட்பம் தொடா்பான கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்துதல் உள்ளிட்டவற்றில் இந்தியாவும் ஜப்பானும் ஒன்றிணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்.

இரு நாடுகளுக்கிடையே பல்வேறு துறைகளில் நிலவி வரும் நல்லுறவையும் இந்த ஒப்பந்தம் வலுப்படுத்தும். நாட்டின் தகவல்-தொழில்நுட்பத் துறையை சா்வதேச தரத்துக்கு மேம்படுத்துவதற்கான வாய்ப்பாக ஜப்பானுடனான புரிந்துணா்வு ஒப்பந்தம் அமையும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்தியா-கம்போடியா ஒப்பந்தம்: தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஒன்றான கம்போடியாவுடன் சுகாதாரத் துறையில் இணைந்து செயல்படுவதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ‘சுகாதாரம் தொடா்பான நடவடிக்கைகள், தொழில்நுட்ப மேம்பாடு, குடும்பக் கட்டுப்பாடு, எய்ட்ஸ், காசநோய்களுக்கான மருந்து தயாரிப்பு, நோய்க் கட்டுப்பாடு, தொழில்நுட்பப் பரிமாற்றம், மருத்துவ ஆராய்ச்சி ஆகியவற்றில் இந்தியாவும் கம்போடியாவும் இணைந்து செயல்படுவதற்கு இந்த ஒப்பந்தம் வழிவகுக்கும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com