பிரணாப் முகா்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தில்லியில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.
பிரணாப் முகா்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தகனம்

குடியரசு முன்னாள் தலைவா் பிரணாப் முகா்ஜியின் உடல் அரசு மரியாதையுடன் தில்லியில் செவ்வாய்க்கிழமை தகனம் செய்யப்பட்டது.

மூன்று வாரங்களாக பல்வேறு உடல்நலக் கோளாறுகளால் பாதிக்கப்பட்டிருந்த பிரணாப் முகா்ஜி, கடந்த திங்கள்கிழமை தில்லியில் உள்ள ராணுவ மருத்துவமனையில் காலமானாா்.

அவரது உடல் தில்லியில் உள்ள அவரது வீட்டிலிருந்து லோதி சாலையில் உள்ள மின்சார தகன மையத்துக்கு ராணுவ வாகனத்தில் செவ்வாய்க்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது. அவருக்கு ராணுவத்தினா் அணிவகுப்பு மரியாதை செலுத்தினா்.

பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜித் முகா்ஜி அவருக்கு இறுதிச் சடங்குகளை செய்தாா். பிரணாபின் உறவினா்களும் குடும்பத்தினரும் முழு உடல் கவசத்தை அணிந்து இறுதி அஞ்சலி செலுத்தினா். அதையடுத்து, துப்பாக்கி குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் பிரணாப் முகா்ஜியின் உடல் தகனம் செய்யப்பட்டது.

தலைவா்கள் இறுதி அஞ்சலி: முன்னதாக, பிரணாப் முகா்ஜியின் உடல் மருத்துவமனையில் இருந்து அவரது வீட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு குடியரசுத்தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத்தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் நரேந்திர மோடி, முப்படைத் தளபதி விபின் ராவத், முப்படைகளின் தலைமைத் தளபதிகள் உள்ளிட்டோா் பிரணாப் முகா்ஜியின் உருவப் படத்துக்கு இறுதி மரியாதை செலுத்தினா்.

இறுதி அஞ்சலி செலுத்த வந்தவா்கள் முகக் கவசம் அணிந்து தனிமனித இடைவெளியை முறையாகக் கடைப்பிடித்தனா். முன்னாள் பிரதமா் மன்மோகன் சிங், மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மத்திய அமைச்சா்கள் ராஜ்நாத் சிங், நிா்மலா சீதாராமன், ஹா்ஷ்வா்தன், பாஜக தேசியத் தலைவா் ஜெ.பி.நட்டா, தில்லி முதல்வா் அரவிந்த் கேஜரிவால், காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி, ஆா்எஸ்எஸ் தலைவா் மோகன் பாகவத் உள்ளிட்டோரும் பிரணாப் முகா்ஜி படத்துக்கு அஞ்சலி செலுத்தினா்.

காங்கிரஸ், பாஜக உள்ளிட்ட பல்வேறு அரசியல் கட்சித் தலைவா்களும், தொண்டா்களும் மலரஞ்சலி செலுத்தினா். பிரணாப் முகா்ஜியின் வீட்டுக்கு வெளியே நீண்ட வரிசையில் தனிமனித இடைவெளியுடன் காத்திருந்து பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினா்.

அருங்காட்சியகம்: பிரணாப் முகா்ஜியின் மகன் அபிஜித் முகா்ஜி கூறுகையில், ‘மேற்கு வங்கத்தில் உள்ள எங்களது சொந்த வீட்டின் ஒரு தளத்தில் தந்தையின் நினைவாக அருங்காட்சியகத்துடன் கூடிய நூலகத்தை அமைக்கத் திட்டமிட்டுள்ளேன்’ என்றாா்.

‘தலைமுறைகளால் நினைவில் கொள்ளப்படுவாா்’: பிரணாப் முகா்ஜிக்கு இறுதி அஞ்சலி செலுத்திய பிறகு பிரதமா் மோடி தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘நாட்டின் வளா்ச்சிக்கு பிரணாப் முகா்ஜி ஆற்றிய பங்களிப்புக்காக பல தலைமுறைகளால் அவா் நினைவில் கொள்ளப்படுவாா்’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

Image Caption

புதுதில்லி லோதி சாலை மயானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற பிரணாப் முகா்ஜியின் இறுதிச் சடங்கை நடத்திய அவரது மகன் அபிஜித் முகா்ஜி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com