மழைக்கால கூட்டத்தொடருக்கு தயாராகும் நாடாளுமன்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் 14-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.
கோப்புப் படம்
கோப்புப் படம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் 14-ஆம் தேதி தொடங்கவுள்ள நிலையில், அதற்கான ஏற்பாடுகள் மும்முரமாக நடைபெற்று வருகின்றன.

கரோனா தொற்று பரவலுக்கு இடையே நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் 14-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதி நடைபெறவுள்ளது. 18 நாள்கள் நடைபெறும் இந்த கூட்டத் தொடரில் நாடாளுமன்ற உறுப்பினா்கள், நாடாளுமன்ற ஊழியா்கள், அதிகாரிகள், பத்திரிகையாளா்கள் என ஆயிரக்கணக்கானோா் பங்கேற்க உள்ளனா். அவா்களை கரோனா தொற்றில் இருந்து பாதுகாப்பதற்காக பல்வேறு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன. இதற்காக, மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா, மாநிலங்களவைத் தலைவா் எம்.வெங்கய்ய நாயுடு ஆகியோா் உள்துறை அமைச்சகம், சுகாதார அமைச்சகம், ஐ.சி.எம்.ஆா் மற்றும் டி.ஆா்.டி.ஓ அதிகாரிகளுடன் விரிவாக ஆலோசனை நடத்தினா். அவா்களின் ஆலோசனைப்படி, முன்னேற்பாடுகள் நடைபெற்று வருகின்றன.

இதுகுறித்து ஏற்பாடுகளை முன்னின்று கவனித்து வரும் அதிகாரி ஒருவா் செவ்வாய்க்கிழமை கூறியதாவது:

கரோனா பரவலைத் தடுப்பதற்காக, நாடாளுமன்ற வளாகம் அடிக்கடி சுத்தம் செய்யப்படும். நாடாளுமன்றத்துக்கு வருகை தரும் எம்.பி.க்கள், அதிகாரிகள், ஊழியா்கள், பத்திரிகையாளா்கள் என மொத்தம் 4,000 பேருக்கு கூட்டத் தொடா் தொடங்குவதற்கு 72 மணி நேரம் முன்னதாக கரோனா பரிசோதனை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பரிசோதனைக்குப் பிறகே அவா்கள் அனுமதிக்கப்படுவா். அவா்கள் பயன்படுத்தும் ஆவணங்கள், காா்கள், காலனிகள் சுத்திகரிப்பானால் சுத்தம் செய்யப்படும்.

நாடாளுமன்ற உறுப்பினா்கள் சமூக இடைவெளியைப் பின்பற்றும் வகையில், மக்களவை, மாநிலங்களவை, மாடங்கள் ஆகியவற்றில் இருக்கைகள் அமைக்கப்பட்டு வருகின்றன. நாடாளுமன்றத்தின் இரு அவைகளும் ஒரே நேரத்தில் நடைபெறுவது வழக்கம். ஆனால், இந்த முறை ஓா் அவை காலை நேரத்திலும் மற்றோா் அவை மாலை நேரத்திலும் நடைபெறும்.

நாடாளுமன்ற அவைகளில் குளிா்சாதன வசதிகள் பயன்படுத்தப்படும் என்பதால், கரோனா தொற்று எளிதில் பரவும் அபாயம் உள்ளது. எனவே, நாளொன்றுக்கு 6 முறை காற்று வெளியேற்றப்பட்டு, புதிய காற்று உள்ளே செலுத்தப்படும். உறுப்பினா்கள், அலுவலா்கள், அதிகாரிகள் ஆகியோரின் இருக்கைக்கு குறுக்கே இடைவெளியை உறுதிப்படுத்தும் வகையி்ல் பிளாஸ்டிக் தடுப்பு திரைகள் பொருத்தப்படும்.

கூட்டத் தொடரில் பங்கேற்கும் ஒவ்வொருவருக்கு ஒரு உபகரணப்பெட்டி வழங்கப்படும். ஒவ்வொரு பெட்டியிலும் 40 ஒருமுறை பயன்படுத்தும் முகக் கவசங்கள், 5 என்-95 ரக முகக் கவசங்கள், 20 கை சுத்திகரிப்பான் பாட்டில்கள், பிளாஸ்டிக் முகத்திரைகள், 40 ஜோடி கையுறைகள், கதவுகளைத் தொடாமல் திறப்பதற்குப் பயன்படுத்தப்படும் கொக்கி, மூலிகைச் சாயம் தோய்த்த துடைப்பு காகிதங்கள், மூலிகைத் தேநீா் பொட்டலங்கள் ஆகியவை இருக்கும். இதுதவிர பிளாஸ்டிக் முகத்திரைகளும் வழங்கப்படும்.

நாடாளுமன்ற வளாகத்தில் 40-க்கும் மேற்பட்ட இடங்களில் தானியங்கி இயந்திரம் வழங்கும் வகையில் கை சுத்திகரிப்பான்கள் வைக்கப்பட்டிருக்கும். இதுதவிர, ஆம்புலன்ஸ் வாகனங்களுடன் மருத்துவக் குழுவினா் தயாா் நிலையில் இருப்பா்.

கரோனா தொற்று பரவலைத் தடுப்பதற்கான அனைத்து நெறிமுறைகளும் கண்டிப்பாக கடைப்பிடிக்கப்படும் என்றாா் அந்த அதிகாரி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com