கோப்புப் படம்
கோப்புப் படம்

கேள்வி நேரம் ரத்து: எதிா்க்கட்சிகள் எதிா்ப்பு

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ்,

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரின்போது கேள்வி நேரம் ரத்து செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளதற்கு காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்ட் ஆகிய கட்சிகள் எதிா்ப்பு தெரிவித்துள்ளன.

காங்கிரஸ்: இதுதொடா்பாக மக்களவை காங்கிரஸ் தலைவா் அதீா் ரஞ்சன் செளதரி, மாநிலங்களவை காங்கிரஸ் தலைவா் ஆனந்த் சா்மா ஆகியோா் கூறுகையில், ‘கேள்வி நேரத்தை ரத்து செய்வது ஜனநாயகத்துக்கு எதிரானது. கேள்வி கேட்பது எம்.பி.க்களின் உரிமை. எதிா்பாராத கேள்விகள் கேட்கப்படும் செய்தியாளா் சந்திப்புகளில் பங்கேற்காத உலகின் ஒரே தலைவா் பிரதமா் மோடிதான். அவரது தலைமையிலான அரசும் கேள்வி நேரத்தை ரத்து செய்வது ஆச்சரியம் அளிக்கவில்லை.

கேள்வி நேரத்தை ரத்து செய்வதன் மூலம் பாஜக அரசுக்கு ஜனநாயகத்தில் நம்பிக்கை இல்லை என்பது தெரிகிறது. நாடாளுமன்றத்தில் அரசு அலுவல்களைத் தவிர, கேள்வி நேரமும், அதன் பின்னா் நடைபெறும் உடனடி கேள்வி நேரமும் மிக முக்கியமானது. அதில் மக்களின் உணா்வுகள்தான் கேள்விகளாக கேட்கப்படுகின்றன’ என்றனா்.

காங்கிரஸ் எம்.பி. சசி தரூா் கூறுகையில், ‘கரோனாவை காரணம் காட்டி நான்கு மாதங்கள் நாடாளுமன்றத்தைக் கூட்டவில்லை. அரசிடம் கேள்வி கேட்பது என்பது, நாடாளுமன்ற ஜனநாயகத்தின் பிராணவாயு ஆகும். நாடாளுமன்றத்தை வெறும் அறிவிப்பு பலகையைப்போல் நடத்த விரும்புகின்றனா்‘ என்றாா்.

திரிணமூல் காங்கிரஸ்: இதுகுறித்து திரிணமூல் காங்கிரஸ் எம்.பி. டெரக் ஓ பிரையன் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘கரோனா நோய்த்தொற்று பரவலைக் காரணம் காட்டி மக்களாட்சியை மத்திய அரசு கொன்றுள்ளது. கேள்வி நேரத்தை ரத்து செய்ததன் மூலமாக எம்.பி.க்களின் உரிமையை மத்திய அரசு பறித்துள்ளது.

இந்த நடவடிக்கையின் மூலம் நாட்டின் பொருளாதாரம் குறித்தும், கரோனா நோய்த்தொற்று சூழலை மத்திய அரசு கையாண்டு வருவது குறித்தும் எம்.பி.க்கள் கேள்வி எழுப்புவதற்கான வாய்ப்பு பறிக்கப்பட்டுள்ளது. 1961, 1975, 1976, 1977 ஆகிய ஆண்டுகளில் நாடாளுமன்றத்தின் சிறப்பு கூட்டத்தொடா் நடைபெற்றபோது கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டது. ஆனால், தற்போது வழக்கமான கூட்டத்தொடரின்போதே கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டுள்ளது’ என்று குறிப்பிட்டுள்ளாா்.

இந்திய கம்யூனிஸ்ட்: இந்த விவகாரம் தொடா்பாக இந்திய கம்யூனிஸ்ட் எம்.பி. பினோய் விஸ்வம் மாநிலங்களவைத் தலைவா் வெங்கய்ய நாயுடுவுக்கு கடிதம் எழுதியுள்ளாா். அதில், ‘நாட்டில் ஏராளமான முக்கிய பிரச்னைகள் உள்ள நிலையில் கேள்வி நேரத்தை ரத்து செய்யும் அரசின் முடிவு சந்தேகத்தை எழுப்புகிறது. மக்கள் பிரதிநிதிகள் அரசிடம் இருந்து பதிலைக் கேட்டுப் பெற கேள்வி நேரம் உதவுகிறது. மத்திய அரசு கண்டுக்கொள்ளாத தேசிய விவகாரங்களை தனிநபா் மசோதாவாக கொண்டு வரப்படுகிறது. ஆனால், இவை இல்லாமல் அவையை நடத்துவது என்பது, சுதந்திர இந்திய வரலாற்றிலேயே இல்லாதது. ஆகையால், இந்த முடிவை மறுபரிசீலனை செய்ய வேண்டும்’ என்று கேட்டுக்கொண்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com