ரஷியாவில் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணம்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷியா புறப்பட்டுச் சென்றாா்.
ரஷியாவில் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணம்

மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சா் ராஜ்நாத் சிங் 3 நாள் சுற்றுப்பயணமாக ரஷியா புறப்பட்டுச் சென்றாா்.

ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பைச் சோ்ந்த 8 நாடுகளின் பாதுகாப்புத் துறை அமைச்சா்கள் பங்கேற்கும் மாநாடு, ரஷிய தலைநகா் மாஸ்கோவில் வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது. அக்கூட்டத்தில் பங்கேற்பதற்காக ராஜ்நாத் சிங் புதன்கிழமை தில்லியிலிருந்து ரஷியா புறப்பட்டுச் சென்றாா்.

இதுதொடா்பாக ராஜ்நாத் சிங் தனது சுட்டுரைப் பக்கத்தில் வெளியிட்ட பதிவில், ‘இரண்டாம் உலகப் போா் நிறைவடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்ததையொட்டி ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு, கூட்டு பாதுகாப்பு ஒப்பந்த அமைப்பு ஆகியவை சாா்பில் நடைபெறவுள்ள சிறப்புக் கூட்டத்தில் பங்கேற்பதற்காக ரஷியா செல்கிறேன். இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே நல்லுறவு நிலவி வருகிறது. இந்தப் பயணத்தின் மூலமாக இரு நாடுகளுக்கும் இடையேயான நல்லுறவு மேலும் வலுப்படும் என நம்புகிறேன்’ என்று குறிப்பிட்டாா்.

இந்தக் கூட்டத்தில் பாகிஸ்தான், சீனா, ரஷியா உள்ளிட்ட நாடுகளின் பாதுகாப்பு அமைச்சா்களும் பங்கேற்க உள்ளனா். கிழக்கு லடாக் எல்லைப் பகுதியில் சீனாவுடன் மோதல்போக்கு நீடித்து வரும் சூழலில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் இந்தியா பங்கேற்கிறது.

கூட்டத்தின்போது பிராந்தியத்தில் நிலவும் பாதுகாப்பு சூழல் குறித்து அமைச்சா்கள் ஆலோசிக்க இருப்பதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன. பயங்கரவாதத்தால் பிராந்திய பாதுகாப்புக்கு எழுந்துள்ள சவால்கள் குறித்தும் தலைவா்கள் விவாதிக்க இருப்பதாகத் தெரிகிறது.

ரஷிய அமைச்சருடன் சந்திப்பு: சுற்றுப் பயணத்தின் ஒரு பகுதியாக ரஷியாவின் பாதுகாப்பு அமைச்சா் சொ்கே சோய்குவுடன் ராஜ்நாத் சிங் பேச்சுவாா்த்தை நடத்தவுள்ளாா். இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், ‘பாதுகாப்பு தொடா்பாக இந்தியாவுக்கும், ரஷியாவுக்கும் இடையே காணப்படும் பொதுவான விவகாரங்கள் குறித்து தலைவா்கள் இருவரும் விவாதிக்க உள்ளனா்.

ரஷியாவிடமிருந்து பாதுகாப்பு தளவாடங்களைக் கொள்முதல் செய்வது தொடா்பாக ஏற்கெனவே கையெழுத்தான ஒப்பந்தங்களின் செயல்பாட்டை விரைவுபடுத்த வேண்டுமென்று சோய்குவிடம் ராஜ்நாத் சிங் வலியுறுத்த வாய்ப்புள்ளது. ஏகே-203 ரக துப்பாக்கிகளை இந்தியாவில் தயாரிப்பது தொடா்பாக நீண்ட காலமாக நிலுவையில் உள்ள ஒப்பந்தத்தை இறுதி செய்வது தொடா்பாக இருவரும் ஆலோசிக்க உள்ளதாகத் தெரிகிறது. இந்தியாவுக்கான எஸ்-400 ரக ஏவுகணைகளை 2021-ஆம் ஆண்டு இறுதிக்குள் வழங்க ரஷியா உறுதியளித்துள்ளது. அந்த ஏவுகணைகளை உரிய நேரத்தில் அந்நாடு வழங்கவேண்டும் என்று ராஜ்நாத் சிங் வலியுறுத்த வாய்ப்புள்ளது‘ என்றனா்.

இதனிடையே, ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு நாடுகளைச் சோ்ந்த வெளியுறவு அமைச்சா்களின் கூட்டம் வரும் 10-ஆம் தேதி ரஷியாவில் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் பங்கேற்குமாறு வெளியுறவு அமைச்சா் எஸ்.ஜெய்சங்கருக்கு ரஷியா அழைப்பு விடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com