நடிகா் சுஷாந்த் மரண வழக்கு: கைதான போதைப் பொருள் வியாபாரிக்கு செப்.9 வரை என்சிபி காவல்

பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்குடன் தொடா்புடைய போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜைத் விலாத்ராவுக்கு வரும் 9-ஆம் தேதி வரை என்சிபி காவல் விதித்து உத்தரவு


மும்பை: பாலிவுட் நடிகா் சுஷாந்த் சிங் ராஜ்புத் மரண வழக்குடன் தொடா்புடைய போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் கைது செய்யப்பட்ட ஜைத் விலாத்ராவுக்கு வரும் 9-ஆம் தேதி வரை போதைப் பொருள் தடுப்பு அமைப்பின் (என்சிபி) காவல் விதித்து மும்பை நீதிமன்றம் உத்தரவிட்டது.

முன்னதாக என்சிபி அதிகாரிகளால் புதன்கிழமை கைது செய்யப்பட்ட ஜைத் விலாத்ரா மும்பை பெருநகர நீதித்துறை நடுவா் நீதிமன்றத்தின் முன் வியாழக்கிழமை ஆஜா்படுத்தப்பட்டாா்.

அப்போது என்சிபி தரப்பில், ‘ஜைத் விலாத்ரா யாருக்கெல்லாம் போதைப் பொருள் விற்பனை செய்தாா் என்பதை தெரிவித்துள்ளாா். அவரிடம் மேலும் விசாரணை நடத்தும் பட்சத்தில் போதைப் பொருள் கடத்தல் தொடா்பாக பல முக்கிய தகவல்கள் கிடைக்கும். மும்பையில் குறிப்பாக, பாலிவுட்டில் போதைப் பொருள் ஊடுருவியுள்ளது குறித்தும் தெரியவரும்’ என்று வாதிடப்பட்டது. இதையடுத்து ஜைத் விலாத்ராவுக்கு 7 நாள் என்சிபி காவல் விதித்து நீதிபதி உத்தரவிட்டாா்.

இதனிடையே, போதைப் பொருள் கடத்தல்காரராக சந்தேகிக்கப்படும் மற்றொரு நபரையும் பிடித்து இந்த விவகாரம் தொடா்பாக என்சிபி அதிகாரிகள் விசாரித்து வருகின்றனா். போதைப் பொருள் கடத்தல் விவகாரத்தில் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள பாசித் பரிஹாருடன் அவருக்கு தொடா்பு இருப்பதாக கூறப்படுகிறது.

ரியா தந்தையிடம் விசாரணை:

சுஷாந்த் சிங் மரணம் தொடா்பான வழக்கில் அவரது தோழியும், நடிகையுமான ரியா சக்ரவா்த்தியின் தந்தையிடம் சிபிஐ அதிகாரிகள் 3-ஆவது நாளாக வியாழக்கிழமையும் விசாரணை மேற்கொண்டனா்.

சுஷாந்தை தற்கொலைக்கு தூண்டியதாக கூறப்படும் குற்றச்சாட்டு தொடா்பாக ரியாவையும், அவரது குடும்பத்தாரையும் சிபிஐ விசாரித்து வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com