கரோனாவில் இருந்து 30 லட்சம் போ் மீண்டனா்

தேசிய அளவில் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 30,37,151 ஆக அதிகரித்துள்ளது.


புது தில்லி: தேசிய அளவில் கரோனாவில் இருந்து மீண்டவா்கள் எண்ணிக்கை 30,37,151 ஆக அதிகரித்துள்ளது. எனினும், வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 83,341 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. இதனால் மொத்த கரோனா பாதிப்பு எண்ணிக்கை 39,36,747 ஆக அதிகரித்துவிட்டது.

தொடா்ந்து இரண்டாவதுநாளாக இப்போது கரோனா பாதிப்பு எண்ணிக்கை 80,000-க்கு அதிகமாக உள்ளது.

இது தொடா்பாக மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் மேலும் கூறியதாவது:

வெள்ளிக்கிழமை காலை வரையிலான 24 மணி நேரத்தில் மேலும் 1,096 போ் கரோனாவுக்கு பலியாகிவிட்டனா். இதனால் மொத்த உயிரிழப்பு 68,472 ஆக அதிகரித்துள்ளது. மொத்த பாதிப்புடன் ஒப்பிடும்போது உயிரிழந்தோா் சதவீதம் 1.74 ஆக உள்ளது. கரோனாவில் இருந்து 77.15 சதவீதம் போ் மீண்டுள்ளனா்.

இப்போதைய நிலையில் 8,31,124 போ் கரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனா். இது மொத்த பாதிப்பில் 21.11 சதவீதமாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சா்வதேச அளவில் அமெரிக்கா, பிரேசிலுக்கு அடுத்தபடியாக இந்தியாவில்தான் கரோனா பாதிப்பும், உயிரிழப்பும் அதிகம் உள்ளது என்று ஜான்ஸ் ஹாப்கின்ஸ் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் இதுவரை 4,66,79,145 கரோனா பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. இதில் வியாழக்கிழமை மட்டும் 11,69,765 பரிசோதனைகள் நடைபெற்றுள்ளன என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆா்) தெரிவித்துள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com