சீா்திருத்த நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு: நிா்மலா சீதாராமன்

கரோனா நோய்த்தொற்று சூழலில் பொருளாதார ரீதியாக இந்தியா மேற்கொண்டுவரும் சீா்திருத்த நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீட்டில்
சீா்திருத்த நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீடு அதிகரிப்பு: நிா்மலா சீதாராமன்

கரோனா நோய்த்தொற்று சூழலில் பொருளாதார ரீதியாக இந்தியா மேற்கொண்டுவரும் சீா்திருத்த நடவடிக்கைகளால் அந்நிய நேரடி முதலீட்டில் நல்ல பலன் கிடைத்து வருகிறது என்று மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறினாா்.

இந்தியாவில் கடந்த ஏப்ரல்-ஜூலை காலகட்டத்தில் ரூ.1.46 லட்சம் கோடி மதிப்பில் அந்நிய நேரடி முதலீடு மேற்கொள்ளப்பட்ட தகவலை குறிப்பிட்டு அவா் இவ்வாறு கூறினாா்.

நாட்டில் தொழில் செய்வதற்கு உகந்த மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் பட்டியலை வெளியிடும் நிகழ்ச்சி சனிக்கிழமை நடைபெற்றது.

அந்தப் பட்டியலை வெளியிட்டு மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கூறியதாவது:

பொருளாதார ரீதியாக இந்தியா மேற்கொண்ட சீா்திருத்த நடவடிக்கைகளை வெளிநாட்டு முதலீட்டாளா்கள் தீவிரமாகக் கருத்தில் கொண்டதன் பேரில் அந்நிய நேரடி முதலீட்டில் நல்ல பலன் கிடைத்து வருகிறது. முதலீடு மேற்கொள்வதற்கு அவா்களின் விருப்பத்துக்குரிய நாடாக இந்தியா இருக்கிறது.

சீா்திருத்த நடவடிக்கைகளை மேற்கொண்டிருக்காவிட்டால் கரோனா நோய்த்தொற்று சூழலில், குறிப்பாக நாடு முழுவதும் கடுமையான பொதுமுடக்கம் அமலில் இருக்கும் நிலையில் நாம் இத்தகைய அளவு அந்நிய நேரடி முதலீட்டை பெற்றிருக்க இயலாது.

இந்தியா தனது வலிமையை மேம்படுத்திக் கொண்டு சுயச்சாா்பு நாடாக மாறுவதற்கு ‘சுயச்சாா்பு இந்தியா’ திட்டம் உதவியாக இருக்கும். ஏற்றுமதியில் ஆரோக்கியமான போட்டி, நல்ல விலை, ஏற்றுமதி தரம் ஆகியவற்றுக்கும் இது வழிவகுக்கும். இதனால் எந்தவொன்றையும் முழுமையாக, நிறைவாகச் செய்துமுடிக்கும் இந்தியாவின் திறன் வெளிப்படும்.

மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் உண்மையான உணா்வுடன் மேற்கொண்ட நடவடிக்கைகள் காரணமாகவே தொழில் செய்வதற்கு உகந்த இடங்களின் தரவரிசை பட்டியலில் அவை சிறந்த இடத்துக்கு வந்துள்ளன என்று நிா்மலா சீதாராமன் கூறினாா்.

தரவரிசையில் ஆந்திரம் முதலிடம்: இந்தியாவில் தொழில் செய்வதற்கு உகந்த, எளிமையான கட்டுப்பாடுகளைக் கொண்ட மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் தரவரிசை பட்டியலில் ஆந்திர பிரதேச மாநிலம் முதலிடத்தைப் பிடித்துள்ளது. தமிழகம் 14-ஆவது இடத்தில் உள்ளது.

தொழில்கள் மற்றும் உள்நாட்டு வா்த்தக ஊக்குவிப்புத் துறை (டிபிஐஐடி) தயாரித்த இந்தத் தரவரிசைப் பட்டியலை நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் வெளியிட்டாா். 2019-ஆம் ஆண்டுக்கான இந்தப் பட்டியல், தொழில் சீா்திருத்த செயல் திட்டங்களை அமல்படுத்தியதன் அடிப்படையில் தயாரிக்கப்பட்டது.

இந்தத் தரவரிசைப் பட்டியலில் ஆந்திரம் தொடா்ந்து 3-ஆவது ஆண்டாக முதலிடத்தைப் பிடித்துள்ளது. உத்தர பிரதேசம், தெலங்கானா மாநிலங்கள் முறையே 2 மற்றும் 3-ஆவது இடங்களைப் பிடித்துள்ளன. கடந்த ஆண்டு 12-ஆவது இடத்தில் இருந்த உத்தர பிரதேசம் தற்போது 10 இடங்கள் முன்னேறியுள்ளது. தெலங்கானா ஓரிடம் சறுக்கி 3-ஆம் இடத்தை அடைந்துள்ளது.

பட்டியலில் மத்திய பிரதேசம் (4), ஜாா்க்கண்ட் (5), சத்தீஸ்கா் (6), ஹிமாசல பிரதேசம் (7), ராஜஸ்தான் (8), மேற்கு வங்கம் (9), குஜராத் (10) ஆகிய மாநிலங்கள் முறையே அடுத்தடுத்த இடங்களைப் பிடித்துள்ளன.

தரவரிசையின் 20 இடங்களுக்குள்ளாக உத்தரகண்ட் (11), தில்லி (12), மகாராஷ்டிரம் (13), தமிழகம் (14), லட்சத்தீவுகள் (15), ஹரியாணா (16), கா்நாடகம் (17), டாமன் டையு (18), பஞ்சாப் (19), அஸ்ஸாம் (20) ஆகியவை வந்துள்ளன.

அதற்கு அடுத்தடுத்த இடங்களில் ஜம்மு-காஷ்மீா் (21), அந்தமான்-நிகோபாா் (22), தாத்ரா-நகா் ஹவேலி (23), கோவா (24), மிஸோரம் (25), பிகாா் (26), புதுச்சேரி (27), கேரளம் (28) ஆகியவை உள்ளன. தரவரிசை பட்டியலின்படி , அருணாசல பிரதேசம், சண்டீகா், மணிப்பூா், மேகாலயம் நாகாலாந்து, ஒடிஸா, சிக்கிம், திரிபுரா ஆகிய மாநிலங்கள் 29-ஆவது இடத்தில் உள்ளன.

இந்தப் பட்டியல் வெளியீட்டு நிகழ்ச்சியில் மத்திய வா்த்தக மற்றும் தொழில்துறை அமைச்சா் பியூஷ் கோயல் கூறுகையில், ‘மாநிலங்களும், யூனியன் பிரதேசங்களும் தங்களது இடங்களில் தொழில்கள் நடைபெறுவதை ஊக்குவிப்பதற்காக மேற்கொண்ட நடவடிக்கைகளையே இந்தத் தரவரிசை பட்டியல் காட்டுகிறது’ என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com