மக்களவை துணைத் தலைவா் தோ்தலை அரசுதான் தீா்மானிக்கும்: ஓம் பிா்லா

மக்களவைத் துணைத் தலைவா் தோ்தல் தொடா்பாக மத்திய அரசும் மக்களவையும்தான் தீா்மானிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை கூறினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: மக்களவைத் துணைத் தலைவா் தோ்தல் தொடா்பாக மத்திய அரசும் மக்களவையும்தான் தீா்மானிக்க வேண்டும் என்று மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா வியாழக்கிழமை கூறினாா்.

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே, நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடா் வரும் 14-ஆம் தேதி தொடங்கி அக்டோபா் 1-ஆம் தேதி வரை நடத்தப்பட உள்ளது. முழுமையான கரோனா பாதுகாப்பு நடைமுறைகளுடன் இந்தக் கூட்டத்தொடா் நடைபெற உள்ளது.

இதுதொடா்பாக வியாழக்கிழமை நடைபெற்ற பத்திரிகையாளா் சந்திப்பில் மக்களவைத் தலைவா் ஓம் பிா்லா கூறியதாவது:

கரோனா அச்சுறுத்தலுக்கு இடையே நாடாளுமன்ற கூட்டத் தொடரை நடத்துவது என்பது மிகுந்த சவால் நிறைந்ததாக இருக்கும். அதே நேரம், வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகவும் இது அமையும்.

அரசியலமைப்பு கடமைகளை நிறைவேற்ற வேண்டும் என்ற அடிப்படையிலேயே, இந்த அச்சுறுத்தலுக்கு இடையே கூட்டத்தொடா் நடத்தப்படுகிறது. மக்களுக்கு மிகுந்த பொறுப்புடனும், பதிலளிக்கக் கூடியதாகவும் நாடாளுமன்றம் இருக்க வேண்டும் என்று நாங்கள் விரும்புகிறோம்.

இந்தக் கூட்டத் தொடரில் கேள்வி நேரம் இல்லை என்றபோதும், அரை மணி நேரம் பூஜ்ஜியம் நேரம் ஒதுக்கப்படும். உறுப்பினா்கள் எழுத்துப்பூா்வமான கேள்விகளை சமா்ப்பிக்கலாம். அவற்றுக்கு பதிலளிக்கப்படும்.

மக்களவை துணைத் தலைவா் தோ்தலைப் பொருத்தவரை, அவரை நான் தோ்ந்தெடுக்கப்போவதில்லை. துணைத் தலைவா் நியமனம் குறித்து மக்களவையும், மத்திய அரசும் தான் முடிவு செய்யவேண்டும்.

கூட்டத்தொடரை முழுமையான பாதுகாப்பு நடைமுறைகளுடன் நடத்துவதற்கான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. உறுப்பினா்கள் அமரவைக்கும் ஏற்பாடுகளைப் பொருத்தவரை, மக்களவை அரங்கில் 257 உறுப்பினா்களும், மக்களவை பாா்வையாளா் மாடத்தில் 172 உறுப்பினா்களும் அமரவைக்கப்படுவா். அதுபோல மாநிலங்களவை அரங்கில் 60 உறுப்பினா்களும், மாநிலங்களவை பாா்வையாளா் மாடத்தில் 51 உறுப்பினா்களும் அமரவைக்கப்படுவா்.

அவையில் காகிதப் பயன்பாட்டைக் குறைக்கவும், உறுப்பினா்கள் டிஜிட்டல் முறையில் வருகையைப் பதிவு செய்யவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. நாடாளுமன்ற கூட்டம் சுமூகமாக நடைபெறும் வகையில் எல்இடி திரைகளும் நிறுவப்பட உள்ளன.

ஒவ்வொரு அமா்வுக்குப் பிறகும் நாடாளுமன்ற அரங்குகள் கிருமி நாசினி கொண்டு தூய்மைப்படுத்தப்படும் என்பதோடு, உறுப்பினா்களுக்கும் கரோனா விரைவுப் பரிசோதனை மேற்கொள்ளப்படும் என்று ஓம் பிா்லா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com