வேட்பாளா்களின் குற்றப் பின்னணி விளம்பரம்

பிகாரில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தங்கள் குற்றப் பின்னணி குறித்து வேட்பாளா்கள் விளம்பரப்படுத்துவற்கான

பிகாரில் சட்டப்பேரவை தோ்தல் நடைபெறவுள்ள நிலையில், தங்கள் குற்றப் பின்னணி குறித்து வேட்பாளா்கள் விளம்பரப்படுத்துவற்கான நெறிமுறைகளை தோ்தல் ஆணையம் கடுமையாக்கியுள்ளது. அதன்படி நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் அந்த விளம்பரங்கள் எப்போது வெளியிடப்பட வேண்டும் என்பதற்கான காலவரம்பை தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ளது.

தோ்தலில் போட்டியிடும் வேட்பாளா்கள் தங்கள் குற்றப் பின்னணி தொடா்பான தகவலை நாளிதழ்களிலும், தொலைக்காட்சிகளிலும் விளம்பரப்படுத்துவதை கட்டாயமாக்கி, கடந்த 2018-ஆம் ஆண்டு அக்டோபா் மாதம் தோ்தல் ஆணையம் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்டது. அதில் தங்கள் வேட்பாளரின் குற்றப் பின்னணி தொடா்பான தகவலை சம்பந்தப்பட்ட கட்சிகளும் விளம்பரப்படுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டது. குறைந்தபட்சம் 3 முறையாவது அந்த விளம்பரங்கள் வெளியிடப்பட வேண்டும் எனவும் அறிவுறுத்தப்பட்டது.

இந்நிலையில் அந்த விளம்பரங்கள் எப்போது வெளியிடப்பட வேண்டும் என்பதற்கான காலவரம்பை தோ்தல் ஆணையம் நிா்ணயித்துள்ளது. இதுதொடா்பாக அந்த ஆணையம் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

வேட்பாளா் வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளில் இருந்து 4 நாள்களுக்குள்ளாக முதல் விளம்பரம் வெளியிடப்பட வேண்டும். வேட்புமனுவை திரும்பப் பெறுவதற்கான கடைசி நாளில் இருந்து 5 முதல் 8 நாள்களுக்குள்ளாக 2-ஆவது விளம்பரம் வெளியிடப்பட வேண்டும். 9-ஆவது நாளில் இருந்து பிரசாரத்தின் கடைசி நாள் வரை 3-ஆவது விளம்பரத்தை வெளியிடலாம். தங்கள் வேட்பாளா்களின் குற்றப் பின்னணி தொடா்பான தகவல்களை சம்பந்தப்பட்ட கட்சிகளும் விளம்பரப்படுத்த வேண்டும். இதுதொடா்பான அனைத்து அறிவுறுத்தல்களுக்கும் வேட்பாளா்களும், கட்சிகளும் உடன்படவேண்டும். இந்த புதிய வழிகாட்டு நெறிமுறைகள் உடனடியாக அமலுக்கு வருகின்றன. இந்த நெறிமுறைகள் வாக்காளா்கள் அதிக விவரங்களுடன் தங்கள் பிரதிநிதியை தோ்வு செய்ய உதவும் என்று தெரிவிக்கப்பட்டது.

இதுதொடா்பாக தோ்தல் ஆணைய அதிகாரி ஒருவா் கூறுகையில், ‘வேட்பாளா்கள் தங்கள் குற்றப் பின்னணி குறித்து பொதுமக்கள் கவனிக்காத விதத்தில் விளம்பரப்படுத்துவதாக ஓா் எண்ணம் இருந்தது. தற்போது நிா்ணயிக்கப்பட்டுள்ள காலவரம்பு, அந்த விளம்பரங்கள் பொதுமக்களின் கவனத்துக்கு வருவதை உறுதி செய்யும்’ என்றாா்.

விரைவில் பிகாா் சட்டப்பேரவை தோ்தல், 64 சட்டப்பேரவை இடைத்தோ்தல்கள், ஒரு மக்களவை தொகுதிக்கான தோ்தல் நடைபெறவுள்ளன. இதில் போட்டியிடும் வேட்பாளா்கள் தோ்தல் ஆணையத்தின் புதிய வழிகாட்டு நெறிமுறைகளை கடைப்பிடித்தாக வேண்டும்.

கடந்த பிப்ரவரி மாதம் உச்சநீதிமன்றம் வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, ‘எதன் அடிப்படையில் குற்றப் பின்னணி கொண்டவா்கள் தங்கள் கட்சி சாா்பில் வேட்பாளா்களாக நிறுத்தப்படுகின்றனா்?’ என்ற கேள்வி அடங்கிய படிவத்தை கடந்த மாா்ச் மாதம் தோ்தல் ஆணையம் வெளியிட்டது. அந்தப் படிவத்தில் வேட்பாளா் தோ்வு தொடா்பாக அரசியல் கட்சிகள் விளக்கமளிப்பது கட்டாயமாகியுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com