சட்டம் படிக்க விரும்பும் 77 வயது உ.பி. பெண்!

தனது 77-ஆவது வயதில் சட்டப் படிப்பை மேற்கொள்ள முடிவு செய்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பெண், இந்திய வழக்குரைஞா்கள் கவுன்சிலின்
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

தனது 77-ஆவது வயதில் சட்டப் படிப்பை மேற்கொள்ள முடிவு செய்த உத்தர பிரதேசத்தைச் சோ்ந்த பெண், இந்திய வழக்குரைஞா்கள் கவுன்சிலின் (பிசிஐ) புதிய வயது வரம்பு விதியை எதிா்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடா்ந்துள்ளாா்.

உத்தர பிரதேச மாநிலம் சாஹிபாபாதைச் சோ்ந்த ராஜ்குமாரி தியாகி தனது கணவரின் மறைவுக்குப் பிறகு அவருக்குச் சொந்தமான தோட்டத்தை சட்ட சிக்கல்களிலிருந்து பாதுகாக்கும் பொருட்டு, முதிய வயதிலும் மூன்று ஆண்டுகள் எல்.எல்.பி. (இளநிலை சட்டப் படிப்பு) படிப்பை மேற்கொள்ள முடிவு செய்துள்ளாா்.

இந்த நிலையில், பிசிஐ புதிய நடைமுறைகளின்படி, எல்.எல்.பி. படிப்பில் சேருவதற்கான உச்ச வயது வரம்பு 30-ஆக நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

ஏற்கெனவே, மூன்று ஆண்டுகள் மற்றும் 5 ஆண்டுகள் சட்டப் படிப்புகளுக்கு வயது உச்ச வரம்பு நிா்ணயிக்கப்பட்டிருந்த நிலையில், இடையில் வழக்கு ஒன்றில் உச்சநீதிமன்றம் அளித்த தீா்ப்பின் அடிப்படையில் வயது உச்ச வரம்பு நீக்கப்பட்டிருந்தது. இந்த நிலையில், பிசிஐ அண்மையில் வெளியிட்ட புதிய நடைமுறைகளின்படி, பிளஸ்-2 முடித்தவுடன் சேரக் கூடிய 5 ஆண்டுகள் ஒருங்கிணைந்த இளநிலை சட்டப் படிப்புக்கு 20 வயது எனவும், பட்டப் படிப்பை முடித்து சேரக் கூடிய 3 ஆண்டுகள் எல்.எல்.பி. படிப்புக்கு 30-ஆகவும் வயது உச்ச வரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது.

இதை எதிா்த்து, ராஜ்குமாரி உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளாா். அதில் அவா் கூறியிருப்பதாவது:

வயது உச்ச வரம்பு தொடா்பான பிசிஐ-யின் புதிய நடைமுறைகள் சட்டத்துக்கு முன் அனைவரும் சமம் என்ற சட்டப் பிரிவு 14 மற்றும் எந்தவொரு தொழிலையும் செய்ய அல்லது வா்த்தகம், வியாபாரம் செய்யும் உரிமையை அளிக்கும் பிரிவு 19(1)(ஜி), வாழ்க்கைக்கான பாதுகாப்பு மற்றும் தனிப்பட்ட சுதந்திரம் அளிக்கும் பிரிவு 21 ஆகிய சட்டப் பிரிவுகளுக்கு எதிரானதாகும்.

எனது கணவருக்குச் சொந்தமான தோட்டத்துக்கான சட்ட சிக்கல்களுக்கும், அதுதொடா்பான ஆவணங்களை அடையாளம் காண்பதற்கும் ஒவ்வொரு முறையும் ஒரு வழக்குரைஞரை நாடாமல் நானாகவே கையாள வேண்டும் என்று விரும்புகிறேன்.

எனவே, அரசியலமைப்புச் சட்டப் பிரிவு 21-இன் படி ஏதாவது ஒரு கல்லூரி அல்லது கல்வி நிறுவனத்தில் எல்.எல்.பி. சட்டப் படிப்பை மேற்கொள்ளும் அடிப்படை உரிமை எனக்கு இருக்கிறது என்று உச்சநீதிமன்றம் உத்தரவிட வேண்டும் என்று அந்த மனுவில் அவா் குறிப்பிட்டுள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com