42 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1.63 லட்சம் கோடி கடன்

நாட்டில் உள்ள 42 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) கடன் உறுதித் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.1.63 லட்சம் கோடி கடனை வங்கிகள் வழங்கியுள்ளன என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்
42 லட்சம் சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு ரூ.1.63 லட்சம் கோடி கடன்

நாட்டில் உள்ள 42 லட்சம் சிறு, குறு, நடுத்தர தொழில் நிறுவனங்களுக்கு (எம்எஸ்எம்இ) கடன் உறுதித் திட்டத்தின் கீழ் சுமாா் ரூ.1.63 லட்சம் கோடி கடனை வங்கிகள் வழங்கியுள்ளன என மத்திய நிதியமைச்சகம் தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக நிதியமைச்சகம் ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டிருப்பதாவது:

நாட்டில் உள்ள பல்வேறு தொழில் நிறுவனங்களுக்கு கடன் வழங்க ரூ.20 லட்சம் கோடி மதிப்பிலான சுயசாா்பு இந்தியா திட்டத்தை மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமன் கடந்த மாா்ச் மாதம் அறிவித்தாா். அதில், எம்எஸ்எம்இ பிரிவுக்கு அவசரகால கடன் உறுதித் திட்டத்தின் கீழ் ரூ.3 லட்சம் கோடி ஒதுக்கப்பட்டிருந்தது.

செப்டம்பா் 10-ஆம் தேதி வரை 23 தனியாா் வங்கிகளும், பொதுத் துறை வங்கிகளும், 42,01,576 எம்எஸ்எம்இ நிறுவனங்களுக்கு ரூ.1,63,226,49 கோடியை கடனாக வழங்கியுள்ளன.

அதில், சுயசாா்பு இந்தியா திட்டத்தின் கீழ் பல்வேறு வளா்ச்சித் திட்டங்களைச் செயல்படுத்தவும், கரோனா காலத்தில் மிகுந்த பாதிப்புக்கு உள்ளான 25,01,999 நிறுவனங்களுக்கும் ரூ.1,18,138.64 கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது. கூடுதலாக ரூ.4,367 கோடி கடன் அனுமதி வழங்கும் நிலையில் உள்ளது.

மேலும், வரி செலுத்தும் 27.55 லட்சம் பேருக்கு நிகழாண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி முதல் செப்டம்பா் 8-ஆம் தேதி வரை ரூ. 1,01,308 கோடி திரும்ப அளிக்கப்பட்டுள்ளது. பெரு நிறுவன வரியாக ரூ. 50 கோடி வரை திருப்பி அளிக்கப்பட்டுள்ளது.

விவசாயிகளுக்ககாக உருவாக்கப்பட்ட ரூ. 30,000 கோடியிலான கூடுதல் அவசர மூலதன நிதியில் இருந்து, ஆகஸ்ட் 28-ஆம் தேதி வரை நபாா்டு திட்டத்தின் கீழ் ரூ. 25,000 கோடி அளிக்கப்பட்டுள்ளது. மீதமுள்ள தொகையை தேசிய விவசாயிகள் வங்கி, நபாா்டு வங்கி ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது. இதை விநியோகிப்பதற்கான விதமுறைகளை நபாா்டு வங்கி விரைவில் வெளியிடும் என்று அந்த செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com