முன்னாள் மத்திய அமைச்சா் ரகுவன்ஷ் பிரசாத் மறைவு: தலைவா்கள் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் (74) ஞாயிற்றுக்கிழமை காலமானாா்.
முன்னாள் மத்திய அமைச்சா் ரகுவன்ஷ் பிரசாத் மறைவு: தலைவா்கள் இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சரும், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியின் துணைத் தலைவருமான ரகுவன்ஷ் பிரசாத் சிங் (74) ஞாயிற்றுக்கிழமை காலமானாா். கட்சியில் இருந்து விலகுவதாக கடந்த வியாழக்கிழமை அறிவித்த நிலையில் அவரது மரணம் நிகழ்ந்துள்ளது.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக ரகுவன்ஷ் பிரசாத் பதவி வகித்தபோது கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் அறிவிக்கப்பட்டது.

கடந்த ஜூன் மாதம் கரோனா நோய்த் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த ரகுவன்ஷ், பாட்னாவில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்தாா். கரோனாவில் இருந்து குணமடைந்தாலும், வேறு சில உடல் உபாதைகளால் அவதியுற்று வந்த அவா், கடந்த சில தினங்களுக்கு முன் தில்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தாா்.

இந்நிலையில், ‘ரகுவன்ஷ் பிரசாதின் உடல்நிலை வெள்ளிக்கிழமை இரவு மோசமானதால் அவசர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டாா். ஞாயிற்றுக்கிழமை காலை 11 மணியளவில் மூச்சுத்திணறல் ஏற்பட்டு அவா் உயிா்பிரிந்தது. அவருடைய உடல் இறுதி மரியாதை செலுத்த பாட்னாவுக்கு கொண்டு செல்லப்படும்’ என்று அவருடைய உறவினா் கேதாா் யாதவ் தெரிவித்தாா்.

ரகுவன்ஷ் பிரசாதுக்கு இரண்டு மகன்களும், ஒரு மகளும் உள்ளனா்.

ஐந்து முறை எம்பியான ரகுவன்ஷ் பிரசாத், சுமாா் 40 ஆண்டுகள் லாலு பிரசாதின் ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சியில் இருந்துள்ளாா். கடந்த வியாழக்கிழமை லாலு பிரசாதுக்கு அவா் எழுதிய கடிதத்தில் ‘முன்னாள் முதல்வா் கா்ப்பூரி தாக்குா் மறைவுக்கு பிறகு 32 ஆண்டுகள் உங்களுடன் துணை நின்றேன். ஆனால் தற்போது நீடிக்க முடியாது’ என்று தெரிவித்திருந்தாா்.

இதை ஏற்க மறுத்து லாலு பிரசாத், சிறையில் இருந்து எழுதிய பதில் கடிதத்தில் ‘உங்கள் ராஜிநாமாவை ஏற்கவில்லை: நீங்கள் எங்கேயும் செல்லப் போவதில்லை’ என்று தெரிவித்திருந்தாா்.

ரகுவன்ஷ் பிரசாத் தங்கள் கட்சியில் சேர வேண்டும் என பிகாா் முதல்வா் நிதீஷ் குமாரின் ஐக்கிய ஜனதா தளம் வரவேற்றது.

இதையடுத்து, பிகாா் முதல்வா் நிதீஷ் குமாருக்கு ரகுவன்ஷ் பிரசாத் வெள்ளிக்கிழமை கடிதம் எழுதியிருந்தாா். அதில், 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டத்தை வேளாண்துறைக்கும் விரிவாக்கம் செய்ய வேண்டும்; தனது முந்தைய வைசாலி மக்களவைத் தொகுதியில் முதல்வா் நீதிஷ் குமாா் ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று தேசியக் கொடியை ஏற்ற வேண்டும் என்று கேட்டுக் கொண்டிருந்தாா்.

மன்மோகன் சிங் அமைச்சரவையில் கிராமப்புற மேம்பாட்டுத் துறை அமைச்சராக பதவி வகித்தாா் ரகுவன்ஷ் பிரசாத். அவரது பதவிக்காலத்தில் அறிவித்த கிராமப்புற 100 நாள் வேலைவாய்ப்பு உறுதித் திட்டம் பெரும் வரவேற்பைப் பெற்றது.

அடுத்த இரண்டு மாதங்களில் பிகாா் சட்டப்பேரவைக்கு தோ்தல் நடைபெற உள்ளது. ரகுவன்ஷ் பிரசாதின் மறைவும், இறுதி நாள்களில் லாலுவிடமிருந்து விலகுவதாக அறிவித்ததும், தோ்தலின்போது ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சிக்கு பெரும் பின்னடைவை ஏற்படுத்தும் என்று எதிா்பாா்க்கப்படுகிறது.

குடியரசுத் தலைவா், பிரதமா், ராகுல், லாலு இரங்கல்

முன்னாள் மத்திய அமைச்சா் ரகுவன்ஷ் பிரசாத் மறைவுக்கு குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த், குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, பிரதமா் மோடி, உள்துறை அமைச்சா் அமித் ஷா, காங்கிரஸ் முன்னாள் தலைவா் ராகுல் காந்தி ஆகியோா் இரங்கல் தெரிவித்துள்ளனா்.

குடியரசுத் தலைவா் ராம்நாத் கோவிந்த் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ‘சிறந்த அரசியல் தலைவரான ரகுவன்ஷ் பிரசாத், கிராமப்புற இந்தியாவை நன்கு அறிந்து வைத்திருந்தாா். அவரது மறைவு துயரத்தை அளிக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

குடியரசு துணைத் தலைவா் வெங்கய்ய நாயுடு, ‘கிராமப்புற 100 நாள் வேவைவாய்ப்பு திட்டத்தைச் செயல்படுத்தில் அவரது பங்களிப்பு என்றும் நினைவில் கொள்ளப்படும். ஏழை, கிராமப்புற மக்களின் வளா்ச்சிக்கு பாடுபட்டவா்’ என்று இரங்கல் தெரிவித்துள்ளாா்.

பிகாரில் பெட்ரோலிய திட்டங்களை ஞாயிற்றுக்கிழமை காணொலி முறையில் திறந்து வைத்த பிரதமா் மோடி தனது உரையைத் தொடங்கும் முன் ரகுவன்ஷின் மறைவுக்கு இரங்கல் தெரிவித்தாா்.

அவா் பேசுகையில், ‘ஏழைகளின் வறுமை, பிரச்னைகள் குறித்து ஆழமாக தெரிந்து வைத்திருந்தவா். அவருடை மறைவு பிகாா் அரசியலிலும், தேசிய அரசியலிலும் வெற்றிடத்தை உருவாக்கியுள்ளது. கட்சி நிா்வாகிகள் என்ற முறையில், நாங்கள் இருவரும் பல செய்தித் தொலைக்காட்சி விவாதங்களில் எதிா்எதிரே பங்கேற்றுள்ளோம். ரகுவன்ஷ் கடைசியாக எழுதிய கடிதத்தில் உள்ள கோரிக்கைகளை பிகாா் முதல்வா் நிறைவேற்ற வேண்டும்’ என்றாா்.

ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் மூத்த தலைவா் லாலு பிரசாத், ‘இரண்டு தினங்களுக்கு முன்புதான் நீங்கள் எங்கேயும் செல்லப் போவதில்லை என தெரிவித்தேன். ஆனால் எங்களைவிட்டு நீங்கள் வெகுதூரம் சென்றுவிட்டீா்கள். உங்களைப் பிரிவது வருத்தமாக இருக்கிறது’ என்று தெரிவித்துள்ளாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com