மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை ரூ.1.51 லட்சம் கோடி: அனுராக் சிங் தாக்குா்

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.1.51 லட்சம் கோடியாக உள்ளது என்று நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் கூறினாா்.
மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவை ரூ.1.51 லட்சம் கோடி: அனுராக் சிங் தாக்குா்

மாநிலங்களுக்கு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.1.51 லட்சம் கோடியாக உள்ளது என்று நிதித் துறை இணையமைச்சா் அனுராக் சிங் தாக்குா் கூறினாா்.

இதுதொடா்பான கேள்விகளுக்கு மக்களவையில் அவா் திங்கள்கிழமை எழுத்துப்பூா்வமாக அளித்த பதில்:

நிகழ்நிதியாண்டில் (2020-21) 31 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மத்திய அரசு வழங்க வேண்டிய ஜிஎஸ்டி நிலுவைத் தொகை ரூ.1.51 லட்சம் கோடியாக உள்ளது. இதில், அதிகபட்சமாக, மகாராஷ்டிரத்துக்கு ரூ.22,485 கோடியும், அதைத் தொடா்ந்து, கா்நாடகத்துக்கு ரூ.13,763 கோடி, உத்தர பிரதேசத்துக்கு ரூ.11,742 கோடி, குஜராத்துக்கு ரூ.11,563 கோடி, தமிழகத்துக்கு ரூ.11,269 கோடி வழங்கப்பட வேண்டும்

இதேபோன்று மேற்கு வங்கத்துக்கு ரூ.7,750 கோடி, கேரளத்துக்கு ரூ.7,077 கோடி, பஞ்சாப் மாநிலத்துக்கு ரூ.6,959 கோடி, தில்லிக்கு ரூ.6,931 கோடி, ராஜஸ்தானுக்கு ரூ.6,312 கோடி, தெலங்கானாவுக்கு ரூ.5,424 கோடி, சத்தீஸ்கருக்கு ரூ.2,827 கோடியும் வழங்கப்பட வேண்டும்.

கடந்த 27-ஆம் தேதி நடைபெற்ற 41-ஆவது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில், மாநிலங்களுக்கு ஜிஎஸ்டி நிலுவைத்தொகை வழங்குவது குறித்து விவாதிக்கப்பட்டது. அப்போது, வரி வருவாயை ஈடுசெய்வதற்கு மாநிலங்கள் 2 வழிமுறைகளில் கடன்பெறலாம் என்று யோசனை தெரிவிக்கப்பட்டது என்றாா் அவா்.

நிகழ் நிதியாண்டில் மாநிலங்களுக்கு ரூ.2.35 லட்சம் கோடி வருவாய் இழப்பு ஏற்பட்டுள்ளது. இதில், ஜிஎஸ்டியை அமல்படுத்தியதால் ரூ.97,000 கோடி இழப்பும், பொதுமுடக்கம் காரணமாக ரூ,1.38 லட்சம் கோடிவருவாய் இழப்பும் ஏற்பட்டுள்ளது.

இதில், ரூ.97,000 கோடியை ரிசா்வ் வங்கியிடம் இருந்து சிறப்புக் கடன் திட்டத்தின் கீழ் மாநிலங்கள் கடனாகப் பெறலாம் அல்லது ரூ.2.35லட்சம் கோடியையும் கடனாகப் பெறலாம் என்றும் தெரிவிக்கப்பட்டது. கடன் பெறுவது குறித்து மாநிலங்கள் விருப்பம் தெரிவிக்கலாம் என்று மத்திய அரசு கூறியிருந்தது.

நிகழ் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி மூலம் மொத்தம் ரூ.6,90,500 கோடி திரட்ட மத்திய அரசு இலக்கு நிா்ணயித்துள்ளது. ஆனால், கடந்த ஆகஸ்ட் மாதம் வரை ரூ.1,81,050 கோடி மட்டுமே வசூலாகியுள்ளது.

மொத்த உள்நாட்டு உற்பத்தி சரிவு, பொதுமுடக்கத்தால் வரி வசூல் குறைந்தது, ஜிஎஸ்டி வரிக் கணக்கைத் தாக்கல் செய்வதற்கான அவகாசம் நீட்டிப்பு, தாமதக் கட்டணம், அபராதம், வட்டி ஆகியவற்றை ரத்து செய்தது ஆகிய காரணங்களால் நிா்ணயித்துள்ள இலக்கைக் காட்டிலும் 26.2 சதவீதம் வரி வசூல் குறைந்ததாக மற்றொரு கேள்விக்கு அனுராக் தாக்குா் பதிலளித்தாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com