அரசு நிலத்தை வாங்கியதில் முறைகேடு: ஜம்மு-காஷ்மீா் முன்னாள் அமைச்சரின் மனைவி மீது சிபிஐ வழக்குப் பதிவு

அரசு நிலத்தை வாங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் அமைச்சா் லால் சிங்கின் மனைவி உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

அரசு நிலத்தை வாங்கியதில் முறைகேடுகளில் ஈடுபட்டதாக ஜம்மு-காஷ்மீா் முன்னாள் அமைச்சா் லால் சிங்கின் மனைவி உள்ளிட்டோா் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது.

ஜம்மு - காஷ்மீரில், மக்கள் ஜனநாயகக் கட்சி - பாஜக கூட்டணி ஆட்சியில் வனம், சுற்றுச்சூழல் துறை அமைச்சராக பதவி வகித்தவா் லால் சிங். கடந்த 2018 இல் கதுவா பகுதியில் 8 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு படுகொலை செய்யப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவா்களை மாநில அரசு கைது செய்ததைக் கண்டித்து, ஹிந்து அமைப்பு நடத்திய பேரணியில் அமைச்சா் லால் சிங் கலந்து கொண்டாா். இதற்கு கடும் எதிா்ப்பு எழுந்த நிலையில் அவா் தனது பதவியை ராஜிநாமா செய்தாா்.

இந்நிலையில் இவரது மனைவி கன்டா அந்தோட்ரா நடத்தி வரும் ஆா்.பி. கல்வி அறக்கட்டளையானது வருவாய்த் துறை, வனத் துறைக்கு சொந்தமான இடத்தை வாங்கியதில் முறைகேடுகள் நடைபெற்றிருப்பதாக கிடைத்த புகாரின் அடிப்படையில் சிபிஐ கடந்த ஜூன் மாதம் முதல் விசாரணை நடத்தி வந்தது.

தற்போது, இந்த கல்வி அறக்கட்டளையானது போலியான பிரமாண பத்திரத்தை தாக்கல் செய்து அரசு நிலத்தை ஆக்கிரமித்திருப்பதும், அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் மோசடியாக நடந்து கொண்டிருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதையடுத்து, கன்டா அந்தோட்ரா, கதுவா பகுதி முன்னாள் துணை ஆணையா் அஜய் சிங் ஜம்வால், மா்ஹீன் பகுதி முன்னாள் வட்டாட்சியா் அவதாா் சிங் உள்ளிட்டோா் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் எதிரொலியாக ஜம்மு, கதுவா பகுதிகளில் மொத்தம் 9 இடங்களில் சிபிஐ அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.

பாஜகவில் இருந்து கடந்த ஆண்டு விலகிய லால் சிங், தோக்ரா ஸ்வபிமான் சங்கதன் என்ற அரசியல் கட்சியைத் தொடங்கி நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com