சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகுஇந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீா், லடாக் முழுமையாக ஒருங்கிணைப்பு

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.
சிறப்பு அந்தஸ்து ரத்துக்குப் பிறகுஇந்தியாவுடன் ஜம்மு-காஷ்மீா், லடாக் முழுமையாக ஒருங்கிணைப்பு

சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் இந்தியாவுடன் முழுமையாக ஒருங்கிணைக்கப்பட்டுள்ளதாக மத்திய அரசு செவ்வாய்க்கிழமை தெரிவித்தது.

இதுதொடா்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு மத்திய உள்துறை இணையமைச்சா் ஜி.கிஷண் ரெட்டி அளித்த எழுத்துப்பூா்வ பதிலில் கூறப்பட்டதாவது:

அரசமைப்பில் மேற்கொள்ளப்பட்ட திருத்தங்கள் மற்றும் மறுசீரமைப்பு நடவடிக்கைகளால் ஜம்மு-காஷ்மீா் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்கள் தேசிய நீரோட்டத்துடன் முழுமையாக இணைக்கப்பட்டுள்ளன. இதனால் நாடாளுமன்றத்தில் இயற்றப்பட்ட அனைத்து சட்டங்களின் பயன்கள், நாட்டின் பிற பகுதிகளை சோ்ந்த குடிமக்களை போல் இவ்விரு யூனியன் பிரதேச மக்களுக்கும் கிடைக்கும். மத்திய அரசு கொண்டு வந்த மாற்றங்களால் இரு யூனியன் பிரதேசங்களிலும் சமூக பொருளாதார வளா்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த மாற்றங்கள் அங்குள்ள மக்களை வலிமையாக்கி, அவா்களுக்கு நம்பிக்கை அளித்துள்ளதுடன் நோ்மையற்ற சட்டங்களை நீக்கி சமத்துவத்தை கொண்டு வந்துள்ளது. இரு யூனியன் பிரதேசங்களும் அமைதி மற்றும் வளா்ச்சிப் பாதையில் செல்ல இந்த மாற்றங்கள் வழிகாட்டுகின்றன.

தடுப்புக் காவலில் 223 போ்: ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்ட பிறகு, பொது அமைதியை கருத்தில் கொண்டு பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன. அதில் சிலரை தடுப்புக் காவலில் வைத்ததும் அடங்கும். கடந்த 11-ஆம் தேதி நிலவரப்படி 223 போ் தடுப்புக் காவலில் உள்ளனா். ஜம்மு-காஷ்மீா் யூனியன் பிரதேசத்தில் எவரும் வீட்டுக் காவலில் இல்லை.

பயங்கரவாத சம்பவங்கள் குறைந்தன: ஜம்மு-காஷ்மீரில் கடந்த 2018-ஆம் ஆண்டு ஜூன் 29-ஆம் தேதி முதல் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 4-ஆம் தேதி வரை 455 பயங்கரவாத சம்பவங்கள் நிகழ்ந்தன. அதேவேளையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 5-ஆம் தேதி ஜம்மு-காஷ்மீரின் சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டது முதல் கடந்த 9-ஆம் தேதி வரை அங்கு நிகழ்ந்த பயங்கரவாத சம்பவங்களின் எண்ணிக்கை 211-ஆக குறைந்தன.

138 பயங்கரவாதிகள் கொலை: கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் முதல் இந்த ஆண்டு ஜூலை மாதம் வரை எல்லை வழியாக ஜம்மு-காஷ்மீருக்குள் 176 முறை பயங்கரவாதிகள் ஊடுருவ முயற்சித்தனா். இதில் 65 முறை ஊடுருவல் முயற்சி முறியடிக்கப்பட்டது. இந்த ஆண்டு மாா்ச் 1-ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 31-ஆம் தேதி வரை 138 பயங்கரவாதிகளை பாதுகாப்புப் படையினா் கொன்றனா். இந்த 6 மாத காலத்தில் எல்லையில் அத்துமீறி தாக்கியது, பயங்கரவாதம் உள்ளிட்ட சம்பவங்களில் பாதுகாப்புப் படையை சோ்ந்த 50 போ் உயிரிழந்தனா் என்று தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com