ஜனவரியில் விடுதலையாகிறார் சசிகலா

அடுத்த ஆண்டு ஜனவரி 27- இல் சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்று கர்நாடக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
சசிகலா
சசிகலா

அடுத்த ஆண்டு ஜனவரி 27- இல் சசிகலா விடுதலை செய்யப்படலாம் என்று கர்நாடக காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
 சொத்து குவிப்பு வழக்கில், சசிகலாவுக்கு ரூ.10 கோடி அபராதத்துடன் 4 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டது. இதுதொடர்பான மேல்முறையீட்டு வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை உறுதி செய்தது.
 இதையடுத்து, 2017-ஆம் ஆண்டு பிப்ரவரி 15-ஆம் தேதி பெங்களூரு, பரப்பன அக்ரஹாராவில் உள்ள மத்திய சிறையில் சசிகலா அடைக்கப்பட்டார். கடந்த மூன்றரை ஆண்டுகளாக சிறையில் இருந்துவரும் சசிகலா, எப்போது விடுதலை செய்யப்படுவார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் வட்டாரத்தில் இருந்துவருகிறது.
 இவரது விடுதலை குறித்து அவ்வப்போது சமூகவலைத்தளங்களில் பல்வேறு தகவல்கள் வெளியாகும். 2021-ஆம் ஆண்டு மே மாதத்தில் தமிழக சட்டப்பேரவைக்கு பொதுத்தேர்தல் நடக்கவிருப்பதால், சசிகலாவின் விடுதலை முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது.
 இந்த நிலையில், பெங்களூரைச் சேர்ந்த வழக்குரைஞரும், மனித உரிமை ஆர்வலருமான டி.நரசிம்மமூர்த்தி, சசிகலாவின் விடுதலை குறித்த விவரங்களை தகவலறியும் உரிமைச்சட்டத்தின்கீழ் கேட்டிருந்தார். இதுதொடர்பாக டி.நரசிம்மமூர்த்திக்குப் பதிலளித்து மத்திய சிறையின் காவல் கண்காணிப்பாளர் ஆர்.லதா அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ள தகவல்கள் வருமாறு:-
 "சிறையில் பராமரிக்கப்படும் பதிவேடுகளின்படி, மதிப்பிற்குரிய நீதிமன்றம் விதித்துள்ள அபராதத் தொகையை செலுத்தினால், சசிகலாவின் எதிர்பார்க்கப்படும் விடுதலை, 2021-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதியாகும்.
 ஒருவேளை அபராதத்தொகையை செலுத்தத் தவறினால், 2022-ஆம் ஆண்டு பிப்ரவரி 27ஆம் தேதி விடுதலை செய்யப்படலாம். பரோல் வசதியை அவர் பயன்படுத்திக் கொண்டால், சசிகலாவின் விடுதலை செய்யப்படக்கூடிய நாள் மாற்றத்துக்கு உள்படலாம்' என குறிப்பிட்டுள்ளார்.
 தண்டனை நாள் குறைப்புக்கும் வாய்ப்பு: ரூ.10 கோடி அபராதத் தொகையை உரிய தேதிக்குள் கட்டத் தவறினால் 2021-ஆம் ஆண்டு ஜனவரி 27ஆம் தேதிக்குப் பிறகு மேலும் 13 மாதங்கள் சிறைவாசத்தை அனுபவிக்க நேரிடும். இதே வழக்கில் சசிகலாவுடன் 4 ஆண்டுகள் சிறைத் தண்டனை பெற்றுள்ள அவரது உறவினர்கள் இளவரசியும், சுதாகரனும் ரூ.10 கோடி அபராதம் செலுத்த வேண்டியுள்ளது.
 சிறைவிதிகளின்படி, சிறையில் இருக்கும் காலத்தில் நன்னடத்தைக்காக ஒவ்வொரு மாதமும் 3 நாள்கள் குறைக்கப்படும். இதுநாள் வரையில் 43 மாதங்களாக சசிகலா சிறையில் இருந்துள்ளார். அதன்படி, மொத்த சிறைத் தண்டனையில் இருந்து நன்னடத்தைக்காக 129 நாள்கள் தண்டனை குறைப்பு கிடைக்க வாய்ப்புள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
 நன்னடத்தைக்கான 129 நாள்கள் தண்டனை குறைப்பைக் கணக்கில் எடுத்துக்கொண்டால், செப்டம்பர் மாத இறுதியிலே சசிகலா விடுதலை செய்யப்பட வேண்டும் என்று சசிகலாவின் வழக்குரைஞர் என்.ராஜா செந்தூர்பாண்டியன்தெரிவித்துள்ளார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com