இந்தியப் பெருங்கடலில் உளவுபார்த்த சீன ஆய்வுக் கப்பல்: கடற்படை 

லடாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனாவுக்கு இடையே பதற்றம் உருவான போது, இந்தியப் பெருங்கடலில் சீன ஆய்வுக் கப்பல் நுழைந்ததை கடற்படையைச் சேர்ந்த போர்க்கப்பல் கண்டுபிடித்தது.
இந்தியப் பெருங்கடலில் உளவு பார்த்த சீன ஆய்வுக் கப்பல்: கடற்படை
இந்தியப் பெருங்கடலில் உளவு பார்த்த சீன ஆய்வுக் கப்பல்: கடற்படை


புது தில்லி: லடாக்கில் ஏற்பட்ட மோதலைத் தொடர்ந்து இந்தியா - சீனாவுக்கு இடையே பதற்றம் உருவானபோது, இந்தியப் பெருங்கடலில் சீன ஆய்வுக் கப்பல் நுழைந்ததை இந்திய கடற்படையைச் சேர்ந்த போர்க்கப்பல்கள் கண்டுபிடித்துள்ளன.

யுவான் வாங் வகையைச் சேர்ந்த ஆராய்ச்சிக் கப்பலானது, இந்தியப் பெருங்கடல் பகுதிக்குள் மலாக்கா வழியாக கடந்த மாதம் நுழைந்துள்ளது. அந்த கப்பலை, இந்திய கடற்படைப் போர்க்கப்பல்கள் தொடர்ந்து கண்காணித்து வந்ததாக மத்திய அரசின் தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இந்திய கடற்படையின் போர்க்கப்பல்கள் தொடர்ந்து கண்காணித்து வந்ததன் பயனாக, ஒரு சில நாள்களில் சீன ஆராய்ச்சிக் கப்பல் மீண்டும் சீனாவுக்குச் சென்றுவிட்டது.

அதேவேளை, சீனாவின் இதுபோன்ற ஆராய்ச்சிக் கப்பல்கள், அடிக்கடி இந்திய பெருங்கடல் பகுதிக்கு வந்து, இந்திய கடற்பரப்பில் நிகழும் மிக முக்கியத் தகவல்களை உளவுபார்த்துச் செல்வதாகவும் கூறப்படுகிறது.

கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், சீனாவின் ஆராய்ச்சிக் கப்பலான ஷி யான் 1, அந்தமான் - நிகோபார் தீவுப் பகுதிகளில் போர்ட் பிளேருக்கு அருகே இந்திய கடற்பரப்பில் ஆராய்ச்சியை மேற்கொண்டது, அப்பகுதியில் இந்திய கடற்படையின் சிறிய ரக விமானங்கள் நடத்திய கண்காணிப்பில் கண்டுபிடிக்கப்பட்டது.

இதுபோன்று கடற்பரப்பை ஆராய்ச்சி செய்வதற்காக என்று சீனா வைத்திருக்கும் ஆராய்ச்சிக் கப்பல்கள், இந்திய கடற்பரப்புகளில் உளவு வேலை பார்க்கவும் பயன்படுத்துவதை அந்நாடு வழக்கமாகக் கொண்டுள்ளது.

இந்திய கடற்பரப்புகளில் வெளிநாட்டில் இருந்து எந்த ஆராய்ச்சியையோ, செயல்பாடுகளையோ மேற்கொள்ள சட்டம் அனுமதி அளிக்காது என்பதால், சீன ஆராய்ச்சிக் கப்பல்களை இந்திய கடற்பரப்புகளில் இருந்து வெளியேறுமாறு இந்திய கடற்படை போர்க்கப்பல்கள் எச்சரித்து அனுப்பி வைக்கும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com