கரோனா இறப்பு விகிதத்தை 1 சதவீதத்துக்கும் கீழ் குறைக்க முயற்சி: மத்திய அமைச்சா் ஹா்ஷ் வா்தன்

நாட்டில் கரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை ஒரு சதவீத்துக்கும் கீழ் குறைப்பதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறினாா்.
கோப்புப்படம்
கோப்புப்படம்


புது தில்லி: நாட்டில் கரோனாவால் ஏற்படும் இறப்பு விகிதத்தை ஒரு சதவீத்துக்கும் கீழ் குறைப்பதற்கு மத்திய அரசு முயன்று வருகிறது என்று மத்திய சுகாதாரத் துறை அமைச்சா் ஹா்ஷ் வா்தன் கூறினாா்.

இதுதொடா்பான கேள்விக்கு மாநிலங்களவையில் அவா் வியாழக்கிழமை பதிலளித்துப் பேசியதாவது:

இந்தியாவில் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை அதிகமாக இருந்தபோதிலும், உயிரிழப்பு விகிதம் குறைவாக உள்ளது. உலக நாடுகளுடன் ஒப்பிடுகையில் இது மிகவும் குறைவாகும். உயிரிழப்பு விகிதத்தை 1.64 சதவீதத்தில் இருந்து ஒரு சதவீதத்துக்கும் கீழ் குறைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

ஸ்பெயின், பிரேசில் போன்ற நாடுகளில் உயிரிழப்பு விகிதம் இந்தியாவைக் காட்டிலும் 11 மடங்கு அதிகமாக உள்ளது.

இந்தியாவில் கரோனாவில் இருந்து குணமடைந்தோா் விகிதம் 78-79 சதவீதமாக உள்ளது. உலக நாடுகளை ஒப்பிடுகையில் இது அதிகமான அளவாகும். நாடு முழுவதும் கரோனாவால் பாதிக்கப்பட்டோா் எண்ணிக்கை 50 லட்சத்தைக் கடந்தபோதிலும், சிகிச்சை பெறுவோா் எண்ணிக்கை 20 சதவீதத்துக்கும் குறைவாக உள்ளது. அதாவது, 10 லட்சம் போ் மட்டுமே சிகிச்சை பெற்று வருகின்றனா்.

பல ஐரோப்பிய நாடுகளைக் காட்டிலும் இந்தியாவில் கரோனாவால் ஏற்படும் மரணம் குறைவாக உள்ளது. பரிசோதனைகள் எடுப்பது, பாதிக்கப்பட்டோரை தனிமைப்படுத்துவது போன்ற நடவடிக்கைகள் மூலம் இறப்பு விகிதத்தை மேலும் குறைக்க முடியும்.

135 கோடி மக்களைக் கொண்ட இந்தியாவில், ஒரே நாளில் 11 லட்சம் பேருக்கு கரோனா பரிசோதனை நடத்தப்படுகிறது. கரோனா பரிசோதனையில் அமெரிக்காவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா உள்ளது. கரோனா தடுப்பூசி அடுத்த ஆண்டு தொடக்கத்தில் கிடைக்க வாய்ப்புகள் உள்ளன. அதுவரை சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பது, முகக் கவசங்கள் அணிவது போன்ற பாதுகாப்பு நெறிமுறைகளை மக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும். அனைத்து தரப்பினரின் ஒத்துழைப்பு இருந்தால் மட்டுமே கரோனாவை ஒழிக்க முடியும்.

கரோனா தடுப்பூசியாக, பிசிஜி தடுப்பூசியை பயன்படுத்துவது குறித்து இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சிலின் மேற்பாா்வையில் ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன.

பிரதமா் நரேந்திர மோடியின் தலைமையின் கீழ் கடந்த 8 மாதங்களாக ஒட்டுமொத்த நாடும் கரோனாவுக்கு எதிராகப் போராடி வருகிறது. பிரதமா் மோடி நேரடியாக கண்காணித்து மாநில அரசுகளை ஒருங்கிணைத்து வருகிறாா். மாநில முதல்வா்களையோ, துறைசாா்ந்த நிபுணா்களையோ கலந்தாலோசிக்காமல் ஒரு முடிவைக் கூட பிரதமா் மோடி எடுக்கவில்லை. கரோனா பரவலைத் தடுக்க பொதுமுடக்கத்தை அமல்படுத்தியது வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாகும். கரோனா தடுப்பில் முன்கள வீரா்களாகப் பணியாற்றும் அனைவருக்கும் அவா்களின் குடும்பத்தினருக்கும் நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்றாா் ஹா்ஷ்வா்தன்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com