பிகார் பேரவைத் தேர்தல்: கூட்டணி மாற்றத்தால் களத்தில் மாற்றம்

பிகாரில் கடந்த பேரவைத் தேர்தல் கூட்டணி மாறியுள்ளதால், வரவிருக்கும் பேரவைத் தேர்தல் களமும் மாறியுள்ளது. 
கோப்புப்படம்
கோப்புப்படம்


பிகாரில் வரும் அக்டோபர் - நவம்பர் மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வரவுள்ள நிலையில், அரசியல் கட்சிகள் வியூகம் வகுப்பதில் மும்முரமாக உள்ளனர். கடந்த தேர்தலில் எதிரிகளாகப் போட்டியிட்ட கட்சிகள் இம்முறை கூட்டணியாக போட்டியிடுவதால், வியூகம் வகுப்பதிலும், களம் காண்பதிலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் பாஜகவும், ஐக்கிய ஜனதா தளமும் (ஜேடியு) எதிர்த்துப் போட்டியிட்டனர். ஆனால், இந்தத் தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியின் அங்கமாக பாஜகவுடன் இணைந்து களம் காண்கிறது ஜேடியு. கடந்த முறை பாஜக கூட்டணியிலிருந்த லோக் ஜனசக்தி கட்சி, இம்முறையும் பாஜக கூட்டணியிலேயே தொடர்கிறது.

ஆனால், கடந்த தேர்தலில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் அங்கம் வகித்த ராஷ்ட்ரிய லோக் சமதா கட்சி, இந்த தேர்தலில் கூட்டணியை முறித்துக்கொண்டது. வரவிருக்கும் தேர்தலில் எதிர்க்கட்சிகளின் மெகா கூட்டணியில் இணைந்துள்ளது.  

கடந்த பேரவைத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட இடதுசாரிகள் இந்தத் தேர்தலில் மெகா கூட்டணியில் அங்கம் வகிக்கின்றனர். தேர்தலில் இணைந்து போட்டியிடுவது பற்றி ராஷ்ட்ரிய ஜனதா தளம் மற்றும் (ஆர்ஜேடி) இடதுசாரிகள் இடையே பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடைபெற்றுள்ளன. 

மெகா கூட்டணி குறித்து பல்வேறு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக ஆர்ஜேடி செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். மேலும் தொகுதிப் பங்கீடு குறித்து பேசுகையில், "வெற்றிக்கு உத்தரவாதம் அளிப்பவர்கள் தேர்வு செய்யப்படுகிறார்கள்" என்றார்.

இதன்மூலம், ஆர்ஜேடி தலைமையில் மெகா கூட்டணி அமைகிறது. 

பாஜக:

பிகார் பேரவைத் தேர்தலுக்கு வியூகம் வகுக்க பாஜக தேசியத் தலைவர் ஜெ.பி. நட்டா ஏற்கெனவே பாட்னா விரைந்துவிட்டார். இதிலிருந்தே இந்தத் தேர்தலுக்கு பாஜக கொடுக்கும் முக்கியத்துவம் வெளிப்படுகிறது. பாஜக மாநிலத் தலைவர் சஞ்சய் ஜெய்ஸ்வால் தெரிவிக்கையில், "பாஜக முழு பலத்துடன் தேர்தல் களத்தில் இறங்கியுள்ளது. வளர்ச்சியை முன்னிறுத்தியே பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி போட்டியிடுகிறது" என்றார்.

கடந்த சட்டப்பேரவைத் தேர்தலில் ஜேடியு, ஆர்ஜேடி மற்றும் காங்கிரஸ் மெகா கூட்டணி அமைத்து பெரும்பான்மையுடன் ஆட்சியில் அமர்ந்தனர். பின்னர், இந்தக் கூட்டணியிலிருந்து பிரிந்த ஜேடியு பாஜகவுடன் கைகோர்த்து ஆட்சியமைத்தது. இந்த மாற்றத்தால், 2020 பேரவைத் தேர்தல் களமே மாற்றம் கண்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com