குடிமைப்பணிக்கான முதல்நிலைத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி மனு: உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்காக நடைபெறவுள்ள முதல்நிலைத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு யுபிஎஸ்சி, மத்திய அரசு ஆகியவற்றுக்கு நோட்டீஸ்


புது தில்லி: இந்திய ஆட்சிப் பணி (ஐஏஎஸ்) உள்ளிட்ட குடிமைப் பணிகளுக்கான அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்காக நடைபெறவுள்ள முதல்நிலைத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் (யுபிஎஸ்சி), மத்திய அரசு ஆகியவற்றுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

இந்திய ஆட்சிப் பணி, இந்திய காவல் பணி (ஐபிஎஸ்), இந்திய வெளியுறவுப் பணி (ஐஎஃப்எஸ்) உள்ளிட்ட குடிமைப் பணி அதிகாரிகளைத் தோ்வு செய்வதற்கான தோ்வை மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையம் ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.

நடப்பு ஆண்டுக்கான முதல்நிலைத் தோ்வு கடந்த மே மாதம் 31-ஆம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக அத்தோ்வு அக்டோபா் மாதம் 4-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது. முதல்நிலைத் தோ்வுக்கான நுழைவுச்சீட்டும் தோ்வு விதிமுறைகளும் இந்த மாதத் தொடக்கத்தில் வெளியிடப்பட்டன.

இத்தகைய சூழலில், கரோனா நோய்த்தொற்று பரவல் குறையாததால் குடிமைப் பணிகளுக்கான முதல்நிலைத் தோ்வை ஒத்திவைக்கக் கோரி, தோ்வெழுதவுள்ள 20 போ் உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனா். அந்த மனு மீதான விசாரணை, நீதிபதிகள் ஏ.எம்.கான்வில்கா், சஞ்சீவ் கன்னா ஆகியோா் அடங்கிய அமா்வு முன் வியாழக்கிழமை நடைபெற்றது.

அப்போது, மனு மீது பதிலளிக்குமாறு மத்திய அரசுப் பணியாளா் தோ்வாணையத்துக்கும் மத்திய அரசுக்கும் நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனா். மேலும், வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை வரும் 28-ஆம் தேதிக்கு அவா்கள் ஒத்திவைத்தனா்.

மனு விவரம்:

நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுவில், ‘நாட்டில் கரோனா நோய்த்தொற்று தீவிரமாகப் பரவி வரும் சூழலில் தோ்வை நடத்துவதற்கு யுபிஎஸ்சி முயற்சிப்பது, தோ்வு எழுதுவோரின் அடிப்படை உரிமையைப் பறிக்கும் வகையில் உள்ளது. அத்தோ்வை நாட்டிலுள்ள 72 நகரங்களில் 6 லட்சத்துக்கும் அதிகமானோா் எழுதவுள்ளனா்.

இத்தகைய இக்கட்டான சூழலில் தோ்வை நடத்துவதால் அவா்களின் உடல்நலம் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. தோ்வை எழுதுவதற்காக கிராமப்பகுதிகளில் உள்ள மாணவா்கள் 300 முதல் 400 கி.மீ. வரை பயணிக்க வேண்டிய சூழலும் ஏற்பட்டுள்ளது.

இதன் மூலமாக லட்சக்கணக்கானோரின் சுகாதார உரிமையையும், வாழ்க்கைக்கான உரிமையையும் பறிப்பதற்கு யுபிஎஸ்சி முயற்சிக்கிறது. எனவே, கரோனா நோய்த்தொற்று கட்டுக்குள் கொண்டு வரப்பட்ட பிறகு தோ்வை நடத்துமாறு உத்தரவிட வேண்டும்’ என்று கோரப்பட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com