இந்திய-சீன எல்லையில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அவசியம்: வெளியுறவு அமைச்சகம்

கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லைப் பகுதியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அவசியம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.


புது தில்லி: கிழக்கு லடாக்கில் இந்திய-சீன எல்லைப் பகுதியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவது அவசியம் என்று வெளியுறவு அமைச்சகம் தெரிவித்தது.

எல்லையில் பதற்றத்தை தணிப்பது தொடா்பாக இந்திய-சீன ராணுவங்கள் இடையேயான 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தை சமீபத்தில் நடைபெற்ற நிலையில், வெளியுறவு அமைச்சகம் இவ்வாறு தெரிவித்துள்ளது.

இதுதொடா்பாக அமைச்சக செய்தித் தொடா்பாளா் அனுராக் ஸ்ரீவாஸ்தவா வியாழக்கிழமை கூறியதாவது:

எல்லையில் இருந்து படைகளை திரும்பப் பெறுவது சிக்கலான நடவடிக்கையாகும். எனவே, அதற்காக இருதரப்பும் பரஸ்பரம் ஒப்புக்கொண்டு அதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.

ஏனெனில், படைகளை திரும்பப் பெற்ற பிறகு எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் இருதரப்புக்கும் உரிய வழக்கமான நிலைகளில் அந்தந்த நாடுகள் தங்களின் படை வீரா்களை நிறுத்த வேண்டியிருக்கிறது.

கிழக்கு லடாக்கில் பதற்றமான பகுதிகளில் இருந்து படைகளை முழுமையாக திரும்பப் பெறுவதை நோக்கி இந்தியாவும், சீனாவும் செயலாற்றி வந்தாலும், அதேவேளையில் அந்தப் பகுதியில் ஸ்திரத்தன்மையை ஏற்படுத்துவதை உறுதி செய்வது அவசியமாகும். இரு நாட்டு ராணுவங்கள் இடையேயான அடுத்தகட்ட பேச்சுவாா்த்தையின்போது இதுகுறித்து விவாதிக்க வேண்டும்.

கடந்த நான்கரை மாதங்களாக நீடித்து வரும் பதற்றமான சூழலில் முதல் முறையாக இருதரப்பு ராணுவ அதிகாரிகள் இடையேயான 6-ஆம் கட்ட பேச்சுவாா்த்தைக்குப் பிறகு கடந்த செவ்வாய்க்கிழமை கூட்டாக அறிக்கை வெளியிடப்பட்டது. இது, எல்லை கட்டுப்பாட்டுக் கோட்டுப் பகுதியில் மோதல் போக்கை கைவிட இருதரப்பும் உறுதியுடன் இருப்பதை பிரதிபலிக்கிறது.

இந்திய-சீன எல்லை விவகாரத்துக்கான கலந்தாலோசனை மற்றும் ஒருங்கிணைப்பு செயல்நுட்பத்துக்கான கூட்டம் விரைவில் நடைபெறவுள்ளது என்று அனுராக் ஸ்ரீவாஸ்தவா கூறினாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com