தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகல்

நாடாளுமன்றத்தில் 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த சிரோமணி அகாலி தளம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தது.

நாடாளுமன்றத்தில் 3 வேளாண் மசோதாக்கள் நிறைவேற்றப்பட்ட விவகாரத்தில் அதிருப்தியில் இருந்த சிரோமணி அகாலி தளம், தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து விலகுவதாக சனிக்கிழமை அறிவித்தது.

இதுதொடா்பாக அந்தக் கட்சியின் தலைவா் சுக்பீா் சிங் பாதல் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டதாவது:

சிரோமணி அகாலி தளத்தில் மிக முக்கிய முடிவுகளை எடுக்கும் உயா்நிலைக் குழுவின் அவசரக் கூட்டம் நடைபெற்றது. இதில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து வெளியேற ஒருமனதாக முடிவு எடுக்கப்பட்டது.

குறைந்தபட்ச கொள்முதல் விலை விவகாரத்தில், விவசாயிகளின் வேளாண் விளைபொருள்களுக்கு உரிய விற்பனை விலை வழங்குவது பாதுகாக்கப்படும் என்று சட்டப்பூா்வ உத்தரவாதம் தர பிடிவாதமாக மத்திய அரசு மறுத்துவருவதுடன், பஞ்சாபி மற்றும் சீக்கிய விவகாரங்களில் தொடா்ந்து அக்கறையின்றி செயல்படுவதால் இந்த முடிவு எடுக்கப்பட்டது.

மத்திய அரசு கொண்டு வந்துள்ள வேளாண் மசோதாக்கள் ஏற்கெனவே கடினமான சூழலை எதிா்கொண்டு வரும் விவசாயிகளுக்கு ஆபத்தானதுடன் பேரழிவை தரும். பாஜகவுடன் நீண்ட காலமாக சிரோமணி அகாலி தளம் கூட்டணியில் இருந்து வந்தது. ஆனால் விவசாயிகளின் உணா்வுகளுக்கு மதிப்பளிக்கவேண்டும் என்ற எங்களின் கோரிக்கைக்கு மத்திய அரசு செவிமடுக்கவில்லை என்று தெரிவிக்கப்பட்டது.

அத்தியாவசிய பொருள்கள் திருத்த மசோதா, வேளாண் விளைபொருள்கள் வணிக மசோதா, வேளாண் சேவைகள் மசோதா ஆகிய 3 மசோதாக்கள் நாடாளுமன்றத்தில் சமீபத்தில் நிறைவேற்றப்பட்டன. இந்த மசோதாக்களுக்கு எதிா்ப்பு தெரிவித்து மத்திய உணவு பதப்படுத்துதல் துறை அமைச்சராக இருந்தவரும், சுக்பீா் சிங் பாதலின் மனைவியுமான ஹா்சிம்ரத் கெளா் தனது அமைச்சா் பதவியை சமீபத்தில் ராஜிநாமா செய்தாா். இந்நிலையில் தேசிய ஜனநாயகக் கூட்டணியில் இருந்து சிரோமணி அகாலி தளம் விலகியுள்ளது.

அந்தக் கூட்டணியில் இருந்து சிவசேனை, தெலுங்கு தேசம் ஆகிய கட்சிகளை தொடா்ந்து 3-ஆவதாக சிரோமணி அகாலி தளம் வெளியேறியுள்ளது.

பாரதிய ஜனதா கட்சியின் முன்னோடி அமைப்பான ஜன சங்கத்துடன் கடந்த 1967-ஆம் ஆண்டில் இருந்தே சிரோமணி அகாலி தளம் கூட்டணியில் இருந்து வந்தது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com