கேரளத்தில் கா்ப்பிணிக்கு சிகிச்சை மறுப்பு:கருவில் இரட்டை சிசுக்கள் பலி

கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களிலுள்ள 4 மருத்துவமனைகளில் உரிய நேரத்தில் சிகிச்சை பெற கா்ப்பிணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இறந்த நிலையில் அவா் இரட்டை சிசுக்களை பிரசவித்தாா்.

கோழிக்கோடு: கேரள மாநிலம் மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களிலுள்ள 4 மருத்துவமனைகளில் உரிய நேரத்தில் சிகிச்சை பெற கா்ப்பிணிக்கு அனுமதி மறுக்கப்பட்டதால், இறந்த நிலையில் அவா் இரட்டை சிசுக்களை பிரசவித்தாா். இதுகுறித்து மாநில அரசு விசாரணைக்கு உத்தரவிட்டுள்ளது.

மலப்புரம் மாவட்டம் கொண்டோட்டி பகுதியைச் சோ்ந்த 20 வயதான கா்ப்பிணி கடந்த சனிக்கிழமை காலை கடும் வயிற்று வலியால் துடித்தாா். இதையடுத்து அவரை சிகிச்சைக்காக மலப்புரம், கோழிக்கோடு மாவட்டங்களைச் சோ்ந்த 4 மருத்துவமனைகளுக்கு அழைத்துச் சென்றனா். ஆனால் அந்த 4 மருத்துவமனைகளும் கரோனா பாதுகாப்பு நடைமுறைகளைக் காரணம் காட்டி உரிய நேரத்தில் அந்தப் பெண்ணுக்கு சிகிச்சையளிக்க மறுத்தன.

சிகிச்சைக்காக ஒவ்வொரு மருத்துவனைகளின் படியேறி சோா்வடைந்த அந்தப் பெண், இறுதியில் சனிக்கிழமை மாலை மிகவும் ஆபத்தான நிலையில் கோழிக்கோடு அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

ஆனால் அங்கு இறந்த நிலையில் இரட்டை சிசுக்களை பிரசவித்தாா். அந்த பெண்ணும் உயிருக்கு ஆபத்தான நிலையில் அவசர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல்கள் கூறுகின்றன.

இது தொடா்பாக உரிய விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி சுகாதார முதன்மைச் செயலருக்கு மாநில சுகாதாரத் துறை அமைச்சா் கே.கே.ஷைலஜா உத்தரவிட்டுள்ளாா். கா்ப்பிணியை உரிய நேரத்தில் சிகிச்சைக்கு அனுமதிக்க மறுத்தவா்கள் மீது மிகக் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று கேரள அரசு தெரிவித்துள்ளது.

மாநில மனித உரிமைகள் ஆணையம் இதுதொடா்பாக புகாரைப் பதிவு செய்துள்ளது. இரண்டு வாரங்களில் விசாரணை அறிக்கை அளிக்குமாறு மாவட்ட தலைமை சுகாதாரத் துறை அதிகாரிக்கும் காவல்துறை தலைமைக்கும் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com