குஜராத் கலவர வழக்கு: மோடிக்கு எதிரான மனு மீதான விசாரணை 2 வாரங்களுக்கு ஒத்திவைப்பு

குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடிக்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. 
உச்ச நீதிமன்றம்
உச்ச நீதிமன்றம்

குஜராத் கலவர வழக்கில் நரேந்திர மோடிக்கு எதிராகத் தாக்கல்செய்யப்பட்ட மனு மீதான விசாரணையை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.
 குஜராத்தில் 2002 பிப். 27-ஆம் தேதி கோத்ரா பகுதியில் சபர்மதி விரைவு ரயிலுக்கு தீவைக்கப்பட்டதில் 59 பேர் உயிரிழந்தனர். அதைத் தொடர்ந்து, மாநிலத்தின் பல்வேறு பகுதிகளிலும் வகுப்புவாதக் கலவரங்கள் வெடித்தன. கலவரத்தைத் தூண்டியதாகவும், அதைக் கட்டுக்குள் கொண்டுவர நடவடிக்கை எடுக்கவில்லை என்றும் அப்போது முதல்வராக இருந்த நரேந்திர மோடி மீது குற்றஞ்சாட்டப்பட்டது. கலவரம் தொடர்பான வழக்கில் அவரது பெயரும் சேர்க்கப்பட்டது.
 ஆனால், இந்த விவகாரத்தில் அவருக்கு எதிராக எவ்வித உறுதியான ஆதாரங்களும் இல்லை எனக் கூறி உச்சநீதிமன்றத்தின் சிறப்பு விசாரணைக் குழு, 2012-ஆம் ஆண்டு வழக்கிலிருந்து அவரை விடுவித்தது. இதை எதிர்த்து, குஜராத் கலவரத்தில் உயிரிழந்த ஏசன் ஜாஃப்ரி என்பவரின் மனைவி ஜகியா ஜாஃப்ரி, மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். அம்மனுவை நீதிமன்றம் நிராகரித்தது.
 அதையடுத்து, அவர் குஜராத் உயர்நீதிமன்றத்தில் செய்த மேல்முறையீட்டு மனுவும் தள்ளுபடியானது. பின்னர், அவர் உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். கீழமை நீதிமன்றமும், உயர்நீதிமன்றமும் பல்வேறு ஆதாரங்களைக் கருத்தில் கொள்ளாமல் மனுக்களைத் தள்ளுபடி செய்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார்.
 அந்த மனு, கடந்த மார்ச் 16-ஆம் தேதி உச்சநீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. ஜகியா ஜாஃப்ரி தரப்பில் ஆஜரான மூத்த வழக்குரைஞர் கபில் சிபல், வழக்குரைஞர்கள் பலர் மராத்தா பிரிவினருக்கு இடஒதுக்கீடு அளிப்பது தொடர்பான வழக்கில் ஆஜராக வேண்டியுள்ளதால், இந்த வழக்கின் விசாரணையை ஏப்ரல் மாதத்துக்கு ஒத்திவைக்கக் கோரி மனு அளித்தார். இதற்கு குஜராத் அரசு சார்பில் ஆஜரான சொலிசிட்டர் ஜெனரல் துஷார் மேத்தா எதிர்ப்பு தெரிவித்தார். இரு தரப்பு வாதங்களையும் நீதிபதிகள் கேட்டு, விசாரணையை ஏப்ரல் 13-க்கு ஒத்திவைத்தனர். அப்போது, விசாரணை மேலும் ஒத்திவைக்கப்படாது என அவர்கள் தெரிவித்தனர்.
 அதன்படி, இந்த வழக்கு நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தலைமையிலான அமர்வு முன் செவ்வாய்க்கிழமை (ஏப். 13) விசாரணைக்கு வந்தது. அப்போது, "விசாரணையை ஒத்திவைக்கக் கோரி மனுதாரர் கடிதம் அனுப்பியுள்ளதால், இந்த வழக்கு 2 வாரங்களுக்குப் பிறகு பட்டியலிடப்படும்' என நீதிபதி ஏ.எம்.கான்வில்கர் தெரிவித்து, வழக்கை 2 வாரங்களுக்கு ஒத்திவைத்து உத்தரவிட்டார்.
 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com