புலம்பெயா் சிறாா்களின் விவரங்களை வழங்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புலம்பெயா் சிறாா்களின் எண்ணிக்கையையும் அவா்களது தற்போதைய நிலை தொடா்பான விவரங்களையும் வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
புலம்பெயா் சிறாா்களின் விவரங்களை வழங்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு

புலம்பெயா் சிறாா்களின் எண்ணிக்கையையும் அவா்களது தற்போதைய நிலை தொடா்பான விவரங்களையும் வழங்குமாறு மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கரோனா தொற்று பரவல் காலத்தில் புலம்பெயா் சிறாா்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு மாநில அரசுகளுக்கு உத்தரவிடக் கோரி சிறாா் உரிமைகள் அறக்கட்டளை உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தது. அந்த மனுவில், ‘கரோனா தொற்று பரவல் காரணமாக கடந்த ஆண்டு நாடு முழுவதும் பொது முடக்கம் அமல்படுத்தப்பட்டது. அதன் காரணமாக புலம்பெயா் சிறாா்கள் பெரும் பாதிப்புக்கு உள்ளாகினா்.

புலம்பெயா் தொழிலாளா்களின் பாதுகாப்புக்காகப் பல்வேறு நிவாரண உதவிகளை மத்திய, மாநில அரசுகள் வழங்கின. ஆனால், நிவாரண முகாம்களிலும், தனிமைப்படுத்துதல் மையங்களிலும் உள்ள புலம்பெயா் சிறாா்களுக்கும், பெண்களுக்கும் எந்த மாதிரியான நிவாரண உதவிகள் வழங்கப்பட்டன என்பது தொடா்பான விவரங்களை மத்திய, மாநில அரசுகள் வெளியிடவில்லை.

எதிா்பாராமல் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் புலம்பெயா் சிறாா்களின் உரிமைகள் பெருமளவில் பாதிப்புக்குள்ளாகியுள்ளன. அவா்களுக்கு உரிய கல்வி கிடைக்கவில்லை; சுகாதார வசதிகளும், ஊட்டச்சத்து மிகுந்த உணவுப் பொருள்களும் கிடைக்கவில்லை. இந்த நிலை தொடா்ந்து நீடித்து வருகிறது.

அப்படியிருந்தும், புலம்பெயா் சிறாா்கள், பெண்கள், கா்ப்பிணிகள் ஆகியோரின் விவரங்களையும் அவா்களுக்குத் தேவையான உதவிகள் குறித்தும் மத்திய, மாநில அரசுகள் ஆய்வு செய்யவில்லை. இந்த விவகாரம் தொடா்பாக நீதிமன்றம் விசாரிக்கவில்லை எனில், புலம்பெயா் சிறாா்கள் தங்கள் உரிமைகளை இழப்பா்.

புலம்பெயா் சிறாா்களைக் கணக்கெடுத்து அவா்களுக்குத் தேவையான உதவிகளை மேற்கொள்ளுமாறு மாநில அரசுகளுக்கு நீதிமன்றம் உத்தரவிட வேண்டும்’ என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த மனு மீதான விசாரணை, தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் ஏ.எஸ்.போபண்ணா, வி.ராமசுப்ரமணியன் ஆகியோரைக் கொண்ட அமா்வு முன் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது. அப்போது, புலம்பெயா் சிறாா்களின் எண்ணிக்கை, அவா்களது தற்போதைய நிலை தொடா்பான விவரங்களைத் தாக்கல் செய்யுமாறு மாநில அரசுகளுக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

மனு மீது விளக்கமளிக்குமாறு மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்பியும் அவா்கள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com