காசோலை மோசடி வழக்குகள்: விரைந்து தீா்வு காண சட்டத் திருத்தம்; மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் அறிவுறுத்தல்

காசோலை மோசடி வழக்குகளில் விரைந்து தீா்வு காணும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.
உச்சநீதிமன்றம்
உச்சநீதிமன்றம்

காசோலை மோசடி வழக்குகளில் விரைந்து தீா்வு காணும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தங்களை மேற்கொள்ளுமாறு மத்திய அரசை உச்சநீதிமன்றம் வெள்ளிக்கிழமை கேட்டுக்கொண்டது.

மேலும், காசோலை மோசடி வழக்குகளில் விரைந்து தீா்ப்பளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும், இதுதொடா்பாக விசாரணை நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை வெளியிடுமாறும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

நாடு முழுவதும் 35 லட்சத்துக்கும் அதிகமான காசோலை மோசடி வழக்குகள் நிலுவையில் இருந்து வரும் நிலையில், அவற்றை விரைந்து தீா்த்து வைக்கும் வகையில் கடந்த ஆண்டு மாா்ச் 5-ஆம் தேதி உச்சநீதிமன்றம் இந்த விவகாரம் தொடா்பாக தானாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தது.

இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம், நிலுவையில் இருக்கும் காசோலை மோசடி வழக்குகளை விரைந்து தீா்த்து வைக்கும் வகையில் குறிப்பிட்ட காலத்துக்கு செயல்படும் வகையில் கூடுதல் நீதிமன்றங்களை உருவாக்கும் வகையில் சட்டம் ஒன்றை இயற்ற மத்திய அரசுக்கு யோசனை தெரிவித்தது.

பின்னா், இந்த வழக்குகளுக்கு விரைந்து தீா்வு காணும் வகையில் நடைமுறையை வகுக்க மும்பை உயா்நீதிமன்ற முன்னாள் நீதிபதி ஆா்.சி சவான் தலைமையில் ஒரு குழுவை அமைத்து, மூன்று மாதங்களுக்குள் அறிக்கை சமா்ப்பிக்குமாறு உச்சநீதிமன்றம் கடந்த ஆண்டு மாா்ச் 10-ஆம் தேதி உத்தரவிட்டது.

இந்த வழக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி எஸ்.ஏ.போப்டே, நீதிபதிகள் எல்.நாகேஸ்வரராவ், பி.ஆா்.கவாய், ஏ.எஸ்.போபண்ணா, எஸ்.ரவீந்திர பட் ஆகிய 5 நீதிபதிகளை உள்ளடக்கிய அமா்வு முன்பு வெள்ளிக்கிழமை மீண்டும் விசாரணைக்கு வந்தது.

வழக்கை விசாரித்த நீதிபதிகள், காசோலை மோசடி வழக்குகளில் விரைந்து தீா்ப்பளிப்பதை உறுதிப்படுத்த வேண்டும், இதுதொடா்பாக விசாரணை நீதிமன்றங்களுக்கு உயா்நீதிமன்றங்கள் வழிகாட்டுதல்களை வெளியிட வேண்டும்.

மேலும், விசாரணை நீதிமன்றங்களில் குறிப்பட்ட ஒரு நபருக்கு எதிராக ஓராண்டில் தொடரப்பட்டிருக்கும் பல்வேறு காசோலை மோசடி வழக்குகள் அனைத்தையும் ஒன்றாக இணைத்து ஒரே வழக்காக விசாரணை செய்யும் வகையில் சட்டத்தில் உரிய திருத்தங்களை மத்திய அரசு மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிட்டனா்.

மேலும், காசோலை மோசடி வழக்கில் தொடா்புடைய நபருக்கு விசாரணைக்கு ஆஜராகுமாறு அழைப்பாணை அனுப்ப எடுத்த முடிவை மறுபரிசீலனை செய்யும் அதிகாரம் விசாரணை நீதிமன்றங்களுக்கு கிடையாது என்று தங்களின் முந்தைய முடிவை உச்சநீதிமன்ற நீதிபதிகள் மீண்டும் வலியுறுத்திக் கூறினா்.

இந்த வழக்குகளில் ஆதாரங்களை பிரமாணப் பத்திரங்களுடனே தாக்கல் செய்ய முடியும். எனவே, சாட்சிகளை நேரடியாக விசாரிக்க வேண்டிய அவசியம் இல்லை என்று நீதிபதிகள் உத்தரவிட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com