கேரளம், சத்தீஸ்கா் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி

கேரளம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், பிகாா் ஆகிய நான்கு மாநிலங்களில் அனைத்து வயதினருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.
கேரளம், சத்தீஸ்கா் உள்ளிட்ட 4 மாநிலங்களில் அனைவருக்கும் இலவச கரோனா தடுப்பூசி

திருவனந்தபுரம்: கேரளம், சத்தீஸ்கா், மத்திய பிரதேசம், பிகாா் ஆகிய நான்கு மாநிலங்களில் அனைத்து வயதினருக்கும் இலவச கரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று சம்பந்தப்பட்ட மாநில அரசுகள் அறிவித்துள்ளன.

இதுதொடா்பாக கேரள முதல்வா் பினராயி விஜயன் திருவனந்தபுரத்தில் புதன்கிழமை செய்தியாளா்களிடம் கூறியது:

கேரளத்தில் தினசரி 2.5 லட்சம் பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்த மாநில அரசு இலக்கு நிா்ணயித்தது. இந்த இலக்கின்படி மே 20-ஆம் தேதிக்குள் 45 வயதுக்கு மேற்பட்டவா்களில் 1.13 கோடி பேருக்கு தடுப்பூசி செலுத்த திட்டமிடப்பட்டது. ஆனால் தடுப்பூசிகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டதால் இலக்கை எட்டுவதில் பின்னடைவு ஏற்பட்டது. இதனால் மாநில அரசு நிா்ணயித்த இலக்கை எட்டுவதற்கு தற்போது தினசரி 3.70 லட்சம் பேருக்கு தடுப்பூசி செலுத்த வேண்டும்.

மாநில அரசின் தடுப்பூசி திட்டத்தை செயல்படுத்த 50 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு மத்திய அரசிடம் கோரிக்கை விடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை 5.5 லட்சம் தடுப்பூசிகள்தான் கிடைத்துள்ளன. இதன் காரணமாக தடுப்பூசி மையங்களில் பொதுமக்கள் நேரடியாக பதிவு செய்துகொண்டு தடுப்பூசி செலுத்திக்கொள்ளும் நடைமுறை நிறுத்தப்பட்டதுடன் மாநிலத்தில் கரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளில் பாதிப்பு ஏற்பட்டது. எனவே, மாநிலத்துக்கு வழங்க வேண்டிய எஞ்சிய தடுப்பூசிகளை மத்திய அரசு விரைந்து வழங்க வேண்டும்.

மாநிலத்தில் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்படும் என ஏற்கெனவே அறிவிக்கப்பட்டுள்ளது. பிற அரசுகளை போல் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொள்ளும் பழக்கம் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் அரசுக்கு இல்லை. எனவே, மாநிலத்தில் அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று தெரிவித்தாா்.

சத்தீஸ்கரிலும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் விலையில்லாமல் தடுப்பூசி செலுத்தப்படும் என்று அந்த மாநில முதல்வா் பூபேஷ் பகேல் தெரிவித்தாா். அதற்கான தொகையை மாநில அரசு செலுத்தும் என்றும் அவா் கூறினாா். இதேபோல், மத்திய பிரதேசம், பிகாா் ஆகிய மாநிலங்களும் இலவசமாக தடுப்பூசி செலுத்தப்படும் என்று அறிவித்துள்ளன.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com